கவிஞர் குலோத்துங்கனின் மானுட யாத்திரை நூலுக்கு திகசி எழுதிய விமர்சனக் கட்டுரை
“வையக வாழ்வே ஒரு பெரும் புதிர் - உருவாக்குபவனும் மனிதன் : அதற்கு விடை தேடிக் காண்பவனும் மனிதன் ”
கேள்விகள் பலவும் கேட்டுக்கேள்விக்கு விடைகள் காணும்வேள்வியும் அவனே ஏற்றுமேற்சொல்லும் யாத்திரையில்
சலிப்பில்லாத பயணி தான் மானுடன். அவனுடைய நீண்ட வாழ்க்கைப் பயணமே ஒரு ஒப்பற்ற காவியம் தான் . அதையே மானுட யாத்திரை என எனது நீண்ட கவிதையின் கருப்பொருளாக்கி எழுதலாம் என முடிவு செய்தேன். அது மூன்று பாகங்களாக வளர்ந்து முடிவு பெற்றது. அவை ஒவ்வொன்றும் மானிட வாழ்வின் தலையாய உறுப்புகள். அவையாவன :
பாகம் 1 : சமுதாயம், அரசியல் ( 2007 )பாகம் 2 : அறிவியல் ( 2007 )பாகம் 3 : ஆன்மீகம், சமயம் ( 2009 )
பாகம் 1 .2006 இல் தொடங்கப்பட்டது. பாகம் 3 .2009 இல் முடிந்தது என 'மானுட யாத்திரை'யின் ஒருங்கிணைந்த பதிப்பிற்குரிய 'என்னுரை'யில் 10.11.2011 இல் இவ்வாறு கூறுகிறார் கவிஞர் குலோத்துங்கன் என்னும் டாக்டர்.வ.செ.குழந்தைசாமி.
நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே , கவிதைத்துறையில் கால் பதித்து தனக்கென தனி இடம் பெற்றுள்ள கவிஞர் குலோத்துங்கன் படைத்துள்ள முதல் காப்பியம் இது. இக்காப்பியத்தில் 100 இயல்கள், மொத்தம் 2122 பாடல்கள் , ஒவ்வொரு பாடலும் 4 வரிகள் கொண்டது ஆகும். இந்நூல் ஆதியிலிருந்து, மனிதகுல வரலாற்றையும், முன்னேற்றத்தையும், சமுதாயம், அரசியல், அறிவியல், சமயம், ஆன்மீகம் எனும் தலைப்புகளில் மூன்று பாகங்களில் எடுத்துரைக்கிறது. இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் கருத்துச் சிறப்பிலும், கவிதையழகிலும், வரலாற்று உண்மைகளை தேர்ந்து தெளிந்து இதயத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன. இந்நூலின் ' தீராத தேடல்' எனும் 99 வது இயலும், ' தொடரும் பயணம்' எனும் 100 வது இயலும், இக்காவியத்தின் கொடுமுடிகளாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக சில பாக்கள் :
நிறைவுள முனிவர் எல்லாம்நேற்றையர் : இன்று யாவும்குறையுள (து) என்று பேசும்கூற்றை நாம் ஏற்ப(து) இல்லை
நேற்றினும் இன்று நன்றுநிகழ்வதின் நாளை நன்றுமாற்றிதற்(கு) இல்லை ; நாளும்வளர்வது மனித சாதி
தரணியில் மானி டம்தன்தரத்தினில், தன்மை யில்தன்உரத்தினில், காலம் தோறும்உயர்வது ; தாழ்வ தன்று ( இயல் 99 )
புனிதம் என்(று) இயற்கை தந்த
பொறுபெல்லாம் பொது : இஃதொன்றேமனிதத்தின் வேதம் : உண்மைவாழ்வியல் : வளர்ச்சிப் பாதை
அறிவியல் வழியில் யாவும்ஆய்ந்தொரு முடிவு காணும்அறிவியல் உலகத் திற்கும்ஆன்மீக இதயம் தேவை
அறவழி வாழ்வு தேடும்அனைத்தும் ஆன்மீ கம் : அவற்றுள்புறமென ஒதுக்கத் தக்கபொருள் என எதுவும் இல்லை
தன்னலம் பொது நன் மைக்குத்தருனெனும் தரத்துள் ஏற்போம்இன்னலும் இடரும் வாழ்வும்இடியொடு மழையும் என்னும்
உண்மையு மறிவோம் : யாவும்உறுதியொ டெதிர்கொள் கின்றதிண்மை, தன் ஆழம் காணாச்சிந்தை, எம் படைக்க லங்கள்
பண்ணைபோல் இவ்வை யத்தைப்
பதம் செய்வோம் : கவிஞர் பாடும்விண்ணையும் விண்ண மைந்தவீட்டையும் மிஞ்சி நிற்கும்
துறக்கத்தை இங்(கு) அமைப்போம்துயரங்கள் என்ப யாவும்பிறக்கின்ற ஊற்றுக் கண்கள்பெயர்த்திடும் கலைகள் காண்போம்
மனிதநே யத்தை மிஞ்சும்மதமிலை : ஒழுக்கம் என்னும்புனிதத்தில் இடம் பெறாதபொருளிலை : இயற்கை தந்த
வய்யம் ஒரு இன்ப வீடுவாழ்வொரு வரன் என்கின்றமெய்ம்மையே எமது வேதம்விண்ணகம் இங்கு காண்போம் ( இயல் 100 )
மேற்காணும் பாடல்கள் கவிஞர் குலோத்துங்கன் ஒரு தலைசிறந்த நன்நம்பிக்கைவாதி என்பதையும், நம் வாழ்வில் எத்தனை சோதனைகள் எதிர்பட்டாலும் , இறுதியில் மானுடம் வெல்லும் என்பதையும் ஆணித்தரமாக உறுதிபடுத்துகின்றன. மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன் வழியில் வந்த கவிஞர் குலோத்துங்கனின் கவிதை ஆற்றல் பெரிதும் பாராட்டத்தக்கன; போற்றத்தக்கன. “’அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம்' - இவற்றை தலையாக கொண்ட ஒரு கவிஞனால் தான் இத்தகைய சிறந்த காவியத்தை படைக்க முடியும் என நான் நம்புகிறேன். என் பார்வையில், அழகியல், அறிவியல், அறயியல் -இம்மூன்றும் இணைந்த மாபெரும் மனிதநேய படைப்பாளி கவிஞர் குலோத்துங்கன் என்பதில் எனக்கு ஐயமில்லை. இன்றைய தமிழ் கலை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு, இத்தகைய உன்னத தத்துவப் பார்வையும் , உளம் கவரும் படைப்பாற்றலும் வாய்ந்த படைப்பாளிகள் பலர் தேவை.
Man ! How Proudly that word Rings ! என்றான் மாக்சிம் கார்க்கி. 'மனிதன் ! ' எத்தனை கம்பீரமாக அச்சொல் ஒலிக்கிறது என்று கூறிய ரஷ்ய புரட்சி எழுத்தாளன் மாக்சிம் கார்க்கி, ' எல்லாம் மனிதனுக்காக ; மனித குல மேன்மைக்காக' என்று முழங்கினான். மார்க்சியம் என்பது மனித நேயத்தின் மிக உயர்ந்த வடிவம் என்றும் கூறினான். ' மானுட யாத்திரை ' எனும் காவியத்தை படைத்த கவிஞர் குலோத்துங்கன் அடுத்த நான்காவது பாகத்தை எழுதுவரேயானால், மாக்சிம் கார்க்கியின் இந்த பொன்மொழியை மனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன். ' போரற்ற பொன் உலகம் ' என்பதை பெர்ட்ரண்ட் ரஸல், பேரறிஞன் பெர்னாட்ஷா ஆகியோரும் , 'தீரமிக்க புது உலகம் தேவை' என்பதை ஆல்டஸ்ட் ஹக்ஸ்லி, ஹெச்.ஜி.வெல்ஸ் போன்ற அறிவியல் எழுத்தாளர்களும், தமது படைப்புகளில், அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தி வந்தனர். தமிழில் 65 ஆண்டுகளுக்கு மேலாக கவிதைகள் படைத்து வரும் கவிஞர் குலோத்துங்கனும் அவர்கள் பாதையை பின்பற்றினால், மானுடம் இன்னும் மேன்மைபெறும் எனக் கருதுகிறேன்.
‘பாஞ்சாலி சபதம்’ எனும் காவியத்திற்கு எழுதிய முகவுரையில் , ' எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலேயே செய்து தருவோன், தமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான்' என்று பாரதி கூறுகிறார். ஏனென்றால் தமிழ்சாதிக்கு புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணம் கட்டிய கவிஞன் அவன். சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது,சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை படைத்து, நமக்கெல்லாம் புதுநெறி காட்டிய புலவன் பாரதி.
அவரது மெய்யான வழித்தோன்றலான பாரதிதாசன், ' புதியதோர் உலகம் செய்வோம்/ கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்போம்/ இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்/ இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்' என்றான்.
இவர்களுடைய தத்துவார்த்த வெளிச்சத்தில் , கவிதை ஆற்றலில், தன்னுடைய மனதை கவிஞர் குலோத்துங்கன் பறிகொடுத்ததன் விளைவாகவும், அவர்களுடைய வழியில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டுமென்ற வேட்கையினாலும், இந்த நூற்றாண்டுக்கு மிகத் தேவையானதும் , தமிழுக்கு வளம் சேர்ப்பதுமான இந்த புதுமைக் காவியத்தை அவர் படைத்துள்ளார். எனவே, ஞானபீட பரிசு உட்பட இந்நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் அனைத்தையும் பெறுவதற்கான எல்லா தகுதிகளும் சிறப்புக்களும் இந்நூலில் மிளிர்கின்றன என நான் கருதுகிறேன். ஒர் அரிய புதிய காவியம் படைத்துள்ள கவிஞர் குலோத்துங்கனை நான் நெஞ்சார வாழ்த்துகிறேன்.