வீரனின் காதலி
அன்பான காதலனே!
எப்படி இருக்கிறீர்கள் ?
எல்லையிலிருந்து
நித்தமும் வருகின்ற
யுத்தச்செய்திகள்
நெஞ்சை கலக்குகின்றன
உயிரைஉலுக்குகின்றன.
ஆனாலும் எனக்கு
இறைவன் மீதும்
உங்கள் மீதும்
அதிகமான நம்பிக்கை.!
எதிரிகளை வீழ்த்துவதில்
நீங்கள் வல்லவர்.
இறைவன் என்பவர்
என்னளவில் நல்லவர்
எனவே
உங்கள்ஜெயம்
நிஜமாக நிச்சயம்.
உங்களின்
நலத்திற்கும்
பலத்தற்கும்
தேசத்தாய்
திருவருள் புரிவாள்.
நீங்கள்
தேசக்காவலன் என்பதால்தான்
நான்உங்களை
என்
நேசக்காதலனாய் ஏற்றுக்கொண்டேன் !
நீங்கள்
அன்னை பாரதத்தை
கண்ணை இமைகாப்பது போல
காக்கின்ற காரணத்தால்தான்
உங்களிடம்
என்னை
ஒப்புக்கொடுத்தேன் நான்.
நானொரு
தீவிரமான
தேசபக்தைஎன்பது
உங்களுக்கும் தெரியும்தானே...?
'உனக்கு
நாடு-முக்கியமா..?
காதல் முக்கியமா '-என்ற
நிர்ப்பந்தம் ஒன்று வந்து
என்னை நெருக்குமானால்
யோசிக்கமாட்டேன்
காதலைத்துறப்பேன்.
அதுபோலவே நீங்களும்..
அப்படியொருநிலைவந்தால்
என்னை
நேசிக்க மாட்டீர்கள்
காதலைத்துறந்து விடுவீர்கள்..!
எனக்கும்
எல்லைக்கு வந்து
ஊடுரும்எதிரிகளை
சுட்டு வீழ்த்த ஆசைதான்
இயலவில்லையே..!
எனக்கொரு ஆசை
எப்போதும் உண்டு..
நீங்கள் நானாகவும்...
நான் நீங்களாகவும்
பிறந்தோமில்லையே என்று.
தேசத்தாய்க்கு
வீரசேவை புரியும்
இத்தகைய வேளைகளில்
அந்த எண்ணம்
ஆசையாய்மாறி
அவஸ்தை புரிகிறது.
அடுத்தபிறவியிலாவது
அப்படிப்பிறப்போம்!
கண்ணானகாதலனே!
காதல்உணர்வுகளை
சற்றே மறந்துவிட்டு
எல்லையில்
எதிரிகளை
விரட்டியும்-வீழ்த்தியும்
தாயகம் காப்பாற்றுங்கள்.
தொல்லை செய்வதையே
தொழிலாய் வைத்திருக்கும்
அந்த
துச்சாதனர்களை
தூரத்துரத்துங்கள்.
சிங்கத்தின்பலம்
என்னென்பதை
அந்த
சிறு நரிக்கூட்டத்திற்கு
புரியவையுங்கள்.
முதலில்
எல்லையைமீட்டு
பாரத அன்னைக்கு
வெற்றித்திலகமிடுங்கள்.
பிறகுவந்து
என்னை மீட்டு
எனக்கு
நெற்றித்திலகமிடுங்கள்.

