தமிழரின் பெருமை - அறிவோம்------படித்ததில் பிடித்தது
விவசாயி என்றாலே அப்பாவி, விவசாயம் என்றாலே நஷ்டம் தரும் தொழில் என்ற எண்ண ஓட்டத்தை மாற்றிவிட்டு இதை வாசியுங்கள். நீங்கள் எப்படி பிழைப்பிற்காக பொருள் ஈட்டுகிறீர்கள் அப்படி அவர்களையும் ஒரு சக உயிராக எண்ணிக்கொள்ளுங்கள்.
விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. அவர்கள் மீது உங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எந்த அனுதாபமும் தேவையில்லை. மாறாக நீங்கள் செய்ததை பின்னோக்கி பார்த்து கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் அவர்களை அணுகுங்கள். அதை மாற்ற முற்படுங்கள்.
இன்று விவசாயிகள் நிர்வாணமாக நிற்பதற்கு இப்போதைய ஆட்சியை மட்டும் குறை சொல்ல மாட்டேன். அவர்களை கோவணத்துடன் நிறுத்தியது முந்தைய ஆட்சி. அதற்கு முன் அவர்கள் வேட்டியை அவிழ்த்தது நாமும், நம்மை சுற்றியுள்ள வியாபார உலகமும் தான்.
ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக (₹ = $) இருந்த சுதந்திர காலத்தின் போது விவசாயம் லாபம் தரும் தொழில். தினம் 1000 வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் ஒரு லாபகரமான கடையை அதன் முதலாளி விட்டு விட்டு போவாறா? அதையே தான் பன்னாட்டு ஏகாதிபத்தியமும் செய்தது.
அப்போதைக்கு இந்தியா 35 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள ஒரு சந்தை. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும் அவர்கள் கணித்தே இருந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பின்னும் குறையாத இயற்கை வளமும் மிச்சமிருந்தது. விட மனது வருமா? ஆனால் நாட்டு மக்களின் நிர்பந்தத்தால் சுதந்திரமும் தர வேண்டியிருந்தது.
ஆகஸ்ட் 15ல் ஒரு சுதந்திரத்தை அறிவித்தனர். அது சுதந்திரம் என்பதை விட வரும் காலங்களில் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்போம் எனும் ஒப்பந்தமே. அது நம் மண், நம் விதைகள், நம் உணவு, நம் மருந்து நாம் யாரையும் சார்ந்தில்லை என்ற காலகட்டம். நினைவில் கொள்ளுங்கள் ஒரு டாலர் ஒரு ரூபாயாக இருந்த நேரமது.
திடீரென பசுமை புரட்சி என விவசாயத்தை திசை மாற்றினர். 70% விவசாயிகளை கொண்ட ஒரு விவசாய தேசம் கறியை சுட்டு தின்ற மேற்கத்திய காட்டுமிராண்டி சொன்ன விவசாய முறையை கையில் எடுத்தது. கலப்பின விதைகளை இறக்குமதி செய்தது. போர் கழிவுகளான உரத்தையும், பூச்சிகொல்லிகளையும் தலையில் கட்டியது.
விவசாய கடன்கள் கொடுத்தனர். கட்ட முடியாதவர்களிடம் பாரம்பரிய கலப்பையெல்லாம் பறிமுதல் செய்தனர். அந்த கலப்பின விதைகளை ஒருமுறை தான் பயன்படுத்த முடியும். எப்போதும் அவர்களை நம்பியிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். இதெல்லாம் வாங்க மக்களின் வரிப்பணத்தில் மானியம் கொடுத்தனர். நில வரையறை சட்டம் கொண்டு வரப்பட்டது.
இன்னொரு புறம் வெண்மை புரட்சியில் ஜெர்சி பசுக்கள் வந்தது. அதாவது விவசாயிகள் யாரையும் சார்ந்தில்லாத இயற்கை விவசாயத்திலிருந்து அரசை அதன் பின்னனியில் பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்கும் ஒரு அடிமை விவசாய முறைக்கு திட்டமிட்டே மாற்றப்பட்டனர். விதை, உரம், டிராக்டர், மாடுகள், பூச்சிக்கொல்லி என ஒவ்வொன்றும் டாலரில் இறக்குமதியானது.
இப்போது இதன் மூலமாக தோராயமாக 4 லட்சம் கோடி அன்னிய செலவாணி இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. இது போக இந்த விஷ உணவிலும், ஜெர்சி பாலிலும் நமக்கு கிடைத்த இலவச இணைப்பு நோய்கள். அதற்கான மருத்துவத்திற்கு இன்று நாம் செலவிடும் டாலர்கள் இன்னும் அதிகம். விளைவு டாலரின் மதிப்பு 68 ஆண்டுகளில் 68 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த 4 லட்சம் கோடி நம்மிடமிருந்தால் இன்று நிர்வாணமாக நிற்க அவசியமில்லை. அரபு நாடுகளுக்கு எப்படி எண்ணெயோ அப்படி தான் இந்தியாவிற்கு விவசாயம். இந்தியாவின் பண மதிப்பு ஷேர் மார்க்கெட் சார்ந்ததல்ல நீங்களும் நானும் தினம் கடந்து செல்லும் காய்கறி மார்க்கெட் சார்ந்தது. நமது குலத்தொழில் மண்ணை தோண்டி மீதேன் எடுப்பதல்ல. மண்ணை சுரண்டி நாத்து நடுவது.
விவசாயம் உலகின் மிக உயர்ந்த தொழில். ஒரு தேசம் உணவு தேவையில் தன்னிறைவு அடையாமல் அதனால் வல்லரசாக மாறவே முடியாது. இங்கு ஆயுதமில்லாத தேசங்களில் மக்கள் கஷ்டப்படுவதில்லை. உணவில்லாத சோமாலியா தான் உலகத்தால் பரிதாபமாக பார்க்கப்படுகிறது.
தி மார்ட்டியன் (The Martain) என்றொரு ஆங்கில படம். ஆராய்ச்சிக்காக செவ்வாய் கிரகம் செல்லும் விஞ்ஞானிகள் அணியில் ஒருவர் அங்கு ஏற்படும் புயலால் மாட்டிக்கொள்வார். அவருடன் வந்தவர்கள் இறந்துவிட்டதாக எண்ணி சென்று விடுவார்கள். அவர்களை தொடர்பு கொள்ள சிக்னல் இருக்காது.
இறுதியில் அந்த விண்கலத்திலிருந்த மனித கழிவுகளை கொண்டு விவசாயம் செய்து உயிர் பிழைப்பார். அவர் கற்ற அறிவியலில் அவர் உயிர் காக்க உதவியது பயாலஜி மட்டுமே. இறைவன் இப்படியான ஒரு தொழிலை நமக்கு கொடுத்துள்ளான். அது நமக்கு புரிவதில்லை.
நாம் இப்போது செய்தாக வேண்டியது பாரம்பரிய விதைகளை மீட்பது. KFC, சன் ப்ளவர் ஆயில் என பழகிவிட்ட தலைமுறையை உடனடியாக இயற்கை உணவுக்கு மாற சொன்னால் அபத்தம். ஆனால் அடுத்து உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் விளம்பரத்தில் காட்டும் கலப்பட எண்ணெயும், கலப்பின பாலையும் கொடுக்காமல் இயற்கை உணவையும், நாட்டு பாலையும் பழக்குங்கள்.
அதிகம் செலவு செய்து மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்ப்பது போல இதை செய்திடுங்கள். அவர்கள் எதிர்காலத்தில் மருத்துவத்திற்கு செலவு செய்ய மாட்டார்கள். நீங்களும் படிப்படியாக மாறுங்கள். கிராமத்திற்கும் உங்களுக்குமான தொடர்பை அதிக படுத்துங்கள். அதிக பணம் உள்ளவர்கள் விவசாயத்தில் முதலீடு செய்யுங்கள்.
நான் மென்பொருளில் சம்பாதிக்கும் சேமிப்பை நிலத்தை பண்படுத்தவே செலவிடுகிறேன். 5 வருடத்தில் முழுநேர விவசாயியாவதே என் திட்டம். நீங்களும் மாறுங்கள். இப்போதைக்கு மொட்டை மாடியில் தக்காளி விளைவிப்பதில் கூட உங்கள் பயணத்தை தொடங்கலாம்.
இந்த முறையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு வரும்போது விதை நம்முடையதாகும், விவசாயம் நம்முடையதாகும். விவசாயம் நம்முடையாதாக மாறும்போது உணவில் தன்னிறைவு பெறலாம், பின் ஏற்றுமதி செய்யலாம். டாலர் மதிப்பை ரூபாய் தூக்கி சாப்பிடும். அது தான் வல்லரசு தேசம்.
நம்புங்கள்! விவசாயிகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நம்மை மிகப்பெரிய வல்லரசாக்கும் விவசாயம் திட்டமிட்டே நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்காக அதை நாம் மீட்டாக வேண்டும். இப்போது மாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை.. smile எமோடிகான்:-)