வறுமையில் வசந்தம்
நிலவின் ஒளிதான் இரவின் வெளிச்சம்...
நிம்மதியின் ஒளிதான் வாழ்வின் வெளிச்சம்...
நிரந்தர மில்லாத இந்த உலகில்
நிகழும் மாற்றம் மட்டும் நிலையானது......
ஒருவேளை உணவிற்கு வழிகள் இல்லை...
ஒருநொடியும் உழைத்திடாது இருந்தது மில்லை...
ஒளிதரும் சூரியன் மறையும் பொழுதில்
ஒன்றாய்ச் சிரிக்கும் முகத்தில் கோடிமுல்லை......
பணம் கையில் இல்லை யென்றாலும்
கணநேரமும் அதைப்பற்றிய கவலையு மில்லை...
மணம் வீசிட மலர்களும் மறுப்பதில்லை...
குணத்தில் உயர்ந்த கோபுரத்தின் எல்லை......
கண்கள் வறுமையில் தினம் அழுதாலும்
கனவுகள் என்றுமதில் கரைந்தது மில்லை...
கவலைகள் மனதைத் தொற்றிக் கொண்டாலும்
கன்னத்தில் குழிவிழும் குழந்தையால் தொலைகிறது......
சோகம் பருகும் வாழ்வின் பாதையில்
சோர்ந்திடாது மலரும் வறுமைப் பூக்கள்...
சோகமே வசந்தமாய் வாழும் வீட்டில்
சோலையும் மனதில் வசந்தம் தருகிறது......