வினோதப் பறவையின் கடற்கரை- நூல் ஒரு பார்வை- கவிஜி

வினோத பறவையின் கடற்கரை

என்ன தலைப்பு இது.

எனக்கு பிடிக்க வில்லை. சற்று தள்ளி வைத்து விட்டேன் இந்த கவிதை தொகுப்பை. என் கைக்கு கிடைத்து 9 நாட்களுக்கு பின் சரி திருப்பலாம் என்று தான் திருப்பினேன்.

டிக் டிக் டிக்....அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியத்தில் இந்த புத்தகம் உச்சமென பட படக்கத் தொடங்கியது.

திருப்பும் பக்கமெல்லாம்... திசைகளாகி விட்டிருந்தது காகிதம். சற்று நேரம் கூட கூட மிரட்சி என் உடலெங்கும். என்னை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் என் வாசிப்பை நான் நிறுத்த முயலவே இல்லை. இரவுக்குள் இரண்டாம் முறை எனக்குள் பெரும் நிகழ்த்துக்களை செய்து விட்டிருந்தது. நிஜமாக ஓர் ஆரம்பத்தில் என் வார்த்தைகளை ஆரம்பிக்க முடியவில்லை. வேறோர் வாழ்க்கைக்குள் இருந்து தேடிக் கண்டெடுப்பதெல்லாம் இன்னொரு வானமும்.... இன்னொரு வனமும் என்று தேகம் நடுங்க நான் இங்கே எழுதுவது நான் கண்டடைந்த அனுபவமா என்றால் அது இல்லை. இந்த கவிதை புத்தகத்தில்.. வேறோர் ஆன்மா இருப்பதை உணர்கிறேன்... அதை எழுதி விட தடுமாறும் முதல் முறை எனக்கு வாய்த்திருக்கிறது.

நேர்த்தியாக நீண்டு கொண்டிருக்கும் முடிவில்லாத இருட்டை மெழுகுவர்த்திகள் அணைத்து காண்கிறேன். காண்பதெல்லாம் கவிதைகள் போல பிறழத் துவங்குகிறது என் இருப்பு. சர்ப்பங்கள் ஊர்ந்து செல்லும் வனத்தில் நானும் அந்த சிறுமி தானோ என்று யோசிக்கிறேன். நீண்ட காலம் ஒன்று தன் நீல அலுகுகளால் என்னை கொத்திப் போகிறது. போவதற்குள் அடுத்த பக்கம் தலை நுழைகிறேன்... உடல் நுழைய மறுக்கும் அத்தனை பெரிய திகைப்பு. நம்முடைய சந்திப்பு எப்போதும் எதேச்சையாகவோ விபத்து ரீதியாகவோ நிகழக் கூடுமானதில்லை என்று முடியும் கவிதையில் சற்று நேரம் செத்தே போனேன். அது தகும்தான்.

மீண்டெழ வாய்ப்பு இருக்கும் பிறிதொரு கவிதைக்குள் பிதாவாகி கடந்து போகுதல் சுகம். கூர்மையான நாக்கை தாண்டி இந்த வாழ்வு என்னை அனுமதிப்பதில்லை. யாரின் சபித்தலாய் இருக்கிறது அது. புரியாத தோற்றத்தில் புதையலின் நிகழ்வாய் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே நகர்கிறது நர்த்தனம். நூற்றாண்டு காலப் புரவிகளில் நான் புழுதி பறக்க பயணப் படுகையில் நாளைக்கும் சேர்ந்த ஓர் அவசரம் தொற்றிக் கொள்கிறது. இந்த கவிதை புத்தகத்தில்... வாழ்வின் மீதான சுயம் தன் வண்ணத்தை பூசிக் கொண்டே இருக்கிறது. மிகப் பெரிய இறுக்கங்கள் தன் வானத்தை விரித்துக் கொண்டே செல்கையில்... விநோதமாகத்தான் பட்டது வேட்கை. தீரா தாகம் வேட்டை.

உயிர் பெற்று உடன் வரும் ஓவியத்தை அவனாக்கும் பொழுதில் படக்கென்று நான் அவளாக்கி திரும்ப படித்தேன். ஒவ்வொரு பக்கத்திலும்.. ஒவ்வொரு தூரம். தூரம் முழுக்க வேறு வேறு மைல் கற்களின் தனித்த பொழுதுகளின் கூர் முனை. அது பெண் முனை.

எழுத எழுத வந்ததா கவிதை. படித்த பின்னும் வருகிறது...!

சமீப காலத்தில் பெண் கவிஞர்களின் தொகுப்பில் இத்தனை ஆச்சரியங்களை இந்த தொகுப்பில்தான் நான் காண்கிறேன். பாராட்ட வனம் கொண்டது மனம். பாராட்டிய மனதில் முளை விட்டது புது தினம்.

இப்போதும் சொல்கிறேன்... இந்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இத்தனை அலைக்கழித்த கவிதைகளோடு காற்றுப் புரவியில் மீண்டும் பயணிக்க சில பிடிக்காது தேவையாய் இருக்கிறது. தேவைகளின் ஆற்றில் தீரா நதியென ஒவ்வொரு கவிதையும்...உச்சத்தில் வினோத பறவை.

கடற்கரையை நீங்கள் கண்டடையுங்கள்.....

கவிஜி

வினோத பறவையின் கடற்கரை
ஆசிரியர் : ஜெ. நிஷாந்தினி
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை ரூ 70/
தொடர்புக்கு : 9095507547

எழுதியவர் : கவிஜி (28-Dec-16, 9:18 pm)
பார்வை : 179

மேலே