குறுங்கவிதைகளின் ஊர்வலம் - சந்தோஷ்

அதிகாலை கடலை
ரசித்த என் மனது
சூரியனைக் குடித்து
விடியலை பெற்றெடுத்தது.

--------------------

என் செல்ல மகள்
ஒவியமிட்ட
வண்ண நிலவிற்குள்
பாட்டி ஐஸ்கிரீம்
சுட்டுக் கொண்டிருந்தாளாம்.

------------------------

தங்கம் கிடுகிடு உயர்வு..!
ஆம்..
என் செல்ல மகள்
வளர்ந்துவிட்டாள்.

--------------

எனக்கு என்ன ஆனது என
நான் வினவியப் போது
எனக்கு ஒன்றுமில்லை என
சொல்லி விட்டு நகர்ந்தது..

--------

என் ஒருபக்க கதையை
நான் சொல்லிவிட்டேன்.
அவளிடம் இதன்
மறுபக்கம் கதையில்
மறுப்புகள் இருக்கும்.
கேட்டுப் பாருங்கள்.
ஒட்டுமொத்தமாக
ஒரு கிரைம் நாவல்
அல்லது
நவீன காவியம்
உங்களுக்கு கிடைக்கலாம்.

------

என் தோளில்
சாய்ந்து எழுந்த பிறகும்
ஒட்டிக் கொண்டிருக்கும்
இந்த நீண்ட கூந்தலின்
ஒற்றை மயிருக்கு
கவி எழுத
நான் பைத்தியம் அல்ல.
ஆனாலும் என்ன செய்ய
கவிதை செய்ய
பைத்திய நிலையே
சிறந்த நிலை தானே காதலியே!?
என் கல்லறை திறந்திருக்கிறது.
எட்டிப்பாருங்கள்
மரண வலியில் எழுதிய
என் நவீன கவிதை
ஒன்று இருக்கிறது.

-----------

நீ முத்தம் மட்டும் கொடு.
சத்தம் உண்டாக்குவது என் பாடு...!


-------

ஒரு பெரும் மழையில்
ஒரு குடைக்குள்
என் தனிமை..
உன் நினைவு.
போதும் இப்பேரின்பம்.


----------


கவலைப் படாதே தோழா..
ஒரு நாள் உன்னை
தூக்கிவைத்து கொண்டாடும்..
இந்த கேடுகெட்ட உலகம்..!
அப்போது..
அழகிய ரோஜா ,முல்லைகளின்
அற்புத அலங்கார பூமாலையோடு
நீ சடலமாக இருப்பாய்.
அதுவரையிலும்..
புறக்கணிக்கப்பட்ட வலியோடு
உன் மரணத்தை
உன் கூடு
சுமந்து திரியட்டும். !

----------





இந்த இரவை
என் தனிமையில்
மொழிமாற்றம் செய்து சோதித்தேன்.
யாரும் விளங்கிடாத
ஒரு நவீனத்துவ விளக்கம்
கொண்டிருக்கிறது.

---------------

போதிக்கு பக்கத்து குடிசையில்
பெண் ஒருத்தி
பலாத்காரம் செய்யப்படும் போதும்..
தவம் கலையாதிருந்தால்
அவன் புத்தனாகி என்ன பயன்?

---------------


அவ்வளவு எளிதாக ஏமாறாதவனை
மது,மாது காட்டி வீழ்த்தலாம்.
அல்லது
மானமுள்ள தமிழனென
தேசப்பக்தி இந்தியனென
உணர்ச்சியேற்றி வீழ்த்தலாம்.
யுக்தி உங்கள் சாய்ஸ்...!


-------------------


அந்த ஆதி கிழவி
பொதுவுடைமை புத்தியோடு
வடை சுட்டிருந்தால்..
காகம் திருடியிருக்காது.
நரி ஏமாற்றி இருக்காது.


-------------------


ஆடவர் எவரும்
காதலியுடனோ
நெருங்கிய தோழியுடனோ
செல்ல மகளுடனோ
தன் முதிர்ச்சியினை மறந்து
ஒரு வெகுளியாய்
ஒரு குழந்தைப் போல
பேசும் போது
அவர்கள் அழகாக ஆகிவிடுகிறார்கள்
அல்லது
பேரழகு கவிதையாகிறார்கள்.


-------------------------


அந்த இராத்திரியில்
அம்மன் கோயிலுக்குப்
பின்புற முட்புதரில்
ஒரு பெண்
வன்கொடுமை செய்யப்பட்ட போது
அம்பாள் காப்பாற்றி இருக்கலாம்.
என்ன செய்ய
நீங்கள்தான்
காக்கும் தெய்வம் அம்பாள்
திருடப்பட்டு விடுவாளென
பூட்டி வைத்து விட்டீர்களே..!


--------------------

தமிழ் மொழியின் வரலாறாய்
நீளுகிறது தண்டவாளம்.
ஒர் அழகிய வெண்பா போல
எதுகை மோனை ஒலியெழுப்பிச்
செல்கிறது இந்த இரயில்.
புதுக்கவிதையின் இதமாய்
கிடைத்துவிட்டது
ஜன்னலோர இருக்கை.
இதோ
65 கி.மீ வேகத்தில்
நகருகிறது
அழகிய ஹைக்கூகளாய்
செடி கொடிகள்
மரங்கள்
மலைகள் ,மழலைகள்
மழைத்துளிகள் யாவும்.


-----------------


--- இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (1-Jan-17, 12:18 am)
பார்வை : 168

மேலே