போராட்டம் எதை நோக்கி
மனிதக் கழிவில் மீத்தேன்
மீடியாக்கள் அசைப்போட எதாவது ஒன்று புதிதாய் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது.ஹைட்ரோகார்பனைப் பற்றி மீடியா மென்று துப்பி முடிந்தாயிற்று. இப்போது மீனவர் சுட்டுக் கொலை.எப்படியோ ஒரு விசயத்தை மறக்கடிக்க இன்னொன்று என இந்த அரசால் செய்யப்படும் சூழ்ச்சி இனியும் வேண்டாம். இப்போது மீனவருக்காய் போராடுகிறோம்,இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீருக்காய் அல்லது வேறு யாரேனும் மரணிக்க வைக்கப்படலாம். இவையெல்லாம் நம்மை திசைத்திருப்பும் நிகழ்ச்சியே.
போராடித்தான் நாம் அனைத்தையும் பெறவேண்டும் என்றால் இனி இழப்பதற்க்கு எதுவுமில்லை நம்மிடம். ஆனால் பெறுவதற்கு நிறைய இருக்கிறது. ஆம்!விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும்.அதுவும் அண்டை மாநிலத்திடம் நாங்கள் கையேந்தப் போவதில்லை . அவசர கால நடவடிக்கையாக எங்கள் குளம் குட்டை ஆறுகளை மீட்டுத்தர வேண்டும். எல்லாவற்றையும் நிவாரணம் தருகிறோம் என்ற பெயரில் தன் கட்சிக் காரனுக்கே தாரை வார்க்கும் இந்த கேடுகெட்ட அரசாங்கத்தால் குடிக்க தண்ணீரை இலவசமாய் தர இயலவில்லை.இந்த கையாலாகாத தனத்தில் எதற்கு இலவச தடுப்பூசி. அத்தியாவசிய தேவைக்காய் இல்லாத குடிநீர் அனாவசியமாக கொக்கோ கோலாவிற்கு விற்கப்படுகிறது.
போராடினால் தான் தீர்வு என்றால் நம் போராட்டத்தை வேறு வழியில் கொண்டு செல்வோம். அறவழிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என எத்தனை போராட்டங்கள். கால் கடுக்க நின்றும் பயனில்லை. இயற்கை உரத்திற்காய் நம் வீடுகளில் சேகரிப்படும் குப்பைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வழி செய்வோம். இலவச குடிநீர் தேவை என்பதால் அதற்காய் நம் அருகில் இருக்கும் குளம் குட்டைகளை தூர் வாரி அதிலிருந்து பெறுவோம். மினரல் வாட்டர் ஆலைகளை அகற்றுவோம். அதற்கு எடுக்கப்படும் நீர் எல்லாம் எங்கிருந்து பெறப்படுகிறது அதை விவசாயத்திற்கு திருப்புவோம். விவசாய நிலங்களை மீட்டெடுப்பதோடு மட்டும் நில்லாம் அழிந்து போன விதைகளை மீட்டெடுப்போம். இவையல்லாம் கண்டிப்பாய் இந்த அரசாங்கம் தான் செய்ய வேண்டும். ஒரு முறை ஓட்டிற்காய் நம்மிடம் கையேந்திவிட்டு இப்போது நம்மை கையேந்த வைக்கும் இந்த மானம் கெட்ட அரசாங்கம் தான் இவையனைத்தையும் செய்ய வேண்டும் என முன்னெடுத்துச் செல்வோம்.
கடைசியாக மீத்தேன் திட்டத்திற்கு இந்த அரசாங்கத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மனிதக் கழிவில் மீத்தேன் இருப்பதால் அதை கொண்டு உ.பி அரசு பேருந்தே இயக்க திட்டமிட்டுள்ளது. எங்கள் மனிதக் கழிவுகள் இந்த அரசாங்கத்திற்கு தேவை என்று நினைக்கிறேன்.