காகிதக் கப்பல்கள்

குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !

மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல்
தத்தளிக்கின்றன!

அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து
சோககீதம் பாடி
கரை சேர்ந்து
அமர காவியமாகியது !

பெண்களின் கவர்ச்சி
அழகில் மயங்கி பெண்ணை
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின்
காதல் வாழ்க்கையும்
கரை சேராத
காகிதக் கப்பல்கள் !

மெய் மூலம் பிறந்து
பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில்
மிதந்து குளித்து
சுகம் காணும்
மனித வாழ்க்கையும்
கரை சேராத
காகிதக் கப்பல்கள் !

ஏங்கிய மனம்
தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி
பறக்கலாம் வானில்
பட்டதாரியின்
கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும்
காகிதக் கப்பல்கள் !

எண்ணிக்கையில்லா
எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில்
ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய
நம் மனமும்
கரை சேராக் காகிதக் கப்பல்கள் !

எழுதியவர் : (13-Jan-17, 2:09 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 106

மேலே