டிஜிட்டல் பணப்பரிமாற்றமும் நடைமுறை சிக்கலும்

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொலைக்காட்சிகளில் ஆற்றிய உரையில் அதிரடியாக அறிவித்தார். இதனால் பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து அதற்கு பதில், புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். அதுவும் உச்சவரம்பாக தனிநபர் ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்றி தரப்படும், ஆதார் அடையாள அட்டை அவசியம் என்பன உள்ளிட்ட பணம் எடுப்பதற்கான பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, இதனால் பொதுமக்கள் பெரும் தொந்தரவுக்கு ஆளானார்கள். அதே நேரத்தில் பிரதமர் மோடியின் மீது அதிருப்திக்கும் உள்ளானார்கள்.

பொதுமக்கள் கூட்டம்

நாளொன்றுக்கு ரூபாய் 4,000 என நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு பணத்தை மாற்றுவதற்கும், வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுப்பதற்கும் வங்கி வாசல்களில் காலையில் இருந்தே பொதுமக்கள் காத்துக் கிடந்தனர். மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு காலக்கெடு டிசம்பர் - 30 உடன் முடிவடைந்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை ‘டெபாசிட்’ செய்ய கடைசி நாளான்;று வங்கிகளில் மக்கள் குவிந்தனர்.

bank queue in indiaசென்னை மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 800 சதவீதத்திற்கும் அதிகமான ஏ.டி.எம் எந்திரங்கள் பணம் இல்லாமல் முடங்கியே கிடக்கின்றன. இதனால் வங்கி கணக்கில் போதுமான பணம் இருந்தும் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு அறிவித்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் இனியாவது இயல்பு நிலைக்கு திரும்புமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது- “இன்னும் நிறைய பணத்தை புழக்கத்தில் விடத்தக்க அளவு, ரிசர்வ் வங்கியிடம் ரொக்கப்பணம் கையிருப்பு உள்ளது” என்று சொல்லிருக்கிறார். அப்படி புழக்கத்தில் விடத்தக்க பணம் இருந்தும் ஏன் மக்களுக்கு வங்கிகளில் குறிப்பிடத்தக்க குறைந்த அளவிலான பணம் தரப்படுகிறது என்ற கேள்வி தான் எழுகிறது.

கட்டுப்பாடு நீக்குவது எப்போது?

“பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடு எப்போது நீக்கப்படும்?” என்ற கேள்விக்கு மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி, “தயவு செய்து காத்திருங்கள். நாங்கள் இதுகுறித்து முடிவு செய்தவுடன் உங்களுக்கு தெரியவரும்” எனக் கூறியிருக்கிறார். (தினத்தந்தி, டிச – 31, 2016, மதுரை, பக்-11) ஏற்கனவே அறிவித்த நாட்கள் போதாதா? இன்னும் இவர்கள் யாருடன் கூடிப்பேசி முடிவெடுக்கப் போகிறார்கள்? கார்ப்பரேட் முதலாளிகளிடமா? அமைச்சரவையி;லா? அல்லது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடியிடமா?

ஆரம்பத்தில் ஏ.டி.எம் மையங்களிலிருந்து தினமும் ரூ.2,500, வங்கிகளிலிருந்து வாரம் ரூ.24 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அதுவும் பூட்டிய வண்ணமே இருக்கிறது. போதிய பணம் இருந்தும் ஏன் ஏ.டி.எம்.களில் பணம் வைக்கப்படவில்லை?

பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை, பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தவும், வங்கிகளில் ‘டிபாசிட்’ செய்யவும், 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, புழக்கத்தில் இருந்த 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய், வங்கிகளில் ‘டிபாசிட்’ செய்யப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் ‘டிபாசிட்’ செய்வதற்கு அளிக்கப்பட்டிருந்த 50 நாட்கள் கெடு, முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை இனி, எங்குமே மாற்றவோ பயன்படுத்தவோ முடியாது. இனி, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அளிக்கப்படும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ரூபாய் நோட்டால் வந்த குழப்பங்கள்

1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த 500 ரூபாய் நோட்டும், 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான 1,000 ரூபாய் நோட்டும் டிசம்பர் -30, 2016 அன்றோடு முடிவுக்கு வந்துவிட்டன. யார் கையிலாவது இனி, பழைய 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அது மதிப்புயில்லாத வெற்று காகிதம்தான்.

பெட்ரோல் பாங்க், பேருந்து மற்றும் ரெயில்களில் பயணிக்க பழைய ரூ, 500, ரூ.1,000 நோட்டுகளை கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.

13-11-2016 அன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்பட்டன. வங்கிகளில் பணத்தை மாற்றிக்கொள்ளும் அளவு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும் ஏ.டி.எம்-ல் பணத்தை எடுக்கும் அளவு ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டது.

15-11-2016 அன்று ஏ.டி.எம் எந்திரங்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வந்தும் ஒரு வாரம் கழித்து தான் புதிய ரூபாய் நோட்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

16-11-2016 அன்று வங்கிகளில் பழைய 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வலதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. இதனால் தங்களின் அன்றாட தேவைகளுக்காக வங்கிகளில் நின்ற ஏழை மக்களின் கையில் மை வைத்து அவர்களை மேலும் அச்சப்படுத்தினவே தவிர பணக்காரர்கள் யாரும் வரிசையில் நின்று கைகளில் அழியா மை வைத்துக் கொள்ளவில்லை. மாறாக வங்கி அதிகாரிகள் கமிஷன் பெற்றுக் கொண்டு வங்கியின் பின்புற வாசல் வழியாக கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

18-11-2016 அன்று திருமண செலவுக்காக ரூ.2.5 லட்சம் வரை வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அப்படி யாருக்கும் கொடுத்ததாக தெரியவில்லை. பல திருமணங்கள் தடைபட்டு நின்று போயின. ஆனால் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களின் வீட்டு திருமணங்கள் 500 கோடி செலவில் மிகபிரமாண்டமாக நடந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

21-11-2016 அன்று பணம் தட்டுப்பாடு எதிரொலியாக வீடு, கார் மற்றும் கல்வி கட்டணத்திற்காக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கடன் தவணையை செலுத்த 60 நாள் கால அவகாசம் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதையொட்டி பல பணக்காரர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைத்து கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றினர்.

25-12-2016 அன்று ரொக்கமில்லாப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு பரிசு திட்டங்களையும், வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகைகளையும் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.

28-12-2016 அன்று மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் மற்றும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அவசரச் சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

30-12-2016 அன்று வங்கிகளும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. (தினத்தந்தி, டிச – 31, 2016, மதுரை, பக்-03)

ஊக்கம் அளிக்குமா ‘டிஜிட்டல்’ பணப்பரிமாற்றம்?

பொதுவாக அரசாங்கம் எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அந்த திட்டம் வெற்றிகரமாக முடியும். அந்த வகையில் தான் உலகில் பல்வேறு நாடுகள் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள ரொக்கமில்லாப் பணப்பரிமாற்றம் அதாவது, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி, பொருட்கள், சேவைகள் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் முழுமையாக வெற்றி அடைந்தால், நிச்சயமாக கருப்புப் பணமோ, லஞ்ச ஊழலோ, கள்ளப்பணமோ பெருமளவில் ஒழிக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு வங்கிக்கணக்கு இல்லாத நிலையில் இது போன்ற பண அட்டைகளையோ, மின்னணு பணப்பரிமாற்றத்தையோ பயன்படுத்தி பழக்கமில்லாத நிலையிலும் இந்த திட்டம் மக்களை முழுமையான நிலையில் சென்றடைய வேண்டுமென்றால், அவர்களால் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டுமென்றால் அவர்கள் முழுமனதுடன் இதைப் பயன்படுத்த தொடங்க வேண்டும். இது சாத்தியம்தானா?

கிராமப்புறங்களில் பலரிடம் அலைபேசியை இல்லை. அப்படியே ஒரு சிலர் வைத்திருந்தாலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் தான் அலைபேசியை வைத்திருப்பர். இன்னும் ஒரு சில குடும்பங்களில் அலைபேசியை இல்லாத சூழலும் உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் பணமில்லா பரிவர்த்தனை எந்த வகையில் சாத்தியப்படும் என்று நமது பிரதமர் மோடி நினைக்கிறார் என்று தெரியவில்லை.

சில எழுதப்படிக்க தெரி;யாத நபர்கள் அலைபேசி வைத்திருந்தாலும் அவர்களுக்கு அலைபேசி ஒலிப்பு வந்ததும் பச்சை நிறப் பட்டனை அழுத்தி பேச தெரியும்;. பேசி முடிந்ததும் சிவப்பு நிறப் பட்டனை அழுத்தி அலைப்பை துண்டிக்க தெரியும். அவர்களில் பலருக்கு தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள வேண்டுமானல் அவர்களிடம் பேச யாரவது விபரம் தெரிந்த ஒருவரின் உதவி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் பிரதமர் மோடி இப்படியொரு அறிவிப்பை சொல்லிவிட்டு அதில் எல்லோரும் இணையும்படி வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியொரு அறிவிப்பு பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்ட விபரமே தெரியாமல் பலர் புதிய ரூபாய் நோட்டுக்காக மணிக்கணக்கில் கால் கடுக்க இன்னும் வங்கி வாசல்களில் நின்றுகொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் புதிதாக பெற்றுக்கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டை சில்லரை மாற்ற முடியாமல் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பணம் இருந்தும் சில்லரை கிடைக்காமல் அல்லல்படும் நிலைமைக்கு பிரதமர் மோடி தள்ளிவிட்டுவிட்டாரே என்று புலம்பிக் கொண்டே தங்களின் அன்றாட வாழ்வை கழிக்கும் பாமர மக்களி;டம் இந்தப் பணமில்லா பரிவர்த்தனை திட்டம் எப்படி சாத்தியமாகும்?

போதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காமல் அதற்கு மாற்றாக மக்களை பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்று திணித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை என்னவென்று சொல்வது. பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்களே விரும்பி தானே வரும் காலம் வரும். அதற்காக மக்களை கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பது தான் இன்றைய சாமானிய மக்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

பரிசு திட்டங்கள்

மின்னணு பணம் செலுத்தும் பழக்கம் உருவாக அதை ஊக்குவிக்கும் வகையில், நுகர்வோருக்காக ‘அதிர்ஷ்ட சாவி’ நுகர்வேர் திட்டமும், வியாபாரிகளுக்காக ‘டிஜிதன்’ வியாபார திட்டமும் அறிவிக்கிறேன் என்றும், ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் முறையிலும், மின்னணு முறையிலும் பணப்பரிமாற்றம் செய்யும் 15ஆயிரம் பேர்களுக்கு குலுக்கல் முறையில் தலா ரூ.1,000 பரிசாக அவர்கள் வங்கிக்கணக்கில் போடப்படும் என்றும், 100 நாட்கள் இந்த பரிசு குலுக்கல் நடைபெறும். மொபைல் வங்கிசேவைகள், மின்னணு வங்கிசேவைகள், ருபே அட்டை போன்ற டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் இந்த பரிசுகளைப் பெற தகுதியானவர்கள் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதியன்று அம்பேத்கர் பிறந்த நாளன்று பம்பர் பரிசு குலுக்கல் நடைபெறும். இதில் கோடிக்கணக்கான பரிசுத்தொகை வழங்கப்படும். இது போல, ‘டிஜிதன்’ வியாபார திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தாங்களே தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டு, நுகர்வோரையும் ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்துக்கு இணைய செய்தால், அவர்களுக்கென்று ஆயிரக்கணக்கில் பரிசுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களை பொருத்தமட்டில், ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும் மக்களுக்குத்தான் இந்த பலன் கிடைக்கும். ரூ.3 ஆயிரத்திற்கும் அதிகமாக பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த பரிசு கிடையாது. ஏழைகள், கீழ்மட்ட, நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தி இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அறிவித்துள்ளார். (தலையங்கம் - தினத்தந்தி, டிச – 31, 2016, மதுரை)

இதன் அறிமுக விழாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் போஸ்டர்கள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தவர்களுக்கு பிரதமர் மோடி பரிசளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது சாமானிய மக்கள் யாருக்கும் இந்த ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை பற்றி தெரியாது. அதனால் அவர்கள் இந்த சேவையை பயன்படுத்தப்போவது கிடையாது. ஆக நமது பிரதமர் மோடி அறிவித்த இந்தத் திட்டம் படித்த நடுத்தர பணக்கார மக்களுக்கு தான் போய் சேரப்போகிறது.

புதிய செல்போன் செயலி

நாட்டில் ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்தை, அதாவது மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதமாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் டிசம்பர்-30, 2016 அன்று நடைபெற்ற ‘டிஜிதன்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மின்னணு பணப்பரிமாற்றத்துக்கான ‘பீம்’ (பாரத் இன்டர்பேஸ் பார் மணி) என்ற புதிய செயலியை தொடங்கி வைத்திருக்கிறார். செல்போன் மூலம் பணம் செலுத்த உதவும் இந்த செயலிக்கு அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீமராவ் அம்பேத்கரின் நினைவாக ‘பீம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்;டுள்ளார். இந்த முறையில் பொருட்கள் வாங்குவதற்கு இணையதள வசதியுடன் கூடிய அலைபேசி இனைப்பு தேவையில்லை என்றும், ஆனால் வியாபாரிகள் ரொக்கமில்லா வணிக செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அந்த ஸ்மார்ட் போனை கைவிரல் ரேகை பதிவு கருவியுடன் இணைக்க வேண்டும். வாடிக்கையாளர் தனது ஆதார் அடையாள அட்டை எண்ணை இந்த செயலியுடன் இணைப்பதோடு, எந்த வங்கியில் உள்ள கணக்கின் மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். இதன் வழியாக பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம் என்கிறார் பிரதமர் மோடி. (தினத்தந்தி, டிச – 31, 2016, மதுரை, பக் -13)

கை பெருவிரல் ரேகை

இந்த முறையில் பொருட்கள் வாங்கி, வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களின் கை பெருவிரல் ரேகைதான் கடவுச் சொல்லாக (பாஸ்வேர்டாக) பயன்படும். மாஸ்டர் கார்டு, விசாகார்டு போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி ‘பீம் செயலி’ உதவியுடன் பொருட்களை வாங்குவோர் அதற்கான சேவை கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்காக ஸ்மார்ட் போனை வாங்க வேண்டுமே? இப்படி பார்த்தால் பிரதமர் மோடி அவர்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு ஊக்குவிக்கிறாரா? அல்லது ஸ்மார்ட் போன் வாங்க ஊக்குவிக்கிறாரா?

‘பீம் செயலி’

இந்த நிகழச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:- நாட்டில் ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில் நுகர்வோருக்கான ‘லக்கி கிரகாக் யோஜனா’ (அதிர்ஷ்ட நுகர்வோர் திட்டம்) சிறு வணிகர்களுக்கான ‘டிஜிதன் வியாபார் யோஜனா’ (டிஜி பணவர்த்தக திட்டம்) என்ற இருப்பரிசு திட்டங்களை நான் அறிவித்தேன். நாட்டில் விரைவில் அனைத்து பணப்பரிமாற்றங்களும் ‘பீம் செயலி’யின் மூலமே நடைபெறும். இந்த பீம் செல்போன் செயலி தலித்துக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் வழங்குவதாக அமையும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

புதிய ரூபாய் நோட்டு பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில் பணப்பரிமாற்றத்தை பணமில்லா பரிவர்த்தனைக்கு ஊக்குவிக்க அலைபேசியில் ‘பீம் செயலி’ என்று ஒன்றை உருவாக்கி அதற்கு ஏன் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்? தலித்துக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் வழங்குவதாக இருந்தால் புதிய ரூபாய் நோட்டில் அம்பேத்கரின் படம் இடம் பெற செய்திருக்கலாமே? அப்படி செய்யாமல் பெரும் சர்ச்சைக்குர்pய விசயத்தில் அம்பேத்கரின் பெயரை இடம்பெற செய்திருப்பது ஏனோ அது பிரதமர் மோடிக்கு தான் தெரியும்!

பாமர மக்கள் பணமில்லா பரிவர்த்தனை செய்ய முடியுமா?

பீம் ஆப் மூலம், அதிகபட்சம், ஒரு பரிவர்த்தனைக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒரு நாளில், 20 ஆயிரம் ரூபாய் வரையும் பயன்படுத்த முடிகிற இந்த செயலியில் என்னென்ன மொழிகள் இடம்பெறுகின்றன என்று பார்த்தால் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் தற்போது உள்ளது. விரைவில் பல்வேறு மொழிகளிலும் வர உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வருமா? வராதா? என்தெல்லாம் உறுதி இல்லை. இந்த செயலியை புரட்சியாளர். அம்பேத்கரின் பெயரில் தொடங்கிவிட்டு ஏழை, எளிய தலித்மக்களும், பழங்குடியின மக்களும் பயன்படுத்த முடியாத வகையில் அதன் அம்சங்கள் இருப்பது எந்த விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

பிரதமர் மோடி, போதிய புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடாமல் எப்படி அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானதோ, அதே போல தான் இந்த பீம் செயலியும் இருக்கப் போகிறது. தங்களின் அன்றாட பண தேவைகளுக்காக பாமர மக்கள் வங்கிகளின் வாசலில் நின்று இவ்வளவு நாள் கழித்தார்கள். இப்போது வரப்போகும் இந்த திட்டத்தால் ஓரளவு பத்தவர்கள் கூட யாரையாவது கெஞ்;சிக் கொண்டிருக்கப் போகிறார்கள். படித்தவர்களின் நிலைமையை இப்படி என்றால் படிக்காத பாமர மக்களின் நிலை? இதற்கு பின்னால் தான் ஒளிந்திருக்கிறது மோடியின் சூட்சமம். ஏழை, எளிய மக்களின் தலைவர்களின் பெயரால் ஒரு திட்;டம் தொடங்கப்பட்டு, அந்தத் திட்டத்தை சாமானிய மக்கள் பயன்படுத்த விடாமல் செய்வதற்கு தந்திரம் தெரிந்திருக்க வேண்டுமே?

ஆண்ட்ராய்டு போன் இல்லாவிட்டாலும் சாதாரண போனில் இருந்தும், இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் தான். இதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை தான். ஆனால் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டுமே? அப்படியென்றால் இந்தத் திட்டம் யாருக்கு?

இரண்டு வாரங்களில் ரொக்கமற்ற பரிமாற்றம்

இன்னும் இரண்டு வாரங்களில் வாடிக்கையாளரின் கைபெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் நடைபெற இருப்பதால் இது மிகவும் பாதுகாப்பான பணப்பரிமாற்ற முறை என்று சொல்லப்படுகிறது. மக்களின் கைபெருவிரல் ரேகையே இனி அவர்களுடைய வங்கியாகவும், அடையாளமாகவும், வணிகமாகவும் செயல்படப் போகிறது. இந்த முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் முறை நாடு முழுவதும் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க இருக்கிறது என்றும், அதனால் ரொக்கமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவரும் தினசரி குறைந்தபட்சம் ஐந்து மின்னணு பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். ஒரு நல்ல குடிமகன் என்றால் நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கும், மத்திய அரசு செயல்படுத்தியிருக்கும் இந்த புதிய திட்டத்தைப் பயன்படுத்தி உங்களிடம் பணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, கடன் வாங்கியாவது நாளொன்றுக்கு ஐந்து முறை ரொக்கமில்லா பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும்? அதை தான் நம் மீது அக்கறை கொண்டிருக்கிற பிரதமர் மோடி விரும்புகிறார். ஒருவேளை இவ்வாறு செய்யாமல் தவிர்த்தால் தண்டனைக்குரிய குற்றமாக மாறினாலும் மாறலாம்!

விழிப்புணர்வு பிரசாரம்

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 100 நாட்களுக்கு 100 நகரங்களில் விழிப்புணர்வு விழாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசுக்கு திட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்கும், ‘நிடி ஆயோக்’ என்கிற அமைப்பு செய்து வருகிறது.

மேலும் பீம் மொபைல் ஆப் அறிமுக விழாவில் ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசுகையில், :இன்னும் கொஞ்ச காலம்தான் இந்தியா டிஜிட்டல் மயமாகிவிடும். டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி வருகிறது. இதன் மூலம் ரொக்க பரிவர்த்தனை குறைவதால் ஊழல், லஞ்சம் போன்றவை இல்லாத சமூகமாக நாம் மாறி விடலாம்” என்கிறார். (தினமலர், டிச – 31, 2016, மதுரை, பக் - 09)

என்ன தான் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தாலும் அதை மக்கள் விரும்ப வேண்டுமே? கொஞ்ச நாள் முன்பு திறந்தவெளியில் மலம் கழிப்பது குறித்து தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மத்திய அரசு செய்து வந்தது. அதனால் இப்போது எல்லோரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை நிறுத்திவிட்டார்களா என்ன? இப்போது அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு பணமில்லா பரிவர்த்தனைக்கு வந்துவி;ட்டார்கள். அதே போல தான் அடுத்த திட்டம் வரும் வரை பிரச்சாரம் செய்வார்கள். பின்பு கிடப்பில் போட்டுவிடுவார்கள். திட்டங்களை அறிவிப்பதும், அது குறித்து பிரச்சாரம் செய்தாலே அரசின் கடமை முடிந்து விட்டது என்கிற போக்கு தானே இது. இதையும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே?

ஊக்கம் அளிக்குமா ‘டிஜிட்டல் ‘ பணப்பரிமாற்றம்?

இந்தியாவின் மக்கட்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள். அவர்கள் அனைவரும் மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு மாறிவிட்டால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக அது அமையும். இந்தியாவில் தேர்தலில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையில், நாம் இப்போது மின்னணு பணப்பரிமாற்றம் என்ற புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மிகப்பெரும் சக்தியான தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் நலிவடைந்த மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். (தினத்தந்தி, டிச – 31, 2016, மதுரை, பக் -13)

உலக நாடுகளுடன் நம் நாட்டை ஒப்பிடும் பிரதமர் மோடி எல்லா விசயத்திலும் ஒப்பிடுவாரா? இன்று உலக நாடுகளில் பல வளர்ந்த நாடுகள் என்பதை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா என்ன?

தகவல் தொழிற்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் 1990 களில் இணைய வங்கி நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெரும்பாலான பணமில்லா பரிவர்த்தனைகள் வளர்ந்த நாடுகளில் 2010 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆனால் நம் நாட்டில் தற்போது தான் இணைய வங்கி சேவையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அதுபோல பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாறுவதற்கு சில வருடங்கள் ஆகும். அதற்கு நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் கல்வி அறிவு பெற்றவர்களாக உருவாக்க வேண்டும். இல்லையென்றால் சிரமம் தான். மக்களின் வாழ்வியல் தரத்தை, அடிப்படை தேவைகளின் தரத்தை உயர்த்துவது போன்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்தாமல் உடனடியாக பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்களை மாற சொன்னால் மாறுவார்களா?

இறுதியாக...

புதிய ரூபாய் நோட்டுகள் அறிவிப்பு குறித்து பல அரசியல் கட்சிகளும் இது அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது கூட புதிய ரூபாய் நோட்டுகள் குறித்து பிரதமர் புத்தாண்டு தினத்தையொட்டி ஆற்றிய உரையில் அது குறித்த அம்சங்கள் எதுவும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மக்கள் அனைவரும் விரைவாக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறுகிறார். அப்படி அனைவரும் இந்த பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற சொல்லும் பிரதமர் மோடி அனைவருக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வழியாக இலவச சிம் கார்டுகளையும், இலவசமாக அலைபேசியையும் கொடுத்து அதன் வழியாக பணமில்லா பரிவர்த்தனை சேவைக்கு இந்த எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பையும் சேர்த்துக் கொடு;த்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதை விடுத்து பிரதமர் மோடி அவர்களே தாங்கள் ரிலையன்ஸ் கம்பெனியை சார்ந்த ஜியோ சிம் இலவசமாக வழங்க அந்த கம்பெனிக்காரர்களுக்கு தூதுவராக செயல்படுவதைப் பார்த்தால் இந்த பணமில்லா வர்த்தகத்தால் யாருக்கு கொத்துக்கொத்தாக மக்களின் பணம் போய் சேரப் போகிறது என்ற கேள்வி தான் எழுகிறது?

பிரதமர் மோடி மட்டும் இப்படியொரு திட்டத்தை அறிவித்தாரானால் அது உண்மையாகவே அவர் நாட்டு மக்களை பணமில்லா பரிவர்த்தனை வழியாக நம் நாட்டை உயர்த்த திட்டமிடுகிறார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் இங்கு நடப்பதைப் பார்த்தால் இவர் நாட்டை பொருளாதர வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படுகிறாரா? அல்லது முதலாளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படுகிறாரா? என்ற கேள்வி தான் எழுகிறது. என்னதான் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

- மு.தமிழ்ச்செல்வன்

விவரங்கள்
எழுத்தாளர்: மு.தமிழ்ச்செல்வன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2017

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (14-Jan-17, 10:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 381

சிறந்த கட்டுரைகள்

மேலே