ஆழ்கடலின் சங்காக - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

ஆழ்கடலின் சங்காக ... - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை.


ஆழ்கடலின் சங்காக ஆழ்ந்திடுவர் பெண்களுமே
வாழ்வாங்கு வளம்பெறவே வாழ்த்திடுவர் தாயாக
ஊழ்வினைகள் போக்கிடுவர் உற்றதுணை அவரன்றோ
பாழ்படாத நெஞ்சமுமே பாசத்தின் வெளிப்பாடே .


மாண்புடைய பெற்றோரும் மகவினையும் ஆதரிப்பார்
ஆண்டவனும் தந்திட்ட ஆழ்கடலின் சங்காவார்.
மாண்டிடாது மக்களினம் மண்ணுலகில் தழைத்திடுமே .
வேண்டுவனக் கிட்டிடுமே வேராவார் விழுதுகளின் .


பொய்யான வார்த்தைகளும் பொய்த்துவிடும் இவ்வுலகில்
மெய்யான வார்த்தைகளே மெய்பிக்கும் உண்மைநிலை
வெய்யோனின் சீற்றம்போல் வெற்றுரையாய்ப் பேசிடுவார்
உய்வில்லை எந்நாளும் உணர்ந்திடுவோம் எல்லோரும் .


மாற்றமில்லை என்மனத்தில் மறவாது என்றனுள்ளம்
சீற்றமில்லை நெஞ்சத்தில் சீர்பெறவும் வாழ்ந்திடவே.
ஊற்றாக விழுதுகளும் உதவிடுங்கள் எந்நாளும்
காற்றாக மாறிநீங்கள் காத்திடுவீர் பெற்றோரை .


வேர்களானப் பெற்றோரை வெற்றிடமே தள்ளிவிட்டு
மார்த்தட்டிக் கொள்ளுகின்ற மக்களினம் விழுதுகளாம்
பாரினிலே இந்நிலையே பன்னாளும் இருந்துவிட
ஊருராய்த் தேடுகின்றார் உண்மையிலே வாடுகின்றார்.


மதிப்பாக மதிக்கின்ற மானிடர்கள் உள்ளவரைக்
கதியாகப் பெற்றோரும் கடவுளென உள்ளவரைப்
பதித்திடுவேன் இக்கருத்தை பாரினிலே நானென்றும் .
மதிபோன்ற அழகுநிறை மண்ணுலகம் வாழ்ந்திடுமே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் .
முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளை காலனி ,
டிவிஎஸ் . டோல்கேட் ,
திருச்சி - 20 .
இப்பாடல் என் சொந்த படைப்பு .
தொலைபேசி :- 9443206012

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Jan-17, 4:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 49

மேலே