மனம் என்னும் மாயப் பேய்

மனம் எனும் மாயப்பேய் !
கவிதை By பூ. சுப்ரமணியன்

‘மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’
ஆன்றோர் அமுத மொழி
அனைவரும் உணர வேண்டும் !

மனமது சீர்குலைந்தால்
மக்கள் விரும்பும் அமைதி
மனங்களிலே வாழ்விலே
காணாமலே மறைந்துவிடும் !

மரக்கிளைக்குக் கிளை
குரங்கு மட்டுமா தாவும்
மனித மனமும் தாவும்
இனி தாவும் மனதை நிறுத்தி
அமைதி
வாழ்வைக் காண்போம் !

மனம் எனும் மாயப்பேய்
மனிதனை
பிடித்து விட்டால்
குதூகூலக் குடும்பமும்
குட்டிச்சுவராகி விடும் !

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
நம் மனம் சொல்லும் வழியிலே
நல்ல மனித மனங்கள் வாழும்
தீய மனதால் மனித வாழ்வு வீழும் !

எண்ணத்தின் பிறப்பிடம் மனம்
ஓர் மனித மனதிலிருந்து
ஓராயிரம் எண்ணங்கள் உதயம்
மனம் வெறுமையாகும்போது
நின்று விடும்
மனித இதயம் !

அன்பு மனம் அமைதியான
ஆறுபோல் வளைந்து ஓடும் !
கொதிக்கும் கொடூர எண்ணங்கள்
கொந்தளிக்கும் கடல் அலைகள் !

மனம் எனும் மாயப்பேயை
வீரம் எனும் வேப்பிலை
கொண்டு விரட்டி விட்டு
அமைதியான
அன்பு வாழ்வை
இதயத்தில் குடிவைப்போம் !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (10-Mar-17, 11:39 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 344

மேலே