என்று மாறும்
இமைகளில் ஒட்டி இருக்கும் மிச்ச தூக்கத்தை போர்வையோடு உதறி தள்ளி
கண் உறக்க களைப்பை
நீரால் கழுவி அகற்றி
காப்பி தயாரித்து
சிற்றுண்டி செய்து
கூடவே மதிய உணவு முடித்து
பிள்ளைகளை எழுப்பி
கிளப்பியும், ஊட்டியும்
மகிழ்ச்சி முகம் காட்டி கை அசைத்து
பள்ளி அனுப்பி
கணவனுக்கு உணவு கொடுத்தால்
இந்த சட்னி எனக்கு எதற்கு
வேறு கொண்டா என்கிறான்
நேற்று இரவு பிரியமாய் தெரிந்தவன்
இன்று பிடிவாதக்காரனாய் தெரிகிறான்
அதை முடித்து தட்டில் படைத்து
நிமிர்ந்தால்
என்னையும் கொஞ்சம் பாரேன்
என்கிறது கடிகாரம்
பசியை நேரம் உணர்த்த
ஆறிய காப்பியை சிறிது உள்ளே தள்ளி
இன்னும் வேண்டும் என்று கேட்ட வயிற்றை புறம் தள்ளி
ஏதோ உடைக்குள்
உடலை தள்ளி
அலுவலகம் சென்றால்
ஐந்து நிமிட தாமதமாம்
அலங்காரம் தான் காரணமாம்
என்றது ஆண்களின் உலகம்
புண்பட்ட மனதோடு புன்னகைத்து வைத்தேன்.
என்று மாறும்......