நித்தியமும் அநித்தியமும்

அசோகர் காலம்.
பரிவாரிங்களுடன் நகர்வலம் வந்தார் சக்கரவர்த்தி.
குனிந்து, பணிந்து மரியாதைசெலுத்தியது மக்கள் கூட்டம்
சாலையில் சென்ற புத்த பிக்கு ஒருவர் ஒதுங்கி ஓரமாக நின்றார்.
தற்செயலாக அதைக் கண்ட அசோகர், நிற்கும்படி பரிவாரங்களுக்குச் சைகை காட்டிவிட்டு குதிரையிலிருந்து இறங்கினார்.
சற்றுக் கடுகி நடந்து பிக்குவை அணுகியவர் யாரும் எதிர்பாராதபடி அவரது காலடியில் விழுந்து வணங்கினார். அரசரின் மணிமுடியும் தலைமுடியும் துறவியின் பாதங்களில் படிந்தன.

உடன் வந்த அமைச்சரோ துணுக்குற்றார். மண்ணாளும் மன்னனின் மணிமுடி, ஆண்டிக் கோலத்திலிருப்பவரின் அடிகளில் விழுவதா என்று மனம் குமைந்தார். புத்த பிக்குவோ சக்கரவர்த்தியின் சிரசில் இரு கைகளையும் வைத்து அருளாசி வழங்கினார்.

அரண்மனை திரும்பியதும் தனது மனக்குமுறலை அசோகரிடம் கொட்டினார்.
அமைச்சர். பதிலேதும் சொல்லாமல் முறுவலித்த சக்கரவர்த்தி, அமைச்சரிடம் ஆடு, புலி, மனிதன் ஆகிய தலைகளைக் கொண்டு வரும்படி பணித்தார். அமைச்சர் ஏதும் புரியாமல் திகைத்து நிற்க, உடனே கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

அமைச்சரும் காவலர், ஏவலர் சகிதம் புறப்பட்டுச் சென்றார். ஆட்டுத்தலை உடனே கிடைத்தது. நாட்டுக்குள் புலித்தலை கிடைக்காது என்பதால் காட்டுவாசிகள் மூலம் அதைச் சேகரித்தார். மனிதத் தலை?
யார், தருவார் எப்படிக் கிடைக்கும் என்று குழம்பினார். இறுதியாக இடுகாடு வெட்டியான் உதவியால், புதைக்கப்பட்ட ஒரு சவத்தின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்றார்.

மூன்றையும் பார்த்து திருப்தியுற்ற அசோகர், சொன்னதைத் திறம்படச் செய்து முடித்ததற்காக அமைச்சரைப் பாராட்டினார்.
அரசே இவை எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா என்று தயக்கத்துடன் கேட்டார் அமைச்சர். விற்பனைக்கு என்று அரசன் கூறியதும் அதிர்ந்த அமைச்சர், மன்னனைப் பார்க்க, அவரோ அதையும் நீங்கள்தான் செய்து முடிக்க வேண்டும் என்றார். அமைச்சர் குழம்பி நிற்க, ஊருக்குள் சென்று இவற்றை விற்று வாருங்கள். மற்றதை அப்புறம் பேசலாம் என்று கூறிவிட்டு அந்தப்புரம் சென்றார் மன்னர்.

ஒன்றும் தோன்றாதவராய் வீரர்களை அழைத்துக் கொண்டு விற்பனைக்குச் சென்றார் அமைச்சர். சிரமம் ஏதுமில்லாமல் ஆட்டின் தலை விலை போனது. புலியின் தலையை எவரும் வாங்க மறுத்தனர். கடைசியாக வேட்டைக்காரர் ஒருவர் அதை வாங்கிக் கொண்டார். மனிதத் தலையைக் கண்டு வெருண்ட மக்கள் மருண்டோடினர். யாரும் அதைக் கொள்வாரில்லை. விற்க இயலாத அமைச்சர், அரண்மனை திரும்பி அரசனிடம் எடுத்துரைத்தார்.

அவரை அமரப் பணித்த அசோகர், அமைச்சரே, உயிர் நீங்கிய மனித உடல் கால் காசும் பெறாது. இலவசமாகக் கூட எவரும் வாங்க மாட்டார்கள். ஆனால் உயிருள்ள போது மனித உடம்பு என்ன ஆட்டம் ஆடுகிறது. பிறப்பால், செல்வத்தால் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மதியாமல், அண்டாமல் வாழ்ந்தாலும் மரித்தபின் அவர்களின் சவத்தை அண்டாதவர்களே தொட்டுத்தூக்கி
அடக்கம் செய்யவும் நெருப்பில் இட்டு எரிக்கவும் வேண்டியதாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வு பேசியவர்கள் எல்லாம் பிடி சாம்பலாய்ப் போவதும் மண்ணுள் புதைந்து உருக்குலைந்து புழுக்களாய் மாறி மக்கி மண்ணோடு மண்ணாவதுமே நித்தியமாகிறது.

இருக்கும்போது எல்லாம் நித்தியமே என்று எண்ணும் மனிதர்கள், இறந்த பின் எல்லாம் அநித்தியமே என்பதை உணருவதில்லை. ஆனால் உயிருள்ள போதே தம்மிடம் எதுவும் இல்லை, அப்படி உயிர் உள்பட இருப்பவை யாவும் அநித்தியமே என உணர்பவர்களே ஞானிகள். அப்படிப்பட்டவர்களின் அடிகளில் அஞ்ஞானிகளாகிய நாம் விழுவதில் என்ன தவறு இருக்க முடியும். அச் செயல்தான் ஞான வாயிலின் முதல் படி, அஃதை முதலில் படிக்க வேண்டும் அதன் பின் அவர்தம் அடியைப் பிடிக்க வேண்டும் என்றார்.

வாய் மூடாது செவிமடுத்த அமைச்சர் தம் பிழையுணர்ந்து பணிந்து நின்றார்.

துணிந்தவர்களும் பணிந்தவர்களும் வாழ்க்கையில் ஒரு போதும் தோற்பதில்லை என்ற மன்னனின் கூற்றில் பொதிந்திருந்த உண்மை அமைச்சரைப் புடமிட்டது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-Apr-17, 10:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 356

மேலே