பகலிலொரு வெண்ணிலா
பகலிலொரு வெண்ணிலா பரவசமாய் உள்ளதடி
தகதகப்பாய் மின்னுகிறாய் தங்கமாக மாறுகின்றாய்
மகத்துவமே அழகினிலே மங்காத பசும்பொன்னே !
திகட்டாதே உன்நினைவும் திண்டாடும் என்மனமே !
மந்திரமாம் காதலிலே மயங்கிநானும் நின்றிடவே
அந்தநாளின் நினைவுகளில் அகலவில்லை அன்புமனம் .
இந்தநாளும் நினைத்ததுமே இன்பமாக இருக்கிறதே
எந்தநாளும் நீவேண்டும் என்னவளே என்னருகில் !
பெண்மகளே பேசிடுவாய் பேதைமனம் தேடுகிறதே
கண்களினால் நீவருடக் காதலினால் நோயுறவும்
வண்ணமகள் வாய்திறந்து வாட்டத்தைப் போக்கிடுவாய் !
எண்ணமெலாம் உன்னிடமே எத்திக்கும் நீயடியோ !
கலைமகளே என்னருகில் காதலினால் வந்திடுவாய்
மலைமகளே மரகதமே ! மறக்காதே என்னையும்தான் !
சிலைபோன்றே இருக்கின்றாய் சிற்பிசெய்த கலையழகே
மலைபோன்ற துன்பங்கள் மாணிக்கமே மாற்றவாராய் !!!!
என்னருகில் நீயிருந்தால் எல்லையிலா இன்பங்கள்
உன்கண்கள் பேசிடுமே உருவமிலா உரையாடல் .
பன்மொழியும் காட்டிடுவாய் பருவமகள் நீதானே .
என்மொழியும் மறந்திடுமே என்செய்ய சொல்வாயே !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

