கல்லறைக் காவியம்
அச்சம்மறந்த என்நெஞ்சை அளவில்லாது காயப்படுத்தி
மிச்சப்பட்ட குருதியில் நீயும் நீந்தி நீராடியது பொய்யானால்...
உறக்கம்மறந்த எனது இரவுகளில் உறையவிடாது உயிர்வரிகளைப்பேசி
மறத்துப்போன என்மனதை நீயும் மரணிக்கச்செய்தது பொய்யானால்...
தெருமுனைக் குழாயினில் திராவகப் பேச்சுகளால்
பெரும்படைகளைத் திரட்டி என்மீது வார்த்தைகளால் போர்தொடுத்தது பொய்யானால்...
போக்குவரத்தில் பயணிக்கும் பொழுதெல்லாம் நீயெனக்கு
போதாதென இன்னல்களை இட்டுச்சென்றதும் பொய்யானால்...
நடுநிசி நேரங்களில் எனக்கு கடும்பசியெடுக்க நீயும்
நெடுநடைக் கவிதைகளால் எனை பசிமறக்கச்செய்தது பொய்யானால்...
பள்ளிப் பருவம்முதலே என்னோடு துள்ளிவிளையாடிய கள்ளிநீயும்
மல்லிச்சரங்களால் எனக்கு கொல்லிவைத்து குழியிலிட்டது பொய்யானால்...
ஒருமுறையேனும் ஓடோடி வாயேன்
ஓய்ந்துறங்கும் என் கல்லறைக்கு...