நினைவுப் புயல்
காற்றழுத்த தாழ்வாய் வந்து
என்னை சுற்றியே சுழலும்
உன் நினைவுப் புயல்
வலுவிழப்பதாய் தெரியவில்லை
இந்த சூறாவளியில்
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட
என் மகிழ்வெனும் விருட்சங்கள்
மீண்டும் உயிர் பெறுமென
தோன்றவில்லை
என் உயிர் மின்னோட்ட கம்பிகளை
அறுத்தெறிந்து விட்ட
கோர புயலுக்கு இன்னும்
அகோர பசி அடங்கவில்லை
இரத்த குழாய்களில்
சிவப்பணுக்களும்
வெள்ளை அணுக்களும்
இரத்த தட்டுக்களும்
பாதையறியாது ஸ்தம்பித்து
நின்ற பின்னும்
இதன் வீரியம் குறையவில்லை
எனது ஆகாய கோட்டைகளின்
அடிமட்டம் வரை
தகர்தெறியும் இதன்
வலிமை எத்தனை மைல்
என தெரியவில்லை
ஒரே வீச்சில்
நிலைகுலைந்து போன
எனது நிலத்தின்
இழப்பு மதிப்பு
இன்னும் கணக்கிட இயலவில்லை
யாதொரு நிவாரணம் இனி
யெவரிடமிருந்து வரும்
என இன்னும்
விளங்கவில்லை
புயலே
இனியும் நீ பெயர்த்தெடுக்க
இவனிடம் யேதுமில்லை
சென்று விடு
இப்போதே நீ வந்து கொடுத்த
தடம் மாற இன்னும்
எத்தனை காலம் பிடிக்கும் என
தெரியவில்லை