------------ நிலவும் நானும் ------------
பால்வீதியில் உலாவரும் வெண்ணிலவே
பால்மனங்கள் போற்றிடும் பெண்ணழகே !
சாட்சியாக நீயிருப்பாய் நிகழ்வுகளுக்கும்
காட்சியாக நின்றிடுவாய் நினைவுகளுக்கும் !
தேய்பிறை காலத்தில் வருந்திடுவேன்
வளர்பிறை நேரத்தில் மகிழ்ந்திடுவேன்
உன்னை நினைத்தே வடித்திடுவேன்
உள்ளத்து உணர்வுகளை எழுதிடுவேன் !
நிலவொளியே உதவுகிறாய் உன்மூலம்
குளிரொளியே காண்கிறேன் காதலியை !
இரவுகளில் இதயத்தை வருடுவதால்
இமைமூடி இன்பத்தை அடைகிறேன் !
நிலவோடு உரையாடும் பொழுதெனக்கு
அமைதியும் அடைகின்றது மனமெனக்கு !
வெளிப்படுத்த இயலாத உண்மைகளை
அழகுநிலவே உன்னிடம் பகிர்கின்றேன் !
குழப்பமான கணங்களில் உனைநோக்கி
சிலநொடிகள் கண்டாலே மறைந்திடும் !
அமைதிதேடி வரும்பொழுது உனைநாடி
அங்கிருந்தே தாலாட்டும் பாடிடுவாய் !
நிலவின்றி வானமில்லை அறிந்தவொன்று
நீயின்றி நானில்லை நாமறிந்தவொன்று !
கருப்பொருள் ஆனாலும் கவிதைகளுக்கு
மாறாத அழகுனக்கும் நிலையானதே !
பழனி குமார்

