என்றும் வாழ்வான் பாரதி கவிஞர் இரா இரவி

என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்து
வந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் !

கவியரசர் என்பதனால் அவன் சந்தித்த
புவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் !

சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்
விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் !

எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்து அவன்
எட்டாத உயரம் பாடலால் தொட்டவன் !

முறுக்கு மீசைக்காரன் மட்டுமல்ல அவன்
முண்டாசுக் கட்டிய முத்தமிழ் வேந்தன் !

எளிய தமிழில் இனிய கவி யாத்தவன்
எல்லோருக்கும் புரியும்படி எழுதியவன் !

முப்பத்தியொன்பது ஆண்டுகள்தான் அவன்
மூச்சு இருந்தது இன்று வரை பேச்சு உள்ளது !

கனகசுப்பு ரத்தினத்தின் குருவாகியவன்
கவி பாரதி தாசனை உருவாக்கியவன் !

பன்மொழிகள் அறிந்திருந்த காரணத்தால் அவன்
பைந்தமிழன் சிறப்பை செழிப்பை உணர்த்தியவன் !


பாரதி பாடிய பாடல்கள் யாவும் என்றும்
பா ரதியாக அழகிய பாடல்கள் ஆனது !

திருவல்லிக் கேணியில் வாழ்ந்து சிறந்தவன்
செந்தமிழ்க் கேணியாக இருந்து வென்றவன் !

விடுதலை உணர்வை பாட்டால் விதைத்தவன்
விடுதலை அடைந்துவிட்டதாகப் பாடியவன் !

பெண் விடுதலைக்கு பாடல்கள் செய்தவன்
பெண்இன உயர்வுக்கு ஏணியானவன் !

அச்சமில்லை என்று பாடிய வீரமகன்
அன்பாய் குழந்தைப் பாட்டும் பாடியவன் !

நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாழ்பவன்
நூற்றாண்டு பல ஆனாலும் என்றும் வாழ்வான் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Dec-16, 3:37 pm)
பார்வை : 44

மேலே