உலகத்துக்கு ஐந்து சவால்கள்
எழுதியவர் : மருதன்
கட்டுரை :ஆனந்த விகடன்
டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையோடு பிறந்திருக்கிறது 2017. சர்வதேச அரசியல் எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பதற்கு ட்ரம்ப்பின் வருகை மிக முக்கியமான குறியீடு. 2017-ம் ஆண்டில் உலகம் மிக முக்கியமான ஐந்து பிரச்னைகளைச் சந்திக்க இருக்கிறது. எதிர்காலம் என்பது இறந்த காலத்தின் தொடர்ச்சியே என்பதால், சென்ற ஆண்டின் தீர்க்கப்படாத பிரச்னைகள் அனைத்தும் இந்த ஆண்டு மேலும் பலம்பெற்று, நம்மை அச்சுறுத்தும். இந்த அச்சுறுத்தலைப் போக்க என்ன வழி?
போரும்... சமாதானமும்...
‘வரலாறு காணாத கிரிமினல் தாக்குதல்கள் சிரியாவின் மீது நடத்தப்பட்டுள்ளன’ என ஒப்புக்கொள்கிறது ஐ.நா சபை. சிரியாவின் மிகப் பெரிய நகரம் அலெப்போ முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. `தி எக்கனாமிஸ்ட்' குறிப்பிடுவதைப்போல் அழிக்கப்பட்டதன் மூலம் பிரபலம் அடைந்த ஒரு பிரதேசமாக அலெப்போ இன்று மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்; காணாமல் போயிருக்கிறார்கள். மனிதர்களோடு சேர்ந்து ஆயிரம் ஆண்டுகால இஸ்லாமியப் பாரம்பர்யமும் அழிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளன.
ஏன் இந்த அழிவு ஏற்பட்டது? எதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் இறக்க வேண்டும்? இதற்குக் காரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமா அல்லது ஆளும் ஆசாத் அரசாங்கமா அல்லது அவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி போர் விமானங்களை அனுப்பி, மேலும் அழிவைத் துரிதப்படுத்திய ரஷ்யாவா, அல்லது மூவருமா? இந்தக் கேள்விகளைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு ஓர் அடிப்படை உண்மையை ஒப்புக்கொள்வோம். சிரியா, நம் கண் முன்னால் அழிந்திருக்கிறது. நம் கண் முன்னால் அலன் குர்தியின் குழந்தை உடலை, கடல் அலைகள் கொண்டுவந்து தள்ளியிருக்கின்றன. நம் கண் முன்னால் ஒரு தேசம் அழிந்திருக்கிறது.
நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிரியாவை ஏமாற்றியிருக்கிறோம். 2016-ம் ஆண்டு நமக்குப் போதித்திருக்கும் அச்சுறுத்தும் உண்மை இதுதான். உலகம் மூர்க்கமானது. எப்போதும், எங்கும் போர் மூளலாம். கழுத்தை அறுத்துக் கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகள் மட்டும் அல்ல, ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் அரசாங்கங்களாலும் அப்பாவி மக்களைப் பாரபட்சம் இன்றி கொல்லமுடியும் என்பதை அலெப்போ நிரூபித்திருக்கிறது. மேற்கத்திய நாடுகள் மேலானவை, ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற மாண்புகளை உயர்த்திப்பிடிப்பவை எனும் நம்பிக்கையை அலெப்போ உடைத்து எறிந்திருக்கிறது. அலெப்போவின் அழிவுக்குக் காரணம் ‘நமக்கு என்ன?’ என்னும் மனநிலை. ‘எங்கோ, யாருக்கோ நடைபெறும் அநீதி என்னையும் என் குடும்பத்தையும் பாதிக்காது’ என்னும் சமாதானம். இந்தச் சமாதானம் போரையும் அழிவையும்தான் ஏற்படுத்தும் என்பதை 2016-ம் ஆண்டு உணர்த்துகிறது. இந்த மனநிலையை இந்த ஆண்டாவது உதறித்தள்ள முடியுமா?
பெருகும் வேலிகள்
அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல உலகத்துக்கே ட்ரம்ப்பின் வெற்றி என்பது சுயநலத்தின் வெற்றி. நான் ஏன் மற்றவர்களுக்காகப் பாரம் சுமக்க வேண்டும் என்னும் சலிப்பின் வெற்றி. என் வளம், என் நாடு, என் எல்லை என்னும் தேசியப் பெருமிதத்தின் வெற்றியும்கூட.
ஐரோப்பிய யூனியனிடம் இருந்து துண்டித்துக்கொண்டதன் மூலம் பிரிட்டன் தெரிவித்திருக்கும் செய்தி, ட்ரம்ம்பின் செய்தியோடு ஒன்றிப்போகிறது. ‘உங்களுக்கு லாபம் கிடைக்காத எந்தக் கூட்டமைப்பிலும் நீங்கள் அங்கம்வகிக்கத் தேவை இல்லை. மற்றவர்களுடன் உங்கள் செல்வத்தைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை.’ `உலகமே ஒரு கிராமம்’ என்பது உலகமயமாக்கலின் முழக்கம் என்றால், பிரெக்ஸிட்டின் முழக்கம் அதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, மக்களில் ஒரு பெரும் பகுதியினரும்கூட நாம் நன்றாக இருந்தால் போதும் எனும் மனநிலையைத் தழுவிக்கொண்டதையே பிரெக்ஸிட் உணர்த்துகிறது. இந்த உணர்வை அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் மேலும் வளர்த்து எடுப்பார்கள். பிரெக்ஸிட் மாடலை நாமும் பின்பற்றுவோம் என மற்ற நாடுகளும் யோசிக்கும். புத்தாண்டின் ஆகப் பெரிய சவால் இதுதான். நாம் மேலும் மேலும் வேலிகளை உருவாக்கிக்கொண்டே போகப்போகிறோமா அல்லது பாலங்கள் அமைக்கப் போகிறோமா?
கூர்மை அடையும் ஏற்றத்தாழ்வுகள்
அரசின் தலையீடு சிறிதும் இன்றி சந்தை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்னும் நியோ லிபரல் சித்தாந்தம் 80-களில் ஆரவாரத்துடன் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. மக்களுக்கான பொதுச்சேவைகளை அரசு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பதிலாகத் தனியார்களையே அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர். பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும் இந்த வழிமுறைகளை ஏற்று, புதிய நியோலிபரல் பொருளாதார அமைப்பை நிறுவினார்கள். இந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.
ஆனால், சமீபத்திய பல ஆய்வுகள் இரண்டு உண்மைகளை விரிவான புள்ளிவிவரங்களோடு உணர்த்துகின்றன. முதலாவது, நியோலிபரல் கொள்கை வளத்தைவிட வறுமையையே உலகில் அதிகம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இரண்டாவது, மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்குச் சாதகமாகவும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நியோலிபரல் பொருளாதாரம் இயங்குகிறது. குறிப்பிட்ட சில பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை ஒட்டுமொத்தத் தொழில் துறையின் வளர்ச்சியாகக்கொள்ள முடியாது. சில முன்னேறிய நாடுகள் ஈட்டிய வளத்தைக்கொண்டு நியோலிபரல் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கும் எல்லா நாடுகளும் வளம்பெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதை இடதுசாரிகள் மட்டும் அல்ல, பில் கேட்ஸ், வாரன் பஃபெட் தொடங்கி பல பெரும் பணக்காரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். நிக் ஹானெவர் எனும் அமெரிக்கத் தொழில்முனைவோர் சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்... ‘ஒரே ஒரு சதவிதம் பேர் மட்டும்தான் கற்பனைக்கும் எட்டாத அளவுக்குப் பெரும் செல்வம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மீதம் உள்ள 99 சதவிகிதம் பேர் அவர்கள் மீதான தீராத வெறுப்புடன் இருக்கிறார்கள்'. எனில், அரசாங்கம் யாருக்காகச் செயல்பட வேண்டும்? மிகப் பெரும்பான்மையினரான 99 சதவிகித மக்களுக்காகவா அல்லது ஒரு சதவிகிதத்தினருக்காகவா? ஏற்கெனவே கூர்மை அடைந்திருக்கும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய அரசாங்கங்கள் என்ன செய்ய உத்தேசித்திருக்கின்றன?
அதிகாரமும்... அலட்சியமும்...
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் வலதுசாரிகள் பலம்பெற்றுவிட்டனர். இராக்கில் முதலாளித்துவம் நிலைபெற்றுவிட்டது. ரஷ்யாவில் இருப்பது ஒரு வகையான கேங்ஸ்டர் முதலாளித்துவம். மத்திய ஆசியாவில் உள்ள அதிபர்கள் எல்லாம் கிட்டத்தட்ட வாழ்நாள் ஆட்சியாளர்களாக நிரந்தரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர். முடியாட்சி, நிலப்பிரபுத்துவச் சிந்தனையுடன் அலட்சியமாகச் செயல்பட்டும் ஆட்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஜனநாயக உணர்வுகளுக்கும் லிபரல் சிந்தனைகளுக்குமான வெளி முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது குறைந்துவருகிறது. ஜனநாயகம் என்பதற்கான பொருளே இன்று முற்றிலுமாகத் திரிந்துவிட்டது. பாகிஸ்தானும் இராக்கும் ஆப்கானிஸ்தானும் சிரியாவும் ஜனநாயக, குடியரசு நாடுகள் என்றுதான் தங்களை அறிவித்துக்கொள்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயகம் தேர்ந்தெடுத்த ஓர் அதிபர். ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படிதான் பிரெக்ஸிட் நடைபெற்றிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் உள்ளவர்கள் கூடிப் பேசி விவாதித்துதான் இன்னொரு ஜனநாயக நாட்டின் மீது குண்டுகளைப் போடுகிறார்கள். எனில், ஜனநாயகம் என்பதன் பொருளை இவர்கள் எவ்வாறு அர்த்தப்படுத்துகிறார்கள், மக்களாட்சி என்பதை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்... இந்தக் கேள்விகளுக்கு இந்த ஆண்டாவது நாம் தெளிவான விடைகளைக் கண்டறிய வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலேயே ஒரு பிரதமர் அல்லது அதிபர், தான் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியாது. பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஒருவர் சர்வாதிகாரியாக மாறிவிட மாட்டார். ஆனால், இன்று பல ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை இப்படித்தான் புரிந்துவைத்திருக் கின்றனர். என்ன வேண்டுமானாலும் செய்வதற்கான அதிகாரத்தை, தேர்தல் வெற்றி உங்களுக்கு அளித்துவிடவில்லை என்பதை, ஆட்சியாளர்களுக்கு மக்கள் அழுத்தமாக உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. போராடுவதற்கான வலுவை வளர்த்துக்கொள்வது.
அதிகரிக்கும் வெறுப்பு அரசியல்
ட்ரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவில் இன, நிற, வர்க்கப் பாகுபாடுகள் மேலும் கூர்மையடையும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கான தெளிவான அறிகுறிகள் சென்ற ஆண்டு இறுதியிலேயே தெரிந்துவிட்டன. அமெரிக்காவில் மட்டும் அல்ல பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, இந்தியா... போன்ற பல நாடுகளிலும் பாகுபாடுகள் அதிகரித்துவருகின்றன. இங்கு உள்ள அரசாங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மை மக்களின் அரசாங்கமாகச் செயல்பட்டுவருவதும், இந்த நிலை ஏற்பட்டதற்கு ஒரு காரணம். சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அகற்றுவதற்குப் பதிலாக அவற்றை மேலும் வளர்த்து எடுத்து அரசியல் ஆதாயம் அடைந்துவருகிறார்கள் அரசியல் தலைவர்கள். டொனால்ட் ட்ரம்ப் ஓர் உதாரணம் மட்டுமே. தங்களுடைய வெற்றிக்கு அவர்கள் வெறுப்பு அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பாதிப்பு எப்போதும்போல் மக்களுக்குத்தான். இந்த நிலை மாற, பெரும்பான்மை வாதத்தையும் வெறுப்பு அரசியலையும் முறியடிப்பதற்கான வழிமுறைகளை நாம் உடனடியாகக் கண்டறிய வேண்டும்!
நன்றி
ஆனந்த விகடன்