கவலை தீராதா

எத்தனை கொடுமைகள் எண்ணிலடங்கா வேதனைகள்
சகிக்கும் மனிதர்தான் சமூகத்தின் நாற்திசையும்
வாழ்க்கை சக்கரத்தை வழிநடத்த ஏழைஇனம்
அல்லல் படுகின்றார் ஆனாலும் சிலமனிதர்

பணத்தில் மிதக்கின்றார் பதவிகளில் திழைக்கின்றார்
நினைத்ததை கண்முன்னே நிதர்சனமாய்க் காண்கின்றார்
நெஞ்சினிலே ஈரமில்லை நேர்மையோ சிறிதுமில்லை
இருள்சூழ்ந்த நெஞ்சங்கள் ஏய்த்துப் பிழைப்பவர்கள்

எங்குமே லஞ்சம் எவரிடமும் நீதியில்லை
துன்பத்தை கண்டாலும் தூரநின்று வேடிக்கை
பார்க்கின்ற மனிதர்தான் பாரிலின்று ஏராளம்
வல்லூறு கூட்டத்தில் வெண்புறாவை தேடுகின்றேன்


வறிய மனிதரின் வாழ்கைச் சாகரத்தில்
எந்நாளும் ஓர்நிலையா? இழிநிலையா துயர் மழையா ?
அன்பு தழைக்காதா அவனியிலே அவர் துன்பம்
கலைந்தோடும் நாள்வராதா ?கவலைதான் தீராதா ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (11-Mar-17, 5:10 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 67

மேலே