பாரதி ( எனது அன்னையின் கட்டுரை )

( "பாரதி" - எனும் தலைப்பில்
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்
எனது அன்னை எழுதி வாசித்த எழுச்சிமிகு வரிகள்...

இன்று அவர் மொழிய நான் வரைத்த வரிகள்...)


தேர்சாரதி போல் தலைப்பாகை
திசைநோக்கும் பெரும்விழிகள்
திருகிவிட்ட கூர்மீசை
தேன் தெவிட்டா பேராசை...

ஏட்டுக்குள்
வீட்டுக்குள்
தமிழ் நாட்டுக்குள்
இதய கூட்டுக்குள் என்று இடம்பெற்ற
பாட்டுக்கொரு புலவன் பாரதி...

பாரதி கவிதை சாட்டைகொண்டு
பரங்கியரின் பழமைகளைத் தாக்கி தகர்த்திட்ட
பத்தொன்பதாம் சித்தன் பாரதி...

இன்றைக்கு தொன்னூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்து
நாற்பதுக்கும் ஓராண்டு குறைவாகவே வாழ்ந்து...

நாட்டு மக்களின் நாடி நரம்பெல்லாம் உயிரேற்றி
துடிப்போற்றி சென்றுவிட்டவர் பாரதியார்...

பாடுகின்ற குயிலைக் காணும்போதும்
கூவுகின்ற குயிலை இரசிக்கும்போதும்...

பாரதியின் நினைவு வந்தேதீரும்...

குயில்கள் பாட்டும்
குழந்தைப் பாட்டும்
மறக்கக் கூடியவைகளா...!

"பாதகம் செய்பவர்களைக் கண்டால்
பயம்கொள்ளலாகாது பாப்பா...

மோதி மிதித்துவிடு பாப்பா
அவர்முகத்தில் உமிழ்த்துவிடு பாப்பா..."

ஆஹா...!
விளையும் பயிர்க்கு
அவர் இடுகின்ற வீர உரம்
எப்படிபட்டது பார்த்தீர்களா...!

தாயின் மணிக்கொடி பறக்கும்போதெல்லாம் அந்த
தமிழ்கொடி வேந்தனின் எழுச்சி
கேட்டுக்கொண்டே இருக்கும்...

விடுதலை என்ற நான்கு எழுத்திற்கு
எரிமலை கனலை உருவாக்கியவர் பாரதியார்...

சுதந்திரப்பற்றும், நாட்டுப்பற்றும் ஒவ்வொரு வரியிலும் ஒளிவிடுகின்றனவன்றோ..

அன்றே என்நாடு விடுதலை பெற்றேதீரும் என்பது பாரதி கருத்து...

இவ்வாரு, தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பாடுபட்ட நம் பாரதியே நான் விரும்பும் கவிஞர்...

வாழ்க பாரதி... வெல்க தமிழ்...
வளர்க நமது தாயகம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (27-Mar-17, 12:47 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 278

மேலே