நண்பா நீயும் நானும்!

மௌனம் பேசிடும்
சில தனிமை இரவுகள்
எப்பொழுதாவது உன்
ஞாபகங்களைக் கிளறுகின்றன...

படபடக்கும் பட்டாம்பூச்சிகளாய்
நீயும் நானும்
துள்ளித் திரிந்து
மகிழ்ந்த காலங்கள்....

மகிழ்ச்சி வெள்ளத்தில்
நீயும் நானும்
ஆற்றோரம் கட்டிய
மணல் வீடுகள்...

முற்றத்து ஊஞ்சலில்
நீயும் நானும்
ஒருவருக்கொருவர்
ஊட்டிவிட்ட நிலாச்சோறு...

பக்திப் பரவசத்தில்
நீயும் நானும்
பார்த்து மகிழ்ந்த
மாரியம்மன் திருவிழா...

ஓடிப் பிடித்து
நீயும் நானும்
ஒளிந்து விளையாடிய
சந்தோஷ நிமிடங்கள்...

பள்ளியை விட்டு
நீயும் நானும்
கைகோர்த்து நடந்தபடி
வீடு வரும் சாலைகள்...

மழை பெய்யும் மாலையில்
நீயும் நானும்
மகிழ்ச்சியில் கரைந்து
நனைந்த நிமிடங்கள்...

வெயில் பொழிய
நீயும் நானும்
நிழல் தேடி
ஒதுங்கிய மரங்கள்...

உறங்கிட பிடிக்காமல்
நீயும் நானும்
இரவு விடியும் வரை
பேசிய கதைகள்...

கடைசியாய் ஒரு நாள்
நீயும் நானும்
பிரிகின்ற வேளையில்
அடைந்த துயரங்கள்...

நினைவலைகளாய்
யாவும் வந்து
மௌனமாய்
சத்தமிடுகின்றன- என்

மௌனமான
தனிமையோடு
நித்திரையிலும்
யுத்தமிடுகின்றன...!

எழுதியவர் : சுதந்திரா (12-Jul-11, 6:57 pm)
பார்வை : 904

மேலே