ஏதோ ஒரு பாட்டு

ஏதோ ஒரு பாட்டு
****** *** ********
வெற்றிலைப் பழம் சீனீயோடு
குழாய் வழிப் பாட்டில் குதூகலித்தது
பெரிய மனுஷியான செல்வி அக்காவின் வீடு
பூ பூக்கும் மாசம் தை மாசம் என்று..
*
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
அஞ்சாம் வகுப்பு படிக்கும் போதே
அடி பிறழாமல் பாடிக் கொண்டிருப்பேன்
பீடி சுற்றும் ராதைகளுக்காக..
*
கோடையில் சென்ற குளிர் சுற்றுலாவை
ஞாபக சாரலாய் இன்றும் தெளிக்கிறது
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா...
*
நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் தெரியுமா என்று
மாரி அண்ணன் கல்யாணத்தில்
இரண்டு நாட்கள் இடைவிடாமல் பாடி
திக்கிய கேஸட்டின் புண்ணியத்தில்
பாடுவதை நிறுத்திக் கொண்டனர்
பொன்னுமணியும் சிந்தாமணியும்..
*
தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே என்று
இரவைத் தாலாட்ட
இளையராஜாவைக் கூட்டி வந்தது
ஆல் இண்டிய ரேடியோவின்
நேயர் விருப்ப பாடலொன்று..
*
நோட்டு புத்தகத்தின் நடுப்பக்கம் கிழித்து
பிடித்த பாடலை பதிவு செய்ய
வரிசைக்கட்டி எழுதிய பாடல்களில்
பிள்ளையார் சுழியாகியிருந்தது
காதலின் தீபம் ஒன்று...
*
அலைவரிசை மாற்ற முடியாத
ஒலியும் ஒளியும் காலத்தில்
கவர்ச்சி பாடலென்று கவனத்தை திசை திருப்ப
கதைப்பேசி விளையாடினர் மாமன்கள்
காதில் ஒலித்துக் கொண்டிருந்தது
நேத்து ராத்திரி யம்மா...
*
இப்படியாக
ஏதோ ஒரு பாடல்
ஏதோ ஒரு ஞாபகத்தை எனக்குள் மீட்டினாலும்
ஓரே ஒரு பாடல் மட்டும் உயிர்க்கொன்று போகிறது
ஆமாம்
காதல் காலம் முழுவதும்
காதில் அவள் பாடிய
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்...

எழுதியவர் : மணி அமரன் (1-Dec-16, 6:35 am)
Tanglish : yetho oru paattu
பார்வை : 291

மேலே