கனவே நீ

கனவே நீ

கனவே!.......
என் துயிலோடு உறவாடும்
துஞ்சாத கவிதையா நீ?...

கனவே!.......
என் விழிகள்விரும்பி சுமக்கும்
சுமையறியா பாரமா நீ?...

கனவே!.......
என் தூங்கும் இரவுகளின்
காப்புரிமை பெற்றவளா நீ?...

கனவே!.......
என் தாகத்தை தணிக்க வந்த
கரைபுறளும் கானல் நீரா நீ?...

கனவே!.......
என் ஆசைகள் ஆட்சி செய்யும்
சிலமணி நேர அரியனையா நீ?..

கனவே!.......
என் எண்ணங்கள் பதிந்து வைத்த
குறுந்தகட்டின் பிரதியா நீ?...

கனவே!.......
என் நித்திரையில் மேற்கொள்ளும்
காசில்லா பயணமா நீ?..

கனவே!.......
என் முன்னோர் உயிர் மீட்டு வந்து
காட்சிப்படுத்தும் அரங்கமா நீ?..

கனவே!.......
என் ஆழ்மன ஆழம் அளக்கும்
அறிவியல் கருவியா நீ?...

கனவே!...
என் நினைவுகளோடு உரையாடும்
காணொளிக் காட்சியா நீ?...

கனவே!.......
என் மொத்த நித்திரை உறியும்
உறிஞ்சு குழலா நீ?...

கனவே!.......
என் விழித்த கண்களுக்கு காட்சியுறா
காற்றதன் மகளா நீ?......!......

எழுதியவர் : சு உமாதேவி (14-Apr-17, 5:02 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : kanave nee
பார்வை : 231

மேலே