பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி - பூக்கள் வழியும் சாமந்தி

பூக்கள் வழியும் சாமந்தி


வேற வேலையே இல்ல இந்த 'கெளட்டு ........!', எப்பப் பாரு இதே பொழப்பா போச்சு. "ஏர் மாடு ஒழுங்கா போகும்போது பின்னாடி குத்துறதே வேலையா போச்சு, மூக்கனாங்கயிறு அறுந்தா தெரியும் உங்க வீராப்பு!" என்றவாறு கூடையை தலையில் வைத்துக் கொண்டு கையில் தூக்கு வாளியுடன் தோட்டத்திற்கு கிளம்பினாள் பொன்னி.

முடிச்சு போட்டு மூனு வருசமாச்சு ஒரு புழு பூச்சி கூட இல்ல ஏமுட்டு வம்சத்தையே வாய்க்காலுக்குள்ள போடனும்னு வந்திருக்கா இந்த 'மலட்டு ......' இவ வயலுக்கு போறாளா? இல்ல எவனையவது வளைக்கத்தான் போறாளோ? என்ற மாமியாரின் அலப்பரைக்குத்தான் த‌ன் பதிலாக முனுமுனுத்து போனாள் பொன்னி.

பொன்னியும் நாகராசனும் கல்யாண‌மான சமயத்தில் இருந்த‌ ஜோடி பொருத்தத்தைப் பார்த்து ஊரில் வாய்மேல் வாய்வைத்து பேசாத ஆட்களே இல்லை. இருவருமே விவசாய குடும்பம், நல்ல உழைப்பாளிகள். நாகராசன் கருத்த நிறமானாலும் கட்டழகு நிறைந்துதான் இருந்தான். மண் வெட்டி அள்ளி வீசும் போது வியர்வை வடியும் அவன் மார்பழகில் மயங்கி, வளைக்க நினைத்த முறைபெண்களை எல்லாம் தவிர்த்து விட்டுத்தான் பொன்னியை திருமணம் செய்திருந்தான். அவளும் குறைவில்லாத அழகு கொன்டவள்தான். மாநிறம், சேலை சட்டையெல்லாம் இவளை கட்டிகொண்டு அழகு சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு நெளிவு வளைவுகள். கொசுவம் வைத்து சேலை கட்டி செல்லும்போது அவள் அழகில் பெண்கள் கூட மயங்கித்தான் போவார்கள்.

முதல் இரண்டு வருடமும் அன்யோன்யமாகத்தான் இருந்தார்கள், கடந்த ஒரு வருடமாகத்தான் குழந்தை இல்லை என்ற காரணத்தால் அது இது என சின்ன சின்ன மனதாபங்கள் இருவருக்குள்ளும் இருந்தது. மனைவியை அன்பில் தாங்குபவன் சமீப காலமாக எப்போதாவது தான் அவளுடன் சந்தோசமாக இருக்கிறான். குடிப்பழக்கம் வேறு ஆரம்பித்திருந்தான். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை என தனக்கு தானே சொல்லிக்கொண்டான், சமீப காலமாக பொன்னிக்கு குழந்தை இல்லாததை மனதில் வைத்துக்கொண்டு ஊர்சனம் வெளியில் தவறாக பேசுவது அதிகரித்திருந்தது. நாகராசனின் காது பட தவறாக பேசுவது பிடிக்கவில்லை ஆனாலும் அவனால் எதிர்த்தும் சண்டையிட முடியாமல் தவித்தான். இவ்வளவுக்கும் பொன்னி வெளியில் யாருடனும் அவ்வளவாக பேசமாட்டாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள், சிலர் அவளை தவறாக பார்ப்பதிலும் பேசுவதிலும் என்ன வந்து விட போகிறது என நாகராஜன் யோசிக்கவில்லை. இவனும் நம்பவில்லைதான் ஆனாலும் ஊர் வாயை அடைக்க முடியாமல் மனதில் புழுங்கிக் கொண்டிருந்தான்.

அப்படித்தான் அன்றைக்கும் நடந்திருந்தது. வேலை முடித்து தொழுவத்திற்கு போய் மாடுகளுக்கு தண்ணீர் காட்டி கட்டிவிட்டு, கொஞ்சம் வைக்கோலையும், தீவன புல்லையும் மாடுகளுக்கு வைத்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான். தெருவில் போன ஒருத்தி இவர்கள் மேல் என்ன கோபமோ 'பொண்டாட்டி வெச்சுருக்கான் பாரு பொண்டாட்டி... ஊருக்கு இல்லாலாத‌ பொண்டாட்டி...' என்று கையை ஆட்டி சைகையோடு சொல்லி விட்டு போய் விட்டாள். இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது, வீட்டுக்கு போவதிலிருந்து விலகி நேரே மதுக்கடைக்கு போனான் ஒரு பாட்டிலை ஊற்றி விட்டு அரை போதையோடு வீட்டுக்கு வந்தான்.

வந்தவனுக்கு சாப்பாடு தயாராய் இருந்தது , சாப்பாட்டிற்கு முன்னோ தன்னோட வயல்களில் இருக்கும் போதோ என்றுமே அவன் கோப பட்டதில்லை இன்றைக்கும் அதனை தொடர்ந்தான். நிலத்தையும் அதில் விளைவதையும் தெய்வமாக மதிக்க கூடியவன். அமைதியாக சாப்பிட்டவன் வாசல் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் 'என்ன விட்டு போயிராதடி!' 'ஏன் உயிருடி நீ!' 'அடியே பொன்னீ! எனக்கு துரோ....!' இப்படியாய் புலம்பல்கள் தொடர்ந்தன. 'பொன்னீ... பொன்னீ...' என்றவாறு சில சமயம் அழவும் செய்தான்.

வெளியில் சத்தம் கேட்டு வந்த பொன்னி,

"ஏஏஏ உனக்கு என்ன தான்யா வேணும், நீ குடிச்சு குடிச்சு அழிஞ்சு போறதோட இல்லாம ஏன்யா இப்புடி எங்களையும் மனசலவுல சாக அடிக்கிற" என்றவளுக்கு அழுகையினால் ஆறுபோல் கண்ணில் கண்ணீர் கோர்த்துக்கொண்டு வந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டே முந்தானையை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு உள்ளே போய் மறுபடியும் படுத்துக்கொண்டாள். படுத்தவளுக்கு நெடுநேரம் தூக்கம் வரவில்லை, உடல் வியர்த்து அசதியாக இருந்தது, கண்களில் ஒரு பக்கம் நீர் வழிந்து கொண்டிருந்தது. வெளியில் நாகராசன் அதே புலம்பல்களை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்.

நடுநிசி முடிந்திருக்கும் நேரம், கட்டிலில் புர‌ண்டு படுத்தவனுக்கு ஏதோ ஒரு உருவம் கொள்ளைப்புறம் போவது போல் தெரிந்தது. எழ முற்பட்டவன் மீண்டும் படுத்துக்கொண்டான்.

திடீரென மறுபடியும் எழுந்தான் எப்போதும் தலைபகுதியில் கட்டிலுக்கு கீழே கிடக்கும் சூரி வாளை எடுத்து இடுப்பில் செருகி கொண்டான். வேகமாக நடந்தான் ஒரு நிமிடத்தில் வீட்டோடு இணையும் சாலையை அடைந்தான். சாலை ஓரத்தில் நின்று நோட்டமிட்டான். சாலையை ஒட்டியே கண்மாய் இருந்தது, கரையிலும் உள்ளேயும் நிறைய கருவேல மரங்கள் கிளைகளை பரப்பி தலையை விரித்தாடும் பேய்களைப் போல் லேசான அசைவுகளுடன் ஆடிக்கொண்டிருந்தன‌. இடையிடையே சில புளிய மரங்களும் வேப்ப மரங்களும் இருந்தன. எங்கும் முற்றிலும் இருள் படிந்திருந்தது. தூரத்தில் ஒரு உருவம் சாலையை கடப்பது போல தோன்றியது, அங்கிருந்து தன் வீட்டு கொள்ளைப்புறத்தை குறுக்கு வழியில் எளிதாக அடைந்து விட முடியும். கண்மாய் கரையை ஒட்டியே கருவேல மர நிழலில் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு புளிய மரமும் அதனையொட்டி தொடர்ச்சியாக குட்டி குட்டி கருவேலந் தோப்புகளும் இருந்தன. அந்த உருவம் புளியமரத்தை நோக்கி போனது அங்கிருந்து இன்னொரு உருவம் சேர்ந்து கொண்டது போல் இருந்தது. நடையை விரைவு படுத்தினான், புளிய மரத்தில் பார்வையை பதித்தான். யாரும் இருப்பதாக தெரியவில்லை, மெதுவாக அருகில் உள்ள கருவேலந் தோப்புக்குள் நுழைந்தான்.

இடுப்பில் உள்ள‌ சூரி வாள் தைரியத்தை கொடுத்தது தன் பார்வையை நாலாபக்கமும் சுழல விட்டான் 'ஊரு மேயுற ...... .... .......' இன்னைக்கி உன்ன கையும் களவுமா புடிக்கிறேண்டி என்று தனக்குள் உறுமிக் கொண்டான்.

அந்த தோப்பில், முன்னால் மட்டுமே மரங்கள் கூட்டமாக இருந்தது அடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது, கருவேல மரங்களை அன்றுதான் வெட்டி இருப்பார்கள் போல அங்கும் இங்கும் சிதறிய முட்கள் அதோடு கும்ப‌ல் கும்ப‌லாக முள் கிளைகள். வெட்டுப்பட்ட கருவேல மரத்தின் வாசம் மூக்கு வரை துளைத்து அவனை ஒரு நிமிடம் மயங்க செய்தது, இப்பொழுது அதனை ரசிக்கும் எண்ணத்தில் அவன் இல்லை. மெதுவாக அடிமேல் அடி எடுத்து நகர்ந்தான். ஒரு கும்ப‌லுக்கும் அடுத்த கும்ப‌லுக்கும் இடைவெளி தெரியாமல் அதன் நிழல்கள் இருந்தன‌. கண்களை ஒருநிமிடம் மூடி மீண்டும் திறந்தான், வெளிச்சம் எதுவும் இல்லாமலே அவனால் சில நகர்வுகளை காண‌ முடிந்தது. தலைக்கு மேல் ஒரு கரிச்சான் குருவி 'கிரீரீச்ச்ச்ச்' என‌ கத்தி கொண்டே பறந்து போய் தூரத்தில் இருந்த மரத்தில் அமர்ந்தது. ஒரு வேளை அதன் கூடு வெட்டப்பட்டு கிடந்த கருவேல முள் கும்ப‌லில் இருந்திருக்கலாம். அது ஏனோ இவன் பக்கமும் இன்னொரு பக்கமும் பார்த்து கத்தி கொண்டே இருப்பதாக தோன்றியது. இன்னொரு பக்கத்தை நோக்கி நகர்ந்தான், அவனுக்கு தூக்கி வாரிபோட்டது போல் இருந்தது அசையாமல் நின்றான் அப்படியே நின்றவனுக்கு சில அசைவுகள் தெரிந்தது, தைரியத்தை வரவழைத்துக்கொண்டான்.

மெதுவாக முன்னோக்கி காலடி எடுத்து வைத்தான் சத்தம் எதுவும் கேட்காதவாறு முள்கும்பலின் அடியில் ஒட்டியவாறே மெதுவாக முன்னோக்கி நகர்ந்தான். ஒருமுள் அவன் இடது கழுத்து பகுதியின் தோள் பட்டையில் கோடு போட்டது, வலியை பொறுத்துக் கொண்டான். ஒரு பக்கம் "அவளாக இருக்க கூடாது கடவுளே" என வேண்டிக்கொண்டான். தான் இருக்கும் முள் கும்பலுக்கும் அடுத்த முள்கும்பலுக்கும் இடையில் சத்தம் வருவதை கூர்ந்து கேட்க ஆரம்பித்தான்..

'ப்ச்ச்ச்சூ' 'ப்ச்ச்ச்சூ' முத்தச் சத்தம் மாதிரியும் இல்லாமல், முத்தம் கலந்த விசில் சத்தமாய் மறுபடியும்.'ப்ச்ச்ச்சூ' 'ப்ச்ச்ச்சூ.....'

உடலை நன்கு வளைத்து தலை வெளியில் தெரியாவாறு எட்டிப் பார்த்தான்.

"இர‌ண்டு உடல்களும் பின்னி பிணைந்து....".

அந்த நிலையில் காலில் ஏதோ தட்டுப்பட்டது போல் இருக்க கையால் லேசாக தொட்டு பார்த்தான் 'அவர்களின் சட்டைகள் இவை...'. அதற்கு மேல் அவனால் பார்க்கவும் முடியவில்லை, அசையவும் முடியவில்லை.

நாடித்துடிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது. அங்கே கண்ட காட்சியில் அவனது இதயம் தனது துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்தி... மீண்டும் 'லப்டப்' 'லப்டப்' என வேகமெடுத்தது. உடல் வியர்வை சிறு வாய்க்கால்களாக மாறி உடலெங்கும் ஓட ஆரம்பித்தது. யோசிக்க நேரம் எதுவும் எடுக்கவில்லை இடுப்பில் உள்ள சூரிவாளை கையில் எடுத்து லாவாக பிடித்தான்.

"ஓங்கி வெட்டி விடலாமா?"... வேண்டாம்...! உயிருக்கு ஆபத்து நேரலாம்! பாம்பு பறக்கும் என்று கூட சொல்வார்கள்!

திரும்பி வீட்டை நோக்கி ஓட்டம் பிடிக்க‌ ஆரம்பித்தான். கரிச்சான் குருவி எதிர் திசையில் பதறி அடித்து 'கிரீரீச்ச்ச்ச்' 'கிரீரீச்ச்ச்ச்' 'கிரீரீச்ச்ச்ச்' என்றவாறு பறந்து போனது. இரு உருவங்களும் பயந்து முள்கும்பளுக்குள் பதுங்க ஆரம்பித்தன‌.

எந்த வழியில் வந்தோம்,எப்படி வந்தோம் என அவனுக்கு தெரியவில்லை ஆனால் வீடு வந்து சேர்ந்திருந்தான். ஓடி வந்த வேகத்தை குறைத்து, மூச்சை இழுத்து ஆசுவாச படுத்திக் கொண்டவன் முழங்கால்களை பிடித்துக் கோண்டு வீட்டின் நிலையை ஒட்டியவாறு உள்ள படியில் தெற்கு பார்த்து அமர்ந்திருந்தான்.

தன் மூச்சை விட வேகமாக வீட்டின் உள்ளே இருந்து ஒரு மூச்சு சத்தம் வந்து கொண்டிருந்தது. அது குறட்டையாகவும் இருக்கலாம் என தோன்றியது. லேசாக திரும்பி பார்த்தான் , அங்கே கட்டிலில் இவனை விட அதிக வியர்வை துளிகளுடன் பொன்னி படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

காலை சூரியன் வெண்மஞ்சள் நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சன்னல் வழியாக ஊடுருவிய ஒளி அவனை ஆசிர்வதிப்பது போல் படர்ந்தது. கன்னத்தின் இளஞ்சூட்டை உணர்ந்தவனாய் எழுந்தான். இரவு எப்படி உறங்கினான் என்றே தெரியவில்லை உடலெங்கும் ஒரே அசதியாய் இருந்தது, எழுந்து கொள்ளைப்புறம் போனான்.

'அரசமக்கா, மாரியாத்தா, செங்கல்உடையாரு ஏம் வம்சத்தை இன்னும் வழிவழியா காப்பாத்துங்கப்பா...' . எப்போதும் போல ஆத்தா புலம்புகிறாள் என்று தண்ணீரை அள்ளி முகத்தை கழுவினான். கழுத்து ஓரத்தில் இரவு கிழித்த முள் தடம் தோள்பட்டையை இழுப்பது போல் தோன்றியது. தொட்டு பார்த்தான் முள் கிழித்த இடத்தில் அரைத்த‌ மஞ்சள் தடவப்பட்டிருந்தது.

இது பொன்னி வேலையாகத்தான் இருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு காதலோடும் கொஞ்சம் புன்னகையோடும் திரும்பி நடந்தான், அங்கே சாமந்தி செடி நிறைய பூக்கள் நிறைந்திருந்தது அதன் ஓரம் 'மசக்கை வாந்தி' கிடந்தது.

--

எழுதியவர் : தினைக்குளம் கா.ரமேஷ் (15-Dec-16, 5:39 pm)
சேர்த்தது : kramesu
பார்வை : 307

மேலே