பஜ்ஜி மச்சத்தகடு- கொக்கி முறை

பஜ்ஜி மச்சத்தகடு- கொக்கி முறை

கொக்கி முறை-

தலைப்பை படித்து விட்டு பீதியடைய வேண்டாம்.. இது மாணவர்களுக்கான கட்டுரை. படிக்கிறபோது நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். (எதிர்பாலினத் தோழமைகளின் பிறந்த நாள் உட்பட)

இவற்றுள் கருத்துருவை மனதிலிருத்துவது ஒரு வகை. அதற்குப் புரிதல் இருந்தால் போதும். உதாரணமாக தீபகற்பமென்றால் மூன்று புறம் கடல் இருக்க வேண்டும் – இம்மாதிரியான விஷயங்கள்..

சூத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது வேறு வகை. அதற்குப் புரிதலோடு நினைவாற்றலும் வேண்டும்.

எண்களை நினைவில் வைத்துக் கொள்வது இன்னொரு வகை. உதாரணமாக இரத்த சிவப்பணுக்கள் எத்தனை காலம் இரத்தத்தில் இருக்கும்? 120 நாட்கள் என்பது விடை என்றால் இது போன்ற எண்களை நினைவிலிருத்துவது எப்படி?

பத்தே பத்து எண்கள் மாறி மாறி வந்து விவரங்களைத் தருகின்றன. சில வினாக்களுக்கு எண்கள் மட்டுமே விடையாகின்றன. இவ்விதம் நிறைய எண்களை மனனம் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றை வித விதமாகக் கற்பனை செய்து பார்க்க மனக்கண்ணால் முடிவதில்லை. அதனாலேயே இவற்றை நினைவில் கொள்வதும் கடினமாக இருக்கிறது.

ஒரு வேளை எண்களை விதவிதமாக மனக்கண்ணால் பார்க்க முடிந்தால் ?? எண்களை இப்போது நாம் எழுத்துக்களோடு தொடர்பு படுத்தப் போகிறோம். இந்த எழுத்துக்கள் கொக்கிகளைப் போன்று உபயோகப்பட போகின்றன. வெறும் சுவற்றில் சட்டையை மாட்ட இயலாது. ஒரு கொக்கி இருந்தால் சுலபமாக மாட்ட முடியும்தானே? ஆகவே இந்த முறையில் மனனம் செய்வதை கொக்கி முறை என்று சொல்கிறோம்.

சிலர் பழக்க தோஷத்தாலோ, முக்கியத்துவம் கருதியோ மனதில் ஏற்கெனவே பதிந்து விட்ட எண்களைக் கொண்டு, எண்களை மனப்பாடம் செய்கின்றனர். இவையும் கொக்கிகள் போல் உபயோகமாகின்றன.

முதலில் 1 ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதற்குச் சில எழுத்துக்களை கொடுக்க வேண்டும். சில உயிரெழுத்துக்கள் வேண்டாம். மெய்யெழுத்துக்களும் வேண்டாம். உயிர் மெய் எழுத்துக்களை எடுத்துக் கொள்வோம். நான் ஔகார வரிசையையும் (கௌ, ஙௌ முதலியன) பொதுவாக நீக்கி விடுவேன். 1-க்கு க வரிசையைக் கொடுக்கிறேன்.

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்ட எந்த எழுத்தையும் எந்த எண்ணிற்கும் வைத்துக் கொள்ளலாம். எந்த மொழியையும் பயன்படுத்தலாம்.. எங்கள் பாடப்புத்தகம் ஆங்கிலத்தில் இருக்குமாதலால் நான் ஆங்கிலத்திலும் கொக்கி வைத்திருக்கிறேன். கொக்கியாகிற எழுத்துக்கள் எல்லா நிலையிலும் வர வேண்டும். முதலில், இடையில், கடையில் என்று எங்கு வேண்டுமானாலும் வர வேண்டும். தேவைப்பட்டால் நீங்கள் இரண்டு மொழிகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2 ம் எண்ணுக்கு ச வரிசை கொடுத்திருக்கிறேன். ச- ல் 2 ஐப் பார்க்க முடியும். 3ஐத் திருப்பிப் போட்டால் ய வருகிறது. ய வரிசையில் இ,எ சப்தமும் இருப்பதால் 3க்கு இந்த எழுத்துக்களை கொடுக்கலாம். இதே போல் ஒவ்வொரு எண்ணுக்கும் சில எழுத்துக்கள்... சில வடிவத்துக்காக.. சில எண்களின் பெயர்கள் முடிகிற சொற்களே அவற்றுக்கான எழுத்துக்களாகின்றன. உங்களால் சுலபமாக நினைவில் கொள்ள முடிகிற மாதிரி எழுத்துக்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

1-க வரிசை, 2 – ச வரிசை 3 – ய வரிசை, இ,ஈ,எ, ஏ 4 – ந,ன,ண வரிசை 5- ம வரிசை (போதாதென்றால் அ,ஆ-வைச் சேர்த்துக் கொள்ளவும்.) 6 – ர, ற வரிசை 7- ல, ழ, ள வரிசை 8- வ வரிசை, உ,ஊ,ஒ,ஓ 9- ப, ஜ வரிசை 0 – த, ட வரிசை.

இப்போது 120 என்ற எண்ணிற்கு கசடு என்று வைத்து விட்டேன். கசடு என்றவுடன் என் நினைவில் வருவது கரும்பச்சை நிறத்தில் பிசுபிசுப்பான ஒரு திரவம்.

அடுத்து நான் இதை ஒரு நிமிடம் கற்பனை பண்ணி பார்க்கப் போகிறேன்..

எனக்கு காயம் படுகிறது.. காயத்திலிருந்து கசடு வழிந்து உறைகிறது. அல்லது கடலில் கப்பல் மிதக்கிறது.. கப்பலிலிருந்து இரத்தச் சிவப்பணுக்கள் வழிந்து உறைகின்றன.

இதை ஒரு நிமிடம் நன்றாக மனக்கண் முன் கொண்டு வாருங்கள். முக்கியமான விஷயம்-

யதார்த்தத்தை கற்பனை செய்யலாகாது. நடக்க இயலாத நிகழ்வை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் 120 நாட்கள் என்பது மனதில் பதிந்து விடும்.

இதனையே இரண்டாம் நிலைக் கொக்கியாக வைத்து இன்னும் சில எண்களைப் பிடித்துக் கொள்ளலாம்.

சரி..

ஒருவருடைய அலைபேசி எண் 9952010810. இதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?

நான் “ பஜ்ஜி மச்சத்தகடு விகடன் ” என்று வைத்துக் கொண்டேன். எதுகை மோனையுள்ள இம்மாதிரிப் பதத்தை மனனம் செய்வது எளிதுதானே...! !

மெய்யெழுத்துக்களை விட்டு விடுங்கள்.

ப-9. ஜி-9 ம-5, ச-2 த-0 க-1 டு-0 வி-8 க-1 ட-0

ஒரு முறை இவ்விதம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஆற்றில் பஜ்ஜிகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. நீங்கள் பிடித்ததும் மீன் வடிவத் தகடாக மாறி, விகடன் பத்திரிக்கை வெளி வருகிறது...

இதனால் புதுப் புதுச் சொற்களும் உங்களுக்குப் பழக்கமாகும்.

இனி எண்கள் உங்கள் கையில்.

ஜமாயுங்கள்..! !


Close (X)

15 (5)
  

மேலே