இதயம்

"நண்பர் முகம்மது சர்பான் அவர்களது எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பக்கத்தில் அவரது எண்ண விதையில் பூத்தது"



காதல் நோயில் விழுந்த பெண்ணொருத்தி
காளையவன் வருவானென்று தன்னை வருத்தி
தாய்தந்தை மொழிகள் மனதைக் குத்தி
தாங்காது துயரத்தில் தூங்காது தவிக்கிறாள்......


தாய்தந்தை இல்லாது வளர்ந்து வந்தவன்...
தாயின் பாசத்தை காதலியிடம் கண்டவன்...
தான்கொண்ட காதலை அவளிடம் சொல்லி
தாய் நாட்டைக் காத்திடச் சென்றான்......


பால்மனம் மாறாத பட்டாம் பூச்சிகள்
பாசத்தில் ஒன்றை யொன்று விஞ்சிடும்...
பாதையைப் பார்க்காது இவளிருந்தது மில்லை...
பாவையை அவன் நினைக்காத நாளுமில்லை......


ஈராண்டுகள் கழிந்தது இன்னுமவன் வரவில்லை...
ஈட்டி முனைகளாய்ச் சோகங்கள் தாக்கியது...
ஈர் விழிகளில் கண்ணீர் பெருகியது...
ஈருயிரில் ஒன்றை நினைத்து உருகியது......


கள்வன் நாட்டின் கொடியைத் தோளில்சுற்றி
கள்ளி யிவளைக் கட்டித் தழுவிட
கரத்தால் கண்களின் துளிகளைத் துடைத்திடவும்
கனவொன்றை அதிகாலைப் பொழுதில் கண்டாள்......


கேள்வி கணைகள் நெஞ்சைத் துளைக்க
கேட்கும் கேள்விகள் இரணங்களாய் முளைக்க
வேள்வியில் விழுந்து எழுந்தவளாய் திகைத்தாள்...
வேதனையில் அவனைத் தேடி விரைந்தாள்......


முகில்கள் கருமை நிறத்திற்கு மாறிட
முத்து முத்தாய் விழும் பனித்துளி
முகத்தில் முத்தமிட்டு கீழேச் சிதறிட
முகாம் இருக்கு மிடத்தைக் கேட்டறிந்தாள்......


காதலன் முகம் காணும் ஆவலில்
காஷ்மீர் எல்லைப் பகுதியை அடைந்தாள்...
காவல் அதிகாரியிடம் பெயர்ச்சொல்லி விசாரிக்க
காதலன் எழுதிய கடிதமொன்றைத் தந்தார்......


நெஞ்சில் பாய்ந்த தோட்டாவால் இறந்தேன்...
நெருங்கிப் பார்த்தவள் நொறுங்கிப் போனாள்...
பவள விழிகளில் இரத்தம் சுரந்தாள்...
படிக்கும் போதே பாதி இறந்தாள்......


உடலின் உறுப்புகளைத் தானம் கொடுத்தேன்...
உள்ளத்தின் சுவர்களில் உன்னைச் சுமப்பதால்
உதிரம் சொட்டத் துடிக்குமென் இதயத்தை
உன்னிடம் கொடுக்கிறேனென்று உயிலை முடித்தான்......


உதிரம் வழியும் இதயத்தைத் தந்திட
உள்ளங்கை ஏந்தி பெற்றுக் கொண்டதும்
உள்துடிக்கும் இதயம் நின்று போனாள்...
உதிரங்க ளெல்லாம் உறைந்துப் போனாள்......


செல்லாத உசுரை நெஞ்சுக்குள் புதைக்கிறாள்...
பொல்லாத விதியை நினைத்து வதைகிறாள்...
கொல்லாத தீயில் வெந்து துடிக்கிறாள்...
இல்லாத தீவில் தனித்து நிற்கிறாள்.......


பூமியின் மீது நிழலாய் விரிகின்றாள்...
பூவிழிகள் திறந்து வானத்தைப் பார்க்கின்றாள்...
பூமகள் காதல் உதிர்ந்து சருகானதே...
பூஞ்சோலை பாலையென கோலம் பூணுதே......


வழிகள் தேடும் வாழ்க்கைப் பயணத்தில்
அழிவுகள் வந்து சூழ்ந்து கொண்டதே...
விழிகள் எழுதும் காதல் காவியம்
மொழிகள் இல்லாது ஊமையாய் முடிந்ததே......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Nov-16, 11:42 am)
பார்வை : 526

மேலே