சாரல்
வான் தேடும் நிலவுகள்
நிந்தி தவம் செய்து
தொந்தி சரிய எனைத்தாங்கி
பந்தி பரிவட்டம் தவிர்த்து
ஐந்தி லிருமாதமாய்
அனுபவித்த துன்பங்களை
அணுவளவும் பகின்றிட
அடியேனால் முடியாது - என்றாலும்
மனதின் முனகலை
மன்றாடி உரைக்கின்றேன்.
புட்டிப்பாலோடு புரண்டு தவித்து
அழுது புரண்டு கைசூப்பி நின்றதனை
கலைந்து விட்டு கடைந்த சோற்றை
ஊட்டிவிட அருகில் இல்லையே - அம்மா
தத்தி தவழ்ந்து தவறி விழும் போது
தாங்கிப் பிடித்திட
என்றுதான் வருவாய் அப்பா .
கதைகள் பல கூறி
கணீரென்று நான் சிரிக்க
உறவில் ஒரு மூதாட்டியும்
என்னோடு இல்லையே .
பாசத்தின் துளியும்
பரிவின் நிழலும் - இன்றும்
இரவல் தாயிடம்
எஙகள் வீட்டுப் பணிப்பெண்ணாக.
இழப்பதற்கு ்ஒன்றும் இல்லை ஏங்கும்
பிள்ளைக்கு
இரைத்துவிடு இனிய சொல்லை
இரவும் தனிமையும் எனை வாட்டும்
இன்னா செயலும் எனை விரட்டும்
இல்லாது போகும் என்னோடு - இருக்கையில்
செல்வத்தை மீட்டுவோரே -மழலை
செல்வத்தை மீட்டிப்பார் இனிய
தென்றலாய் உன்னை உரசும்
மடியில் சாய்ந்து, மனதை தடவும் ,
அரவணைத்து தரும் ஆசை முத்தமும் ,
வயிறு கண்டு வாஞ்சையோடு வழஙகும்
- அமுதமும்
இளவயதானாலும் இன்றும் தேடும்
நிலாச் சோறும்
தோளைத்தட்டித் தாங்கும் தோழமையும்
முகத்தை பார்த்து முகர்ந்து பார்த்து
-தவற்றை
கண்டித்து தண்டிக்கும் தழலாகவும்
-இருந்தால்
கடைக்கு கோடி கண்ணீரும்
காணாமல் போய்விடுமே.
இன்னலோடு நித்தமும்
இரவும் பகலும் போராடி
பொய்முகம் காட்டி
பொறுமையோடு வாதாடி
கணினி யுகத்தில்
சுழன்றுத் தவிக்கும்
எனதருமை பெற்றோரே
உஙகள் குறுத்தளிர்
உஙகள் வீட்டில் வாடுகிறேன் .
வசதியில்லாமலா -இல்லை .
உன் வாசமில்லாமல் .
கலைந்த கனவுகளா? வாழும் நினைவுகளா?
எல்லாம் உஙகள் கையில் .