கனவுக்குதிரைகள்
வானத்தின் மறுபக்கம்
நீளமாகப் பாய்கின்றக்
கனவுக்குதிரைகளின் கால்களில்
கடிவாளம் இடமுடிவதில்லை.
பூமியைப்போல் புராதனம் மிக்க
வேற்றுக்கிரகமொன்றில்
எப்போதோ வாழ்ந்திருந்த
தடயங்களை தேடி விரைகின்றக்
கனவுக்குதிரைகளின் நித்திரை பாதைகளில்
கட்டாயத் தடைபோட முடிவதில்லை.
இலட்சியமில்லாமல் போராடத்தொடங்கி
லத்தி அடிவாங்கி காயப்பட்ட
அப்பாவிகளைப் போலவே
வெற்றியை மட்டும் தேடி விரைகின்ற
கனவுக் குதிரைகளை அடக்குவதென்பதில்
ஜல்லிக்கட்டுக்கான பீட்டாவைபோல
இன்னொன்று முளைத்துவிடாத
அவதானத்துடன் சீறிப் பாய்கின்றன
அவைகள்.
மரணமென்னும் முற்றுப்புள்ளி
வாழ்க்கைக் கவிதைக்கு வைத்த
முன்னொருகாலம் வாழ்ந்திருந்த
அந்த உலகத்தின்
அசுத்தமில்லாதக் காற்றும்
பளிங்குபோன்ற நன்னீரும்
காலம் தப்பாத மழையும்
பசுமை குன்றாத வனப்பும் என்று
கலப்படமில்லா இயற்கையுடன்
களங்கமிலா மனிதர்களும் வாழ்ந்த
அமைதியும் ஆனந்தமும் தேடியே
விரைகின்ற குதிரைகளின் வேகம்
குன்றவேயில்லை.
எல்லைகள் தாண்டும் குதிரைகளின்
கால்களில் மின்னலிடம் வாங்கிய
வேகத்தின் சாறூற்றி நீவிவிடத்
தோன்றுகின்ற எல்லா பொழுதுகளிலும்
ஒரு தேநீர் கோப்பையுடன் வந்து
“எழுந்திருங்கோ.. வேலைக்குப் போக”
என்னும் வார்த்தைகளின் மண்வெட்டி
குழிதோண்டிப் புதைத்து விடுகிறது அவைகளை.
*மெய்யன் நடராஜ்