இந்தநிலை மாறுமா - புதுக்கவிதை

சிறைச்சாலைகள் கூட கல்விக்
கூடங்களாய் விளங்கின .
கல்விக் கூடங்களோ - இன்று
சிறைச்சாலைகளாய் மாறிவிட்டன .



சாதாரணக் கைதிகள் அரசுப் பள்ளிகள் .
முதல்வகுப்புக் கைதிகள் தனியார் பள்ளிகள் .



வகுப்பறையை நெருப்பறையாய் மாற்ற வாத்தியார்
வருவார் வார்டனைப் போல .......
கொடிய மிருகங்களாய் குழந்தைகளைப்
பயமுறுத்துகின்றன - பாட நூல்கள் ;



பாடநூல்களில் தேச விடுதலைக்காக.....
தியாகிகள் போராடுகின்றார்கள் ;
குழந்தைகளுக்கான சுதந்திரத்தை
யார் பெற்றுத் தருவது ???



பாடநூல்களில் அன்னை தெரசாக்கள் ;
ஆசீர்வதிக்கிறார்கள்;
குழந்தைகள் மீது யார் கருணை காட்டுவது ?



பாடநூல்களில் விளையாட்டு வீரர்கள்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ;
குழந்தைகளை மைதானங்களுக்கு
யார் அழைத்துப் போவது ???



பாடநூல்களில் அறிவியல் விஞ்ஞானிகள்
ஏராளம் கண்டு பிடிக்கிறார்கள் ;
குழந்தைகளின் அச்சத்தை அகற்றும்
கருவியை யார் கண்டு பிடிப்பது ???



பாடநூல்களில் விண்வெளி அடைந்து
வேறுலகம் படைத்து விட்டார்கள் .
குழந்தைகளின் மனவெளி அறிந்து
அவர்களின் உலகைப் படைப்பவர் யார் ???



பதில்களே இல்லாதப் பல கேள்விகள்
வகுப்பறை எங்கும் கொட்டிக் கிடக்கின்றன .
கேள்விக் கிடங்குகளில் மூச்சுத்
திணறுகிறாள் கவலையுடன் - கலைமகள் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jan-17, 8:44 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 88

மேலே