சினம் வேண்டாம் சிறுவனே

கருங்கல்மேல் உறங்குகின்றாய்
------- கவலைகளே பூமுகத்தில்
உருகாதோ தாயுள்ளம்
------- உணர்வாயே கண்ணாநீ
மருகாதே மனத்துள்ளே
------ மகனேநீ சென்றிடுவாய் !
திருநாளாம் உன்வரவு
------- திரும்பிச்செல் வீடுநோக்கி !


மழலைமொழிக் கேட்டிடவே
------- மனத்தின்கண் பாரமது
உழலாது குறைந்திடுமே .
------- உன்அன்னைத் தேடிடுவாள்
தழலாக சினம்வேண்டாம்
-------- தளிரேநீ சிரித்திடுவாய் !
பழங்களுமே உனக்காகப்
------- பங்கிடுவாள் இல்லம்செல் !!!


மின்னுகின்ற பூச்சிபோலே
------- மின்னுகின்றாய் நீயுந்தான்
உன்னுடைய அழகுருவம்
------- உண்மையிலே கேட்டுவிடும் .
மன்மதனாய் இருந்திடுவாய்
------- மகனாகத் தாய்க்காக .
உன்பதிலை எதிர்பார்த்து
------- உரிமையுடன் காத்திருப்பாள் !!!!


சினம்வேண்டாம் சிறுவனேநீ
------- சிந்தையிலே வைத்துக்கொள் .
மனம்முழுதும் இன்பமுடன்
------- மங்காது வாழ்ந்திடுவாய் .
தினந்தினமும் சுகம்தானே
------- திருந்திவிடு பாலகனே !
வனவாசம் உனக்கெதற்கு
------- வளமான வாழ்வுனக்கே !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Feb-17, 11:53 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 49

மேலே