முதியோரைப் பேணுங்கள்
நட்டுவைத்த வாழைமரம்
----- நடமாடும் மூதாட்டி
விட்டுவிட்டுச் சொந்தங்கள்
----- விலைபேசும் சமுதாயம் !
கட்டுடலைக் கொண்டவளும்
----- கண்மயங்கிக் கிடந்திடவே
பட்டமரம் என்றவரைப்
----- பரிதவிக்க விட்டனரே !
தொட்டுவிட்டுப் போகுமெனத்
----- தொல்லுலகில் மானிடரை
வட்டமானக் கண்களுடன்
----- வாடிப்போய்த் தேடுகின்றாள் !
குட்டைமரம் பேணுகின்றார்
------ கூன்விழுந்த முதியவளை
திட்டிவிட்டுச் செல்கின்றார்
------ தீண்டிடவும் மறுக்கின்றார் !
சுட்டெரிக்கும் கதிரோனும்
------ சுமக்கின்றான் தீக்கதிரை
திட்டங்கள் திட்டுகின்றார்
------ திரும்பியுமே பார்ப்பதில்லை !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்