யாசிப்போம் இயற்கையினை --- மரபு கவிதை
இயற்கைதரும் இதமான
----- இன்பங்கள் வேண்டுமன்றோ .
செயற்கைதனைப் பெருக்கினாலே
------ சேர்ந்திடுமே கழிவுகளும் .
மயக்கமான அந்திமாலை
------ மலையோரம் காற்றுவாங்கத்
தயக்கமுமேன் மானிடா
------- தளராதே வாழ்வதற்கு .!!!
கடலலையின் ஓசையோடு
------ கன்னியவள் காத்திருக்க
மடல்பலவும் எழுதிடலாம்
------- மரங்களிலே இதயத்தை
விடலைபோல் செதுக்கிடலாம்
------- விளக்கிடுமே காதலையும்
உடல்சூடுத் தணிந்திடவே
------- உறவாடும் கடற்கரையே !!!!
மரம்நடுவில் கடலழகு
------ மங்கையவள் இதழ்போலே
விரலிடையே பள்ளம்போல்
------- விந்தையான மலையழகு .
உரம்போட்டு வளர்க்கவில்லை
------- உருவான கரைமரங்கள்
சிரந்தாழ்த்தி வணங்கிடுவோம்
-------- சிறப்பான இயற்கையினை .
யாசிப்போம் இயற்கையினை
------- யாவருக்கும் பொதுவென்றே !
காசினியில் இயற்கையினைக்
------- கண்குளிரக் கண்டிடலாம் .
பாசிபடர் குளத்தினையும்
------- பசுமையாக்கி மகிழ்ந்திடுவோம்
மாசிலா இயற்கையினை
------- மாசுகளாய் மாற்றாதீர் !!!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்