அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஒவ்வொரு நாளும் திருநாளே !!!
கொண்டாடுவோம் திருநாளை நாள்தோறும்
------ கோயில்கள் எம்மருங்கும் தோரணங்கள் !
பண்பாடி மகிழ்ந்திடுவோம் விழாநாளில்
------ பலருக்கும் அன்னதானம் செய்திடுவோம் !
கண்களிலே காணுகின்ற உறவுகளின்
------ கருத்துகள் பரிமாறி வாழ்ந்திடுவோம் !
மண்ணுலகில் மானிடராய்ப் பிறந்ததனால்
------ மங்காது சமுத்துவமும் போற்றிடுவோம் !!!
திருநாளும் வந்தாலே வீடுதோறும்
------- திகழ்ந்திடுமே இன்பங்கள் எந்நாளும்
வருநாளாம் குதூகலம் வாழ்வினிலே
------- வரமாகத் தந்திடுமே விழாக்களுமே !
பருவங்கள் மாறினாலும் மாறிடலாம்
------ பண்புடைய திருநாட்கள் மாறாதே !
கருவறையின் தெய்வமுமே உலாவந்தே
------ காட்சிதனைத் தந்திடுவார் நமக்குந்தான் !!!!
வண்ணமிகு சந்தையிலே பொருட்களுமே
------- வாங்கிடுவோம் அந்நாளில் ஆசையுடன் !
எண்ணங்கள் ஈடேறும் நாளதுவாம்
------- எத்திக்கும் வெடிகளது ஒலிமுழக்கம் !
உண்டிடுவோம் ஒன்றாக சேர்ந்தமர்ந்து
------- உருவாகும் புத்துலகை எண்ணியபடி !
பெண்களுமே கரகங்கள் ஆடிடுவர்
------- பேருவகை இதுவன்றோ திருநாளில் !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்