இறப்பை நாடும் முதுமை
கோயில் குளங்கள் பலசென்று
வயிற்றில் ஒருபிள்ளை வேண்டி
வயிற்றை ஒருவேளை காயப்போடும்
விரதங்கள் எண்ணற்றவை இருந்து
மனம் பூரித்துப்பெற்ற பிள்ளை
மங்கை கைப்பிடித்து மணந்து
ஈன்றோரை சுமையாய் நினைத்து
வார்த்தைகளால் தினம் கொன்று
மெளனங்களால் மனதைக் கிழித்து
அன்பு அரவணைப்பிற்காக ஏங்கும்
எழுபது அகவை ஈன்ற தாயை
விட்டு தனிக்குடித்தனம் செல்ல
நினைப்பதை என்னவென்று சொல்வது
சிறுவயதில் என் குழந்தை
தொண்டை கணைத்து இருமியபோது
நெஞ்சு வலியால் நொந்து
அரவணைத்து நின்றேன் அவனை
கசாயம் வெதுவெதுப்பாய் காய்ச்சி
குவளைச்சூட்டை கரங்களில் ஏந்தி
பிள்ளைக்கு என்னென்னமோ கூறி
கசாயம் மருந்து ஊட்டி
என்மடியினில் அவனை சாய்த்து
அவன் உறங்கும்வரை விழித்து
தூக்கம் வராது தவித்தேன் அக்கணம்
இக்கணமோ
உடலில் ஆற்றல் குறுகி
எத்தனையோ நோய்கள் ஏந்தி
முடியாமல் இரவில் இருமியபோது
ஏன் என்னுயிரை வாங்குகிறாயென
அவன் வீசும் வார்த்தைகள்
பிணிகளை விடவும் கொடியதாய்
நெஞ்சை துளைத்துச் சென்றது
ஏனோ என்னை வாழவைத்து
நோய் நொடியினில் நோகவைத்து
அன்பிற்காக தினமும் ஏங்கவைத்து
கொல்லாது என்னைத் தண்டிக்கிறாய்
நான் வணங்கும் இறைவா
என் தினம் தேவைகளை
என்னால் செய்ய இயலவில்லை
அடுத்தவர் சார்ந்து வாழ
மனம் விரும்ப வில்லை
உதிரம் உறைந்துபோன உடலில்
உயிரை மட்டும்வைப்பது நியாயமோ
உன்னடி சேர விழைகிறேன்
என்னுயிரை நீ ஏற்றுக்கொள்ள
விண்ணப்பங்கள் தினம் வைக்கிறேன்
மகன் என்தொல்லையின்றி வாழ
விரைவாய் என்னுயிரைப் பறித்துவிடு
ஒருநாள் அழுதுவிட்டு போகட்டும்
மறுநாள்முதல் அவன் வாழ்வில்
மகிழ்ச்சி தொடராய் மலரட்டும்
அவனும் மனிதன் தானே
என்னால் அவன் வாழ்வை
தொலைப்பது என்நெஞ்சைக் குத்துகிறது
வாழட்டும் மனைவி மக்களோடு
என்னாசிகள் என்றும் அவனுக்கு
உன்னடி சேர்கிறேன் இறைவா.
படைப்பு : சா. கா. பாரதி ராஜா,
செங்கற்பட்டு.9944315732.