குறவஞ்சி -- எண்சீர் விருத்தம் -- மரபு கவிதை
குறவஞ்சி -- எண்சீர் விருத்தம் -- மரபு கவிதை
குற்றால அருவியில குரங்குகளும் உண்டு
----- குறத்திமகள் அருகினிலே குறவனையும் கண்டு
சிற்பங்கள் எந்நாளும் சிரித்திடுமே முன்னே
----- சிலையாவோம் நாமுந்தான் சித்திரமே பின்னே
மற்போர்கள் செந்தமிழர் மரபன்றோ அம்மே .
----- மங்கையுமே கொஞ்சிடுவாள் மயங்கியுமே அம்மே .
கற்போர்க்கு சுவைதருமே கல்வியுமே பாரீர் .
----- கல்லாதான் மனைசெல்வோம் கற்றோரே வாரீர் !!!
ஊசிமணி விற்றிடுவோம் உலகோர்க்கே அம்மே
----- உத்தமர்கள் நாங்கள்தான் உணர்வினிலும் அம்மே .
பாசிமணி மாலைகளை பலருக்கும் அம்மே
------ பாசமாகத் தந்திடுவோம் பண்புடனே அம்மே .
நேசியினி நாட்டினிலே நேர்மையுந்தான் அம்மே
------ நேரத்தில் ஊருபோவோம் நேர்த்திகடன் அம்மே .
மாசிலாக் கற்புநெறி மண்ணுலகில் அம்மே .
------ மறவாது எங்களினம் மறுப்புண்டோ அம்மே !!!
வள்ளியுடன் தெய்வானை வந்திடுவாள் அம்மே .
------ வரந்தருவான் குமரனுமே வாழ்க்கைக்கே அம்மே .
புள்ளினங்கள் கானகத்தில் புசித்திடுமே அம்மே .
------ புவிதனிலே நல்வாழ்வு புகழ்பெறுமே அம்மே .
முள்ளினங்கள் செடிகளிலே முளைத்திடுமே அம்மே
------ முழுமதியும் நீந்திடுவாள் முற்றிலுமாய் அம்மே .
அள்ளியள்ளித் தந்திடுவான் ஆதரவும் அம்மே .
------ அரவணைப்பீர் எங்களையும் ஆதிவாசி அம்மே !!!
குறிசொல்ல பிறந்தவங்க நாங்கதானே அம்மே .
------ குற்றால மலையுந்தான் குறவஞ்சி அம்மே
பறிக்காதீர் உரிமைகளை பந்தம்தான் அம்மே
------ பலருக்கும் அடிமைகளே வேண்டாமே அம்மே .
குறிக்காதீர் ஏடுகளில் கீழ்சாதி அம்மே
------ குமரனினம் நாங்களடி குலதெய்வம் அம்மே .
செறிவான அறிவினமே நாங்களன்றோ அம்மே
------- செந்தமிழைச் செப்புகின்ற செந்தமிழர் அம்மே !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்