சலனம் ஏன், சிறகு விரிக்க உரைநடை
சலனம் ஏன், சிறகு விரிக்க (உரைநடை)
==================================
இனி இந்த சந்திப்பு தீர்ந்து போகாது,
மரச்சட்டங்களில் அறைந்த திரையில்
உன்னை பதிகிறேன்,
என்னையும் பதிகிறேன்,
எனக்கு ஒரு உயிர் வரைகிறேன்,
உனக்கும் ஒரு உயிர் வரைகிறேன்.
இடையே சதையாலான ஒரு கயிறு வரைகிறேன்.
அது நம்மை சேர்க்கட்டும்.
எனக்கும் உனக்கும் உள்ள பந்தம் இக்கயிறு.
இதனூடே பேசிக்கொள்வோம்.
சிரிப்போம். அழுவோம் வா மித்ரா
மித்ரா ஒருமுறை சொன்னாள்
அவள் மட்டுமே விசித்திரமானவள் என்று,
ஆனால்
அவளைப்போல் விசித்தமானவர்கள்
எங்கோ காணாமல்
உலகத்தின்
மூலைமுடுக்குகளில் வசிக்கலாம்,
இதோ இப்போது
என்னைப்போலவே இயல்பில் நின்று
மீறிய குறைகளுடன் நீ.
பால்கனியில் இருந்தபடி இரவுகளில்
என்னைப்போலவே நீயும்
என்னைப்பற்றி நினைத்திருப்பாய்.
நான் வரைந்த ஓவியங்கள்
சொல்லியிருக்குந்தானே
அந்த அன்பிற்குரியவன் நீதான் என்று.
நீயும் என்னைப்போலவே
விசித்திரம் நிறைந்தவன் தான் போ
கனவில்
நீ எங்கோ காணாமல் போய்விட்டாய்.
நான், நாம்
இருவரும் சேர்ந்திருக்கும்
ஆல்பம் காண்பித்து
எல்லோரிடமும் விசாரிக்கிறேன்.
ஆம் அந்த இரவு விடிந்துவிட்டது.
காப்பியின் சுவையில்
உன் துழாவல் இருந்தது.
படுக்கைக்கு முன்னால்தான்
நீ ஆதர்ஷமாய் சிரித்தபடி
சுவற்றில் தொங்கி கொண்டிருந்தாய்.
அருகில் நான்
உன் கேசம் கோதி நின்றிருந்தேன்.
உனக்கு எத்தனை அழகான சுருள் கேசம்,
கள்ளமாய் விசாரித்தேன்,
நீ மித்ராவைவிட்டு போய்விடுவாயா
உன்னால் முடியுமா என்று
அன்பு மித்ரா,
அன்று நாம் நண்பர்காகியிருந்தோம்,
நம் தொடுதலுக்குள்
கூச்சம் இருந்ததில்லை,
பின்பொருநாள்,
உன் வெள்ளைத்தாட்களை நிறமாக்கிய
கருத்த திருடன் நான் என்பாய்,
நானேதான் போ
உனக்குப்பிடித்த சிகரெட்டுமாய்
உன் முற்றத்து சாய்க்கதிரையில்
நினைவுகளுமாய் இருக்கிறேன்,
போ, அவைகளின் மடியேறி இருந்துகொள்.
இரவிற்கு இன்னும்
அற்ப நேரந்தான் இருக்கிறது.
இனி இந்த இரவிற்கு உன்னைவிட துணை
அந்த நினைவுகளுக்கு
வேறெதுவும் இதமாக இருக்கப்போவதில்லை.
அவைகளை ஒருநேரம்
ரோமாஞ்சனம் என்று அழைத்துக்கொள்,
சிலநேரங்கள் சிலநாட்கள்
சலிப்புத் தோன்றும் என்றால்
நித்ய வசந்தம் என்று அழைத்துக்கொள்.
என் கண்களை நேரிடும் சக்தியில்லாதவளுக்கு,
அவைகளோடு பேச
ஆயிரம் கதைகள் இருக்கும். பேசிக்கொள் ...
அவைகளுக்கு உன் கைகளை,
அவைகளின் கைகளுக்குள்
இறுகப்பொத்திக்கொள்ள வேண்டுமாய் இருக்கும்
அனுமதித்துக்கொள்.
மடிந்துகொண்டிருக்கும் இரவு
விடியும்வரை உன் தோள் வழங்கு
அவைகள் சாய்ந்துகொள்ளட்டும்
மினுக்களுடன் வெள்ளியோடை களியாடி
வென்று தோற்கும்வரை
அவைகளோடு பேசிக்கொண்டிரு.
கண்மூடி அவைகளை கவிதைகள் சொல்லவிடு.
நெஞ்சின் ஆழம்வரை இருத்தி
அவைகளை சொல்லவிடு.
இந்த இரவில் மித்ரா,
நீ என் நினைவுகளோடு பேசுவதைக்
கேட்டுக்கொண்டிருக்கும் சுவர்களுக்கு
காது முளைக்கலாம்.
பயப்படாதே
அந்த சுவர்களில்,
உன்னை வியாபித்திருக்கும்
எல்லா சூழல்களில், என்னை எழுதிவிட்டேன்,
உன்னிலும் என்னை எழுதிவிட்டேன்,
உன் கண்கொண்டு காணும் அகலம்வரை
என்னை நிறைத்துவிட்டேன்.
ஆம் நாளை
நீ என் கண்களை நேரிட்டுப்பேசக்கூடும்,
அவைகளை நேரிடும் நான் தான்,
வெட்கப்படும் முதல் ஆணாக
உலகத்தில் இருக்கப்போகிறேன்போல்,
என்றாவது உன் மிருதி
உன்னினின்று பிரிகையில்,
நீ என்னைத் தொலைத்துவிடலாம்
நீ அழுதால் உன் கண்களைத்துடைப்பதற்கு,
உன் தனிமையின்போது
சாய்ந்துகொள்ள தோள் வழங்குவதற்கு,
நீ சிரித்தால்
கூடசேர்ந்து சிரிப்பதற்கு,
நீ மறந்த நினைவுகளுமாய்,
உன் செவிகளுக்கு
கேட்காத முனங்கல்களுமாய்,
அழுகையும் சிரிப்புமாய் திரிகிறேன்
மித்ரா ,,,
யாரேனும் என் பெயரை உனக்கு நினைவுப்படுத்தலாம்
உன் அலமாரியிலிருக்கும்
பிரதியழிந்த புகைப்படங்களை எடுத்து
இவரைத் தெரியுமா என்று அந்த யாரோ கேட்கலாம்
நிறைந்த காலங்களுக்குப்பின்னால்
என் டைரியை நானோ இல்லை
எனக்குப்பின்னால்
எடுத்து வாசிக்கும் இரண்டாம் நபர் யாரோ
நமைக்குறித்த நிகழ்வுகளை
கதைக்களம் செய்யலாம்
அப்போது
என் பெயர் உன் செவிகளில் ஒலிக்கக்கூடும்
சலனப்படாதே
உன் விழிகள் நம் வாழ்க்கையை
மீண்டும் வாசிக்கக்கூடும்
சலனப்படாதே
உன் நெஞ்சாழத்தின் ஒரு மூலையில்
சமாதியாகிவிட்ட நானும், என் நினைவுகளும்
அதுவரையான
தனிமையின் சப்தங்களுடன்
கல்லறை உடைத்த நிராசைகளாய்
ஒரு காரிருளில்
வெளுத்த உடையணிந்த
என் காட்சிகள்
நீ வாழும் காலங்களோடு பயணிக்கக்கூடும்
சலனப்படாதே
நம் பாத அச்சுகளுள்ள
என் ஓவியத்திரைகளைத்தேடி
உன் மீள் மிருதிகள்
நீ வாழும் காலங்களோடு பயணிக்கக்கூடும்
சலனப்படாதே
நீ வாசிக்கும் நம் வாழ்க்கை சுமந்த நாவலை
உன் கண்ணீர் நனைக்கக்கூடும்
சலனப்படாதே
"பூக்காரன் கவிதைகள்"