ஓடம் ஒரு ஓடத்தைக் கரை சேர்க்கிறது

ஓடம் ஒரு ஓடத்தை கரை சேர்க்கிறது !
சிறுகதை by: பூ.சுப்ரமணியன்

விநாயகர் கோவில் அருகில் இருந்த சிறுவர் பூங்காவில் பிரபுவும், நானும் எங்கள் காதலைப் பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது திடீரென்று பிரபு பொய்க் கோபத்துடன் என்னைப் பார்த்து “ சுபா ! நீ இப்படியே நம்ம கல்யாணத்தைப் பற்றி யோசனை பண்ணிக் கொண்டே இரு ! நீ வேணும்னா பாரு ! நமக்கு அறுபதாம் கல்யாணம்தான் நடக்கப் போவுது. இப்படியே நீ லேட் பண்ணிட்டே இருந்தே எங்க வீட்டிலே, என் அத்தை மகள் கழுத்திலே தாலி கட்ட வச்சு உன் முன்னாடி, என்னை நிக்க வச்சிருவாங்க பாரு “ என்று என்னிடம் பட படத்தார்.

பொறுமை இழந்த பிரபு என்னிடம் இன்று கோபப்பட்டுக் கூறியது எனக்கு அவர் மீது கோபமாகவும் இருந்தது. அதே சமயம், அவர் என் மேல் கொண்ட கொள்ளைப் பிரியம்ந்தான் காரணம் என்பது , என்னை பெருமிதம் கொள்ளவும் செய்தது.

“இப்படி அவசரப்பட்டால் எப்படி பிரபு ! எங்க குடும்ப சூழ் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்க. நினைத்துப் பார்த்தால்... “ என நான் வழக்கம்போல் மெதுவாக இழுத்தேன்.

உடனே பிரபு அதே கோபத்துடன் “ என்ன என்ன உங்க குடும்பச் சூழ்நிலை. பொறுப்பற்ற உன் அப்பா, எதுவும் சொல்லத் தெரியாத உன் அப்பாவி அம்மா, கல்யாணத்தை எதிர்நோக்கி இருக்கும் உன் அக்கா ரெண்டுபேர் , வெளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் உன் தம்பி, அப்புறம் உங்க குடும்பத்தை விட்டு ஓடிப் போன உன் அருமையான சுயநலவாதி அண்ணன் குமார்.. இவ்வளவுதானே ! இவங்களுக்கெல்லாம் மாடாக உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி பொண்ணு ! நீயும் இப்படியேதான் உன் வாழ்நாளெல்லாம், என்னிடம் இப்படியே பதில் கூறிக் கொண்டேதான் இருக்கப் போறயா ? இதை உன்கிட்டயிருந்து கேட்டு கேட்டு எனக்கும் அலுத்துப் போச்சு ! “ என்றார். அவர் பேசியதிலிருந்து, அவரது ஆதங்கமும் அவசரமும் எனக்கு புரிந்தது. தெரிந்தது.

இப்படி அவர் இதுபோல் பலமுறை என் மீது கோபபட்டிருக்கிறார். நானும் பொறுமையாக கேட்டுகொண்டே “ பிரபு எங்க குடும்பத்தையும், குடும்ப கவுரத்தையும், நான் பார்க்க வேண்டாமா ?” என்றேன்

“ சுபா நானும் எத்தனை தடவை உன்னிடம் கூறிவிட்டேன். உன் சம்பளப் பணம், எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம். அப்படியே சம்பளத்தைஎல்லாம் உன் குடும்பத்திற்கே கொடுத்து விடு. என்னோட சம்பளம் மட்டும் நம்ம ரெண்டுபேருக்கும் போதும்ன்னு. இன்னும் நீதான் எவ்வளவு காலத்துக்குத்தான் உன் குடும்ப சுமையை சுமக்கப் போறே ! “ என சற்று உரக்கவே பொறுமை இழந்து கத்த ஆரம்பித்தார் பிரபு.

என்னுடைய பிரபு கோபப்பட்டு, கத்தியதில் அர்த்தம் இருக்குது. ஆனால் அவர் மீது என்னால் கோபப்பட முடியவில்லை. அவருக்கு, பதில் பேச முடியாமல் என்னால் தலை குனியத்தான் முடிந்தது.

“சுபா எனக்கு இன்னும் ஒரு வாரத்திலே முடிவான உன் பதில் தேவை. என் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு புரிஞ்சுக்கோ சுபா!. என்னை எத்தனை நாள்தான் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடச் சொல்லப் போறே.! என்னைப் பற்றியும் கொஞ்சம் யோசிச்சுப் பார் . நீ என் நிலமையில் இருந்து யோசிச்சுப் பார் !” என்றும் மெதுவாகவும், அதேநேரத்தில் கண்டிப்புடனும் பிரபு என்னிடம் கூறி விட்டு என் பதிலைக் கூட எதிர்பாராமல் சென்று விட்டார்.

அவர் சென்றவுடன் , நான் தாம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன். நல்லவேளை எனக்கு பேருந்தில் உட்கார இடம் கிடைத்தது. பேருந்தும் புறப்பட்டது

பிரபு கோபப்பட்டு பேசியதும், இறுதியாக அவர் கூறியதும் என் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. என் குடும்ப நிலையும் முன்னால் வந்து நின்று கொண்டு, என்னைப் பயமுறுத்தியது. என் நினைவுகளோ பின்னோக்கி நகர்ந்தது.

முப்பது வயதை நெருங்கும் , மணமாகாத மோகினி அக்கா, அடுத்த அக்கா திவ்யா இவர்களுக்கிடையே நான் தங்கையாக பிறந்து விட்டேன். டாஸ்மாக் கடையே தஞ்சம் என்று கிடக்கும் பொறுப்பற்ற தந்தை ,பெண்கள் திருமணம் பற்றி அவரிடம் பேசவே பயப்படும் அப்பாவி அம்மா . டென்த் படிக்கும் தம்பி, ஓடிப் போன என் அண்ணன் குமார். என் தந்தையைப்போல், என் அண்ணனைப் போல், என்னால் குடும்பப் பொறுப்பில்லாமல் நடப்பதற்கு என் மனம் இடம் தரவில்லை.

எங்கள் குடும்பத்தில் நான்தான் பட்டதாரி ஆகியிருந்தேன். ஒரு குடும்பத்தில் துன்பங்கள் வந்தால் எல்லாக் கதவுகளும் மூடியிருந்தாலும் , கடவுள் எதாவது ஒரு கதவை கருணையுடன் துன்பங்கள் விலக திறந்து வைப்பார் என்பதாக கேள்விபட்டிருக்கிறேன். அது என் விஷயத்தில் சரியாகவே இருந்தது. என் ராசியோ அல்லது என் குடும்பத்தின் ராசியோ நான் பட்டப்படிப்பு முடிந்தவுடன், ஒரு தனியார் கம்பெனியில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது.

என் அண்ணன் குமாருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் என்னைப்போல் வேலை கிடைத்தது . ஆனால் ,‘கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது ஆத்தை விட்டு பறந்து போய்விட்டது’ என்பதுபோல் வீட்டை விட்டு ஓடி விட்டான். ஆம். எங்க வீட்டுக்குத் தெரியாமல், அவனே ஒரு பெண்ணை பார்த்து மணந்து கொண்டு யார் கண்ணில்லும் படாமல் சென்று விட்டான். அவன் ஒரு சுயநலவாதி என்பதை தனது செயல் மூலம் நன்கு காட்டிவிட்டான். எனவே என் குடும்பம் இருக்கும் நிலையில் நான் வேலைக்குப் போக வேண்டியது, காலத்தின் கட்டாயமாகவும் இருந்தது.

நான் பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலகத்திலும் சரி, வெளியிடங்களிலும் சரி, அழகாக தோற்றமளிக்கும் இன்றைய இளைஞர்களை, நான் பார்க்கும்போதும், அவர்களிடம் பேசும்போதும் என் மனம் சலனப்படும். நானும் பெண்தானே ! அப்போதெல்லாம் என் மூத்த சகோதரிகளையும் , என் குடும்பச் சூழ்நிலையையும் நினைத்துப் பார்ப்பேன். மனச் சலனத்திற்கு விடை கொடுத்து விடுவேன். நான் வெகு கவனமாகவே சமுதாயத்தில் அளவோடு சிரித்தும், பேசியும் நடமாடியும் வந்தேன் என்றுதான் கூற வேண்டும். எனது ஆடம்பரத்திற்கும் ஆசைகளுக்கும் நானே முற்றுப்புள்ளி வைத்தேன்.

என் உணர்வுகளுக்கு சிறிதும் இடம் தராமல் , என் மனம் என்னும் குதிரையை தறிகெட்டுப் போய்விடாமல், கவனமாக அடக்கி வைத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை காதலாவது கத்தரிக்காயாவது? என்று காதலுக்கே சவால் விட்டுக் கொண்டிருந்தேன். அந்த என்னுடைய சவால் என்னுடன் பணியாற்றும் பிரபுவைப் பார்த்தவுடன், எல்லாம் தவுடுபோடியாகி விட்டது. எனது மனக் குதிரையை என்னால் எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல், என் மனம் அவரிடம் தஞ்சம் புகுந்தது.

பிரபுவும் நான் பணியாற்றி வரும் கம்பெனியிலேதான் பணியாற்றி வந்தார். அவரின் சிரிக்கும் கண்கள், எப்போதும் புன்னகையுடன் காணப்படும் முகம். இந்தக் காலத்து இளைஞராக இல்லாமல், குணத்தில் கோபுரமாக உயர்ந்து இருந்தார். எனவே என் உள்ளம் என்னும் சிம்மாசனத்தில் தவிர்க்க முடியாமல், பிரபு என் உள்ளம் என்னும் சிம்மாசனத்தில் ராஜாவைப் போல் உட்கார்ந்து விட்டார்.

அலுவலக சம்மந்தமாக சிறுசிறு சந்தேகங்களை ஆரம்பத்தில் பிரபுவிடம் தயங்கி தயங்கித்தான் கேட்டேன். அவர் மிகவும் பொறுமையாகவும், அதே சமயத்தில் தெளிவாகவும் விளக்கிக் கூறுவார். அவர் அலுவலகத்தில் தன் வேலை உண்டு, தான் உண்டு என்று பணியாற்றி வந்தார். அவர் யாரிடமும் தேவைக்குமேல் எதுவும் பேச மாட்டார். ஏன் சிரிக்கவும் மாட்டார். ஆனால் என்னிடம் மட்டும், என்னமோ ஆர்வமுடன் , இனிமையாகவும், புன்னகையுடனும் பேசினார். அதுவே என்னை அவரிடம் பேசவும், பழகவும் அதிகமாகத் தூண்டியது .

நான் அலுவலகம் சென்றவுடன் முதலில் பிரபுவின் இருக்கையைத்தான், முதலில் என்னை அறியாமல் கண்கள் பார்வையிடும். அவர் ஏதாவது ஒருநாள் அலுவலகத்திற்கு வரவில்லையெனில், என்ன காரணமாக் இருக்கும் என பலவிதமாக எண்ணிக்கொண்டே இருப்பேன். அன்று எனக்கு அலுவலத்தில் வேலையே ஓடாது.. ‘ ஓ ........ இதுதான் காதலா ? ‘என , காதல் என்றால் என்ன ? என்பதைஎல்லாம் அப்போது என்னை உணர வைத்தது

அலுவலக உணவு இடைவேளையின்போது இருவரும் ஆரம்பத்தில் அலுவலகப் பணிகள் பற்றி பேசினோம். நாட்கள் செல்லச் செல்ல ஒருவருக்கொருவர் சொந்த விஷயங்களை இருவரும் மனம் விட்டு பேச ஆரம்பித்தோம். இருவரும் சினிமா, பீச் என்று சுத்த ஆரம்பித்தோம். முடிவில் அது இருவருக்கும் காதலாக மலர்ந்தது.

அப்போதெல்லாம் நான் அவரிடம் எங்கள் திருமணததைப் பற்றி பேசும்போது எல்லாம், எனது மோகினி அக்காவுக்கும் திவ்யா அக்காவுக்கும் திருமணம் முடிந்த பின்தான் நம் திருமணம் பற்றி எனது அம்மாவிடம் பேசுவேன் என கண்டிப்புடன்தான் பிரபுவிடம் பேசினேன். அவரும் அதற்கு சம்மதித்தார். நான் என்ன சொன்னாலும் கேட்கவும் அவர் தயாராக இருந்தார்.

என் மூத்த அக்கா மோகினி அக்காவிற்கு மாப்பிள்ளை தேடித்தேடி அம்மாவும் ஓய்ந்து விட்டார். மற்றொரு அக்கா திவ்யா, மோகினி அக்காவை விட நல்ல சிவப்பு, செதுக்கி வைத்த சிலைபோல் நல்ல அழகாக இருப்பாள். அவளுக்கு சொந்த அத்தை மகன் இருந்தான். அவன் திவ்யாவை மணக்க எப்போ எப்போன்னு தயாராக இருந்தான்.

ஆனால் அம்மா மோகினி அக்காவுக்கு, பின்தான் திவ்யாவின் திருமணம் எனக் கண்டிப்புடன் கூறி விட்டார். இதற்கு இடையில் என் திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே அம்மாவுக்கு நேரமில்லை என்றுதான் கூறவேண்டும்.

இன்று அம்மாவிடம் பிரபு பற்றிக்கூறி., என் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும்போது..... “தாம்பரம் வந்துவிட்டது எல்லாரும் இறங்குங்க ! சீக்கிரம் எல்லாரும் இறங்குங்க !“ என்ற நடத்துனர் குரல் கேட்டவுடன்தான் என் நினைவலைகளிலிருந்து மீண்டேன்.

பேருந்திலிருந்து இறங்கி வேகமாக நடந்து, நான் சிக்னல் அருகில் வரும்போது “ சுபா, சுபா “ என்ற குரல் கேட்டு திரும்பினேன். என் அண்ணன் குமார் நின்றுகொண்டு இருந்தான்.

அவனைப் பார்க்கவே எனக்கு பிடிக்க வில்லை. தனக்கு ஒரு பெண் கிடைத்தவுடன் எங்களைப் பற்றியெல்லாம் நினைக்காமல் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிவிட்ட ஒரு சுயநலவாதி என்று மனதுக்குள் எண்ணினாலும், என் அண்ணனை நோக்கி ‘ என்ன ?’என்பதுபோல் வேண்டா வெறுப்பாக பார்த்தேன்.

“ சுபா“ நான் சொல்றேன்னு என்மேல வள்ளுன்னு விழாதே ! இந்தக் காலத்திலே அவங்க அவங்களே பார்த்து ஒரு துணையைத் தேடி போயிடரதான் நல்லது. இல்லேன்னா இப்படி கோவில் பஸ் ஸ்டாண்டுன்னு, உன்னை மாதிரி சுத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான். மோகினியும், திவ்யாவும் துப்புக்கெட்டதுகள். அதற்கெல்லாம் நான் சொல்வதெல்லாம் ஒத்து வராது. நீயாவது ... என்று அடுத்து என்ன சொல்ல என் அண்ணன் வர்றானு எனக்குத் தெரியும்.”

நான் அவனை இடைமறித்து கோபத்துடன் “ நிறுத்து அண்ணா உன் மனசிலே இரக்கம் என்பதே இல்லையா? ரெண்டு அக்காவுக்கும் உனக்கு ஏதாவது வழி பண்ணத் தெரியாவிட்டாலும் அவங்களைப் பற்றி ஏன் நாக்கிலே நரம்பில்லாமல் பேசறே “ என்றேன்.

நான் கூறியதை எதையும் அவன் காது கொடுத்துக் கேட்காமலே “ சரி உன் இஷ்டம் சுபா ! “ என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் அண்ணன் தான் வந்த ஸ்கூட்டரில் பறந்து விட்டான்.

நான் வீட்டை அடைந்தபோது லேசாக இருட்டத் தொடங்கி விட்டது. தாழிடப்படாத, சாத்தியிருந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே மெதுவாக நுழைந்தேன்.

அப்போது வீட்டினுள்ளே மோகினி அக்கா , திவ்யா அக்கா அம்மா மூன்று பேரும், தங்களைத் தவிர யாரும் வீட்டில் இல்லை என்ற தைரியத்தில், சப்தமாகவே ஏதோ அவர்களுக்குள் பேசிகொண்டிருந்தார்கள். அதில் என் பெயரும் அடிபட்டது. என்னைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை கவனமாக கேட்க ஆரம்பித்தேன்.
“பெரியவங்க நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது சுபாவுக்கு மட்டும் நான் எப்படியம்மா மாப்பிள்ளை பார்ப்பேன். உங்களையெல்லாம் கரையேத்தாமல், அவளை மட்டும் கரையேத்தினால் எனக்கு எப்படி இருக்கும் “ என்று அழுதுகொண்டே அம்மா கூறியது, எனக்கு திருமணம் செய்வது குறித்துதான் என்பது நன்கு தெரிந்தது.

“இத்தனை வயசுக்கு அப்புறம் எங்களை எப்படி கரையேத்தப் போறே, முடியும். நீ எங்களைப்பற்றி கவலைப்படாமல் பேசாமல் சுபாவுக்கு மட்டும் மாப்பிள்ளையை பாரம்மா! அவளாவது காலகாலத்திலே கல்யாணம் முடிச்சு சந்தோஷமாக இருக்கட்டும்” என்று மோகினி அக்கா அம்மாவிடம் எடுத்துக் கூறியது அவளுடைய நல்ல மனசு, எனக்கு கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.

“ஆமா அம்மா ! மோகினி அக்கா கூறியதுபோல் எங்களைப் பத்தியெல்லாம் வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டு இராதே. சுபா சம்பாத்தியத்தில் நாம் எல்லாம் வாழ்கிறோம். அவள் கல்யாணம் முடித்து சென்று விட்டால், நாம் என்ன செய்வது என்று யோசியாதே ! நம் எல்லாருடைய வாழ்வை நினைத்து, அவள் வாழ்வையும் பாழாக்க வேண்டாம் “ என்று திவ்யா அக்காவும் அம்மாவிடம் மேலும் நன்கு எடுத்துப் பேசியது அவளுடைய உள்ளமும் மோகினி அக்காவைப் போலவேதான் இருந்தது. .

தண்ணீரில் கரையைத் தொட முடியாத தத்தளிக்கும் ஓடங்களைப் போல் எங்களையெல்லாம் கரையேத்த முடியாமல் அம்மா கலங்கி நிற்பது எனக்குத் தெரிந்தது. எங்களையெல்லாம் பெற்ற வயிரல்லவா? கலங்கி நின்றது.

அம்மாவும் ரெண்டு அக்காவும் என் மீது அன்பு கொண்டு அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்ட பிறகு, நான் ஒரு தீர்மான முடிவுக்கு வந்து விட்டேன். நானும் ஒரு தத்தளிக்கும் ஓடந்தான். இருந்தாலும் நானே ஒரு தத்தளிக்கும் ஓடத்தை அதாவது என் அக்கா மோகினியை கரை சேர்க்க முடிவு செய்தேன். ஆம். மோகினி அக்காவின் வாழ்வையாவது மலரச் செய்ய வேண்டும் என்று எனக்குள்ளே ஒரு நல்ல முடிவு செய்து விட்டேன்.
என் பிரபுவிடம், என் அக்கா மோகினியை அவர் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும்படியும், எனது விருப்பமும் அதுதான் என்று நான் ஆசையுடன் விளக்கமாக எடுத்துக் கூறினால், நான் சொல்வதை நிச்சயமாக் கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் பிரபு எனக்காக என் சந்தோசத்திற்காக எதையும் செய்வார். எனது அக்கா மோகினியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில், மறுநாள் காலையில் எனது பிரபுவை சந்திக்க விரைந்தேன். .

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (10-Apr-17, 1:19 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 426

மேலே