ஆற்றிலும் சேற்றிலும்

ஆழமாக யோசிக்க கற்றிருக்கிறேன்
ஆனாலும் அதன் எல்லைகளை
நோக்கி கால்களை நகர்த்த
பயமாகவே இருக்கிறது

நான் எதை எல்லாம்
வாழ்கை என கருதினேனோ
எதை எல்லாம்
மகிழ்ச்சி என எண்ணினேனோ
அது அனைத்தையும்
எந்த காரணமும் இல்லாமல்
அழிக்க தூண்டுகிறது
அந்த ஞான நிலை

சரியாய்
ஆற்றிலும் சேற்றிலும்
ஒரு கால் வைத்திருக்கிறேன்
சேற்றிலேயே இரு
காலம் வரும் என
சாத்தானின் பாம்பு
கழுத்தை சுற்றியபடி வேதம் ஓதுகிறது
அதன் மகுடிக்கு வீழும் ஏவால் போல்
ஆப்பிளையே நோட்டமிடுகிறது
பல நேரங்களில் மனம்

இருந்தும் என்னையறியாது
பலநேரங்களில்
நான் புத்தனுக்கும் ஏசுவுக்கு கூட
சரிசமமாய் மாறி இருக்கிறேன்
இல்லையேல்
அதே
புத்தனுக்கும் ஏசுவுக்கும் சாத்தானுக்கும்
சவால் விடும்
வேறு ஒரு நிலைக்கும்
தாவியிருக்கிறேன்
அந்த ஆழ்ந்த சிந்தனையில்

நான் விரைவிலேயே
எதுவாகவோ அவதாரம் எடுக்கலாம்
அல்லது
எங்கும் தென்படாத
அந்த எல்லாமாகவும் மாறலாம்

ஆதலால் தான் அஞ்சுகிறேன்
பல முறை கெஞ்சுகிறேன்
யோசிக்கவும்
அந்த ஆழ்ந்த யோசனைகளிடமும்

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (21-Feb-17, 10:24 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 103

மேலே