பொங்குமின்பத் தைத்திங்கள் போற்று - ஒருவிகற்ப இன்னிசை அந்தாதி வெண்பாக்கள்

தங்கிடுமே இன்பங்கள் தப்பாது மாரியும்
மங்கலமு முண்டாம் மகத்தான செந்நெல்லே
எங்கும் செழித்திடுமா மெண்டிசையும் பொங்கலில்
பொங்குமின்பத் தைத்திங்கள் போற்று .


போற்றுவோம் நாளுமே போய்விடுமே துன்பமும்
மாற்றுவோம் தீவினைகள் மங்காத பொன்னாளில்
வீற்றிருக்கும் நன்மை விடியட்டும் நல்வாழ்வு
சீற்றங்கள் வேண்டாமே சீர் .


சீரான வாழ்க்கைக்கு சிந்தைநிறை பொங்கலுமே
பாராள வைத்திடுமே பங்கிடுவோம் செல்வத்தை
தாராள நெஞ்சத்தால் தாபிப்போம் மானிடரே
வாராதோ நல்லெண்ணம் வந்து .


வந்திடுமே பொங்கலும் வாசமுள்ள மஞ்சளுடன்
தந்திடுமே செம்மையினைத் தப்பாது வந்தனமும்
செந்தமிழில் பார்மிசை செப்பிடுவோம் நன்னாளில்
சிந்தையிலே வைத்தல் சிறப்பு .


சிறப்புமிக்க நாளில்நாம் சீர்பலவும் பெற்றே
உறவெல்லாம் கூடிடவே ஊர்தனிலே நாமும்
மறவாது நின்று மரபினை யாத்த
லுறவாகும் பொங்கலினை உண் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Jan-17, 8:48 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 39

மேலே