விளையாடு தமிழா தமிழோடு - இன்னிசை வெண்பாக்கள்
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி . தமிழ்நாடு . இந்தியா .
செந்தமிழ் வாழவே செப்பிடு மானிடா
பைந்தமிழ்ப் போற்றிப் பசுமையான கீதமே
தீந்தமிழ்ச் சொற்களால் தீண்டிட வேண்டுமாய்
தெள்ளுதமிழ்ப் பேசினால் தெம்பு .
வாழிய செந்தமிழ் வாழியவே எந்நாளும்
நாழிகை தோறுமாய் நம்மு நிற்கவே
ஊழியம் செய்வோ முவந்து மகிழவே
ஆழியாய் மாந்துக அன்பு .
நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்போம்
பனியென வந்திடும் பாவங்கள் நீங்க
தனித்தமிழ் வேண்டியே தாபிப்போம் நாளும்
இனியாவும் நன்மையே ஈங்கு .
சங்குகொண்டே ஓதுவோம் சந்ததி மேம்பட
பங்கிடவே உண்டோ பரவச செந்தமிழை
மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் பைந்தமிழ்
தங்கிடுமே நாட்டில் தழைத்து .
செந்தமிழில் தந்திடும் செம்மை விளையாட்டாம்
பைந்தமிழ்ப் பேசுதல் பாசத்தின் சான்றாகும்
தீந்தமிழ்ச் சொல்லெடுத்துத் தீண்டிடுவோம் நாளும்நாம்
மாந்திடுவோம் செந்தமிழர் மண் .

