அவன் நிலையில் அவள் நினைவில்

கம்பத் தடியில் நிற்கின்றேன் நான்
. காதல் கவியோடு ! - அவளை
நம்பிக் காதல் வளர்த்த நெஞ்சம்
. நலியும் வலியோடு !

முன்னம் சென்றவள் ஒருகணம் திரும்பி
. முறுவலித்தால் வாழ்ந்திருப்பேன் !
கன்னல் ஜாடை கண்ணில் காட்டிடக்
. காலின் அடியில் வீழ்ந்திருப்பேன் !
அன்பு நண்பன் இந்தக் காதலை
. அறிவிலாத செயலென்பான் !
என்ன இருந்தும் என்றன் காதல்
. ஏற்கும் வரையில் காத்திருப்பேன் ! (கம்பத் தடியில்...)

வாழ்க்கை என்னைப் மூடா என்கையில்
. வாடிடாமல் நானிருந்தேன் !
ஏழ்மை என்னை நெருங்கும் போதும்
. ஏற்கும் நிலையில் தானிருந்தேன் !
வாழ்வும் தாழ்வும் ஏழ்மை எல்லாம்
. வஞ்சி உருவில் வந்ததனால்
பூழ்தியோடும் புயலினோடும்
. புண் சுமந்தே நான்விழுந்தேன் ! (கம்பத் தடியில்...)

காவல் நிலையம் எந்தத் திசையோ ?
. காதல் நெஞ்சை நான்மீட்க !
சாவுக்குள்ளே வீழ்ந்த பின்பு
. சத்தம் எதனை நான்கேட்க ?
பாவுக்குள்ளும் பாடலுள்ளும்
. பாரம் தன்னை நானடைத்தேன் !
நோவும் கூட மருந்தென்றே நான்
. நுனியில் கண்ணின் நீர்துடைத்தேன் ! (கம்பத் தடியில்...)


பின்குறிப்பு:
ஓரிரவில் ஒரு மின்கம்பத்தின் அடியில் துவங்கிய நண்பர்களுடனான அரட்டையில் ஒரு நண்பன் என்னை ஒரு கவிதை சொல்லச் சொன்னான். ஒரு காதல் தோல்வி அடைந்த வாலிபனின் நிலையிலிருந்து சொல்லவேண்டும் என்றான். எதற்கு சொல்ல வேண்டும் ? பாட்டிருக்க எதற்கு சொல்ல வேண்டும் என்று பாடிய பாடல்....

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Apr-17, 11:33 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 91

மேலே