நினைவுகள்

அன்றொருநாள்...

பால்வெளி வீதியினில் பயணிக்கும்
பல கிரகங்களைப்போல...

நானும் பயணித்திருந்தேன்.,
கடிவாளமற்றதொரு காதல் பாதையினில்...

பாலைவன மணற்பரப்பில் படுத்துக்கொண்டே
பால்நிலாவையும் இரசித்திருந்தேன்...

காரணம்...?

என் கண்களிரண்டினைக் கட்டிவிட்டு
காதலெனும் கண்ணாமூச்சி ஆடிய
காமுகியவளுக்குத் தெரியும்...

காதலெனும் பாடத்தினை கற்கமறந்த கண்ணகியவளால்
கலங்கப்பட்ட என் கருப்புக் காவியம்...

மலர்கள் நிறைந்த பூஞ்சோலையைவிட
அரவனைப்பில்லா அப் பாலைநிலம் நிலையாகவே இருந்தது...

மானிடம் மறந்த மங்கையவளை நான் மறக்க
மரணத்தின் விளிம்பதனைத் தொட்டுத் திரும்பினேன்...

இம் மண்ணிற்கு எனை அறிமுகம் செய்த
எம் தாய் - தந்தையின் காத்திருப்பிற்காக...

எந்தன் கைவிரல்கள் விரைத்து
உடற் செங்குருதி வற்றியதை நான் உணர்ந்தபடி...

சிறுபிள்ளைபோல கரைந்திருந்தேன்
சிதைக்கப்பட்ட தேகத்தோடு திரும்பிக்கொண்டிருந்தேன்...

வெப்பத்தின் காரணமாக வெடித்திருந்த எமது தோள்களில்
கசியத்துவங்கியது குருதியின் வாடை...

திசைகளை அறியாத பாலைநிலத்தினில்
வசைகளைப் பேசியவாறு வந்திருந்தேன்...

இயலாத ஒன்றினை இருப்பதாக எண்ணி
நாளிகையைக்கூட நாட்களாய் நடந்திருந்தேன்...

மணல்மேடுகள் அழிந்து
புதிய மேடுகள் உருவானபடியே இருக்க...

அப்போதும் தொடர்ந்திருந்தேன்..
எனது சிந்தையினை சீராக்கும் அப் பயணத்தை...

என் நெஞ்சுக் குழியினில் அடைகாக்கபட்டு
அங்கேயே வெடித்துச் சிதறிய காதலுக்கு
என் வலிகள் எப்படித் தெரியாதோ...

அதுபோலத்தான்...

என் வரிகளில் ஒளிந்திருக்கும் வலிகளை
உணர
எனை ஏளனம் செய்யும் எளியவர்களால் முடியாது...

- நினைவுகள் தொடரும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-Jan-17, 8:00 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : ninaivukal
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே