உலக வானொலி தினம் - பிப்ரவரி 13
யுனெஸ்கோவின் 36வது மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் கோரிக்கையை ஏற்று உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13ம் நாள் கொண்டாடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி மார்க்கோனி என்பவரால் 1888 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கம்பியில்லா ரேடியோ சிக்னல் தொழில்நுட்பம், 1901 முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்தியாவில் அகில இந்திய வானொலி நிலையம் 1930ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது முதல் நம் நாட்டின் செய்தித் தொடர்பு சாதனமாக முதலிடம் வகிக்கிறது. செய்தித்தாள் மற்றும் வானொலி மூலம் மட்டுமே செய்திகள் மக்களைச் சென்றடைந்தன.
1959ம் ஆண்டு மத்திய அரசு தொலைக்காட்சி சேவையை துவங்கியது. அது முதல் தூதர்ஷன் என அறியப்பட்ட தொலைக்காட்சி சேவை செய்தித்துறையில் முக்கிய பங்கு வகித்தது.
1997 ம் ஆண்டில் இயற்றப்பட்ட பிரசார் பாரதி சட்டம் இயற்றப்பட்டு அதுமுதல் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பிரசார் பாரதி அமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன.
உலக மயமாக்கலின் காரணமாக 1993 ம் ஆண்டில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் பின் இன்றைய தேதியில் மொத்தம் 857 தொலைக்காட்சி சேனல்களும் அவற்றில் 190க்கும் அதிகமான அரசு சேனல்களும் உள்ளன.
தொலைக்காட்சிகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் வானொலிகளை மறந்து விட்ட சூழ்நிலையில் தனியார் பண்பலை வரிசையில் வானொலி ஒளிபரப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்ட பின் வானொலிக்கு மீண்டும் ரசிகர்கள் உருவானார்கள்.
கொழும்பு சர்வதேச வானொலி எனப்படும் (தற்போது சிலோன் ரேடியோ) வானொலி ஆசியாவின் முதல் வானொலியாக 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிறுவயதில் கொழும்பு வானொலியில் பி.எச். அப்துல் ஹமீது அவர்களின் சிம்மக்குரலையும், கே.எஸ். ராஜா அவர்களின் தொகுப்பிலும் ஒளிபரப்பப்படும் திரையிசைப் பாடல்களையும் கேட்டு வளர்ந்தவன் நான். தூய தமிழைக் கேட்க விரும்புபவர்களுக்கு கொழும்பு சர்வதேச வானொலியின் தமிழ் ஒளிபரப்பு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
இசைமுரசு நாகூர் அனிபா அவர்கள் பாடிய உலகப்புகழ் பெற்ற “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலையும், அன்னை வேளாங்கண்ணி (1971) என்ற படத்தில் இடம்பெற்ற கிருஷ்ணராஜ் என்பவரால் பாடப்பட்ட “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற பாடல்கள் தினமும் காலையில் கேட்டு வந்தது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட பாடல்கள் முறையே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதப் பாடல்களாக இருந்தாலும் மத பேதமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வீட்டை விட்டு பெண்களை வெளியே அனுமதிக்காத கட்டுப்பாடு மிகுந்த சூழலில் வீட்டிலிருக்கும் பெண்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு வானொலியில் திரையிசைப் பாடல்களைக் கேட்பதுதான்.
அதிலும் 80களில் திரையிசைப் பாடல்களில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் வானொலி நிகழ்வுகளை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டன. அவற்றில் சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சவுந்தர்ராஜன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.ஜே. ஏசுதாஸ், ஜென்சி ஆண்டனி, பி. சுசீலா, எஸ். ஜானகி, எஸ்.பி. பாலசுப்பிரமணியன், மலேசியா வாசுதேவன், கங்கை அமரன், ஜெயச்சந்திரன், எல்.ஆர். ஈஸ்வரி, சித்ரா, சுவர்ணலதா போன்ற பாடகர்களின் குரலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.
ஆகாஸ்வாணி செய்திகள் வாசிப்பது என்ற கம்பீரக் குரலிலுக்குச் சொந்தக்காரரான திருமதி. சரோஜ் நாராயண் சுவாமி அவர்கள் வாசிக்கும் செய்திகளுக்காக தமிழக மக்கள் காத்திருந்த காலம் உண்டு.
அகில இந்திய வானொலியின் துணை இயக்குநர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லையென்றாலும் அவரது “இன்று ஒரு தகவல்” என்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய தகவல்கள் புதுமையாகவும், எளிமையாகவும் படிக்காத பாரமரர்களுக்கும் சென்றடைந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்றதை அகில இந்திய வானொலியில் அறிவிக்கும் வாய்ப்பு பெற்ற பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்
30 தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இணையதள வானொலி நிலையங்கள் உலகின் எந்த மூலையிலிருந்து நிகழ்ச்சிகள் கேட்கும் வகையில் இயங்குகின்றன.
தற்போது சுமார் 20 நாடுகளில் தமிழ் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. ஆங்கிலத்திற்கு அடுத்ததாக அதிக மொழிகளில் இயக்கப்படும் வானொலி நிலையங்கள் தமிழ் வானொலி நிலையங்கள் என்று நினைக்கிறேன். உலகில் அதிகம் மக்களால் பேசப்படும் பழமையான மொழிகளில் தமிழ் மொழி முதலிடம் வகிப்பதாக தெரிகிறது.
டி.வி. பார்ப்பதை விட ரேடியோ கேட்பது எளிது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், வாகனத்தில் பயணிக்கும்போதும் இடையூறு இல்லாமல் ரேடியோ கேட்கலாம். தற்போது செல்போன்களிலேயே பண்பலை வானொலி ஒளிபரப்புகளை கேட்கலாம்.
கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை