கவிதையைத் தெரியுமா

பலநூறு கவிதைகளைப்
படித்திருந்தும்,படைத்திருந்தும்
சிலநூறே மனமிருக்கும்,
சிந்தனையில் நிலைத்திருக்கும்!

உள்ளத்தின் ஆழம்தொடும்
உண்மை கவிதைகளைத்
தள்ளிவிட முடியாது!
தவிர்த்திடவும் இயலாது!

கவிதை பிறக்குமிடம்
கனவினிலும் கிட்டாது!
கவிஞன் எழுதுகிறான்,
காரணமும் தெரியாது!

தன்பேர் பதித்திடவா?
தம்பட்டம் அடித்திடவா?
முன்பின் தெரியாத
முகத்தினர்க்கு அறிவுரையா?

கோபத்தால் வருகிறதா?
கோளாறால் வருகிறதா?
சாபத்தை வார்த்தையிலே
சமைக்கின்ற ஒருசெயலா?

காதலால் வருகிறதா?
கலக்கத்தால் வருகிறதா?
மோதலால் வருகிறதா?
மொழியறிவால் உதிக்கிறதா?

அழும்போது வருகிறதா?
அவசரத்தில் வருகிறதா?
விழும்போது வருகிறதா?
விந்தையாகப் பிறக்கிறதா?

இன்னுமின்னும் எதனாலோ
எப்படியோ வருகிறதோ?
சொர்க்கத்தின் மொழிதானோ?!..
சொன்னவர்கள் யாருமில்லை

இலக்கணப் புலமைக்கும்
இன்னபிற அறிவிற்கும்
நிலைக்கும் கவிதைசெய்ய
நிலையென்றும் வாய்க்காது!

இயற்கையாய்த் தோன்றுகின்ற
இனிமையான இசைபோல
வியக்கவைக்கும் நமைமயக்கும்
விதையாக விளைந்துவரும்..

வாருங்கள் கவிதைசெய்வோம்
வாழ்க்கையை பாடிவைப்போம்
வளங்களைக் கூட்டியிங்கே
வருங்காலம் மகிழசெய்வோம்!

அ.மு.நௌபல் எ அபி

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (26-Feb-17, 9:20 am)
பார்வை : 190

மேலே