ஒரு குழந்தையின் கேள்வி
பிரியா காலையில் ஜன்னலை மெல்ல திறந்தாள். ஒரு கப் தண்ணீரை பருகியபடி ஒரு நிமிடம் தன்அடுப்பங்கரை ஜன்னல் பக்கமாய் சாய்ந்த பக்கத்துக்கு வீட்டு மா மரத்தின் இலைகைளையும் அது தந்த குளிர் தீண்டலையும் ரசித்தாள். கடகடவென சமையல் வேலைகளை ஆரம்பித்தாள்.
நாலு வயது குழந்தைக்கு தாய் அவள். அவளின் செல்ல பட்டு குட்டி ஜெனி முழிப்பதற்குள் தன் வேலையை முடிக்க எத்தனித்தாள். இல்லாவிட்டால் அவள் தொந்தரவில் இவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போகும் என்பதாலே இத்தனை அவசரம் காட்டினாள்.
பின் செல்ல மகளை எழுப்பி பல் துலக்க வைத்து அதற்கு ஒரு கதை சொல்லி காரணம் சொல்லி அவளை காபி குடிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே. அதுவும் இந்த வருடம் தான் பள்ளியில் சேர்த்து உள்ளதால் காலையில் ஒரே திண்டாட்டம் தான்.குளிப்பாட்டி அப்புறம் சாப்பாடு ஊட்டி விட்டு பள்ளி வண்டி வந்து அவளை ஏற்றி அவளுக்கு விடைகொடுத்து வந்து நாற்காலியில் சாயும் போது காலை வயலில் களை பிடுங்கி மாலையில் வீடு திரும்பிய சோர்வு.
காலை உணவை உட்கொள்ளும்போது கூட குழந்தை அரை தோசை தானே சாப்பிட்டாள் என்ற பெருமூச்சோடு தான் முடித்தாள்.முடிந்தவரை எல்லா வேலைகளையும் ஜெனி வரும் வரை வைத்திராமல் அவள் வருவதற்குள் முடித்துவிட்டு அவளுக்காக காத்திருப்பாள் எதாவது தின் பண்டதோடும் ஒரு கப் காப்பியோடும்.
அன்று மாலையும் அப்படி தான் . பள்ளியில் என்ன நடந்தது. சமத்தாக இருந்தியா? வகுப்பு எப்படி இருந்தது என்று என்னென்னவோ கேட்க ஜெனி வழக்கம்போல சிரித்தாள் சமாளித்தாள் . அப்புறம் நிஷா என்று ஆரம்பித்தால் போதும் ஏதேதோ சொல்ல ஆரம்பிப்பாள்.
நிஷா அவள் தோழி . அவளை பற்றி மட்டுமே அவள் விரும்பி கூறுவாள்.அவள் இடித்ததாகவும் சொல்வாள் பின்னொரு நாள் அவளை ரொம்ப பிடித்ததாக சொல்வாள். அவளுக்கு பாட்டி இருக்கு நமக்கு ஏன் இல்லை என்றாள் ஒருநாள் . நானாகவே போதும் டி ராசாத்தி என்று நிறுத்தும் வரை தொடரும் அவள் கதைகள் .
அன்றும் அப்படி தான் பேசி கொண்டிருக்கும் போது திடீரென ஜெனி கேட்டாள் நேத்து தொலைக்காட்சியில் பார்த்த புது பொம்மை வேண்டும் என்றாள். அம்மா எப்பவும் போல நீ ஜீசஸ் கிட்ட கேளு வாங்கி தருவாங்க என்றாள். இது ப்ரியாவின் வழக்கம் குழந்தை ஏதாவது வேண்டும் என்று கேட்டால் வேண்டாம் என்று விதண்டாவாதம் பேசி அவள் மனதை நோகடிக்கவும் மாட்டாள். இல்லை உடனே இந்தா பிடி என்று கையில் கொடுக்கவும் மாட்டாள் .
நீ கடவுள் கிட்ட வேண்டிக்கோ உனக்கு கிடைக்கும் என்பாள் கூடவே நல்ல பிள்ளையை இருந்தால் கிடைக்கும் என்றும் சொல்லி தருவாள்.
இன்றும் அப்படி தான் சொன்னாள் அவள் . என்ன நினைத்தாளோ மகள் . அம்மா இந்த கடவுளுக்கு பிரேயர் பண்ணனும்னு தோணினா அவங்க யார்ட்ட பிரேயர் பண்ணுவாங்கா மா?
கதவுக்கு என்ன வேணும் ? அவருக்கு மேல் யாரு உண்டு ? எப்படி சொல்ல அவளுக்கு ?என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் திக்கி நின்ற அம்மாவுக்கு அவளே பதில் சொன்னாள் நாம சர்ச் கு போற மாதிரி அவங்க வேற சர்ச் போய் வேற ஜீசஸ் கிட்ட பிரேயர் பண்ணுவாங்க அப்டி தான மா ? என்ன சொல்லவென தெரியாமல் நான் குழம்பி நிற்க இது கூட தெரியாதா என சிரித்த அவள் சிரிப்புக்கு சிரிப்பை தவிர வேற ஒன்றையும் பதிலாக சொல்ல முடியவில்லை அம்மாவுக்கு.
ம் குழந்தையின் அன்பு நம் அன்பை விட ஆழமானது. நம் நம்பிக்கையை விட அதீதமானது . பெரிய குழப்பங்களுக்கு கூட எளிதாக தீர்வு சொல்லும் இந்த குழந்தையின் தன்னம்பிக்கையும் எதற்கும் குழம்பாத தெளிவும் அழகான பாடம் ஒன்றும் இல்லாத பிரச்சனைகளை உலக உருண்டையாய் நம் தலையில் சுழல விட்டு கொண்டு தலை வலிக்கிறது என்று புலம்பி கொண்டு திரியும் நம்மை போன்ற பேதைகளுக்கு என நினைத்தபடி இலகுவான மனதோடு நகர தொடங்கினாள் பிரியா .
மணவிளை யாழினி