மெல்லத் திறந்தது கதவு

மெல்லத் திறந்தது கதவு !
சிறுகதை by ; பூ.சுப்ரமணியன்

விநாயகர் படத்துக்கு அருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஆறு அடித்து ஓய்ந்ததும் வாசு கண் விழிக்கவும் சரியாக இருந்தது. வாசு கண்களை விழிக்கும்போதே அவன் உடலும் உள்ளமும் அன்று மகிழ்ச்சியில் துள்ளியது . அப்போது அவனுக்கு அவன் பி.காம் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியைப்போல் இருந்தது.

இன்று அவன் செல்லப்போகும் வேலைக்கான நேர்முகப்பேட்டியில் வெற்றி பெறுவதற்கான மகிழ்ச்சியின் அறிகுறியா ! இந்த வேலை அவனுக்கு நிச்சயம்தானா? இந்த வேலை தனக்கு கிடைத்துவிடுமா ‘ தன்னையும் அம்மாவையும் ஏளனமாக பேசிய மாமா அத்தைக்கு முன்னால் தானும் அம்மாவும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று வாசு படுக்கையை விட்டு எழுந்தவன், பல் துலக்கிக்கொண்டே பலவிதமாக சிந்தனைகளை ஓட விட்டான்.

எதிரே வந்த அவன் அம்மா ராஜம் “ வாசு இன்னிக்கி எங்கையோ போகணும்னு சொல்லிட்டு இருந்தே எப்போது போகணும் “

“பத்து மணிக்குப் போகணும் அம்மா சீக்கிரம் டிபன் ரெடி பண்ணுங்க அம்மா ” என்றான்

“ வேலை விசயமாகத்தானே போறே ?”

வாசு ‘ஆமாம் ‘என்பதுபோல் தலையசைத்தான்.

“என்னவோப்பா. இந்த வேலையாவது உனக்குக் கிடைத்தால் நமக்குத் தேவலை “ அம்மாவின் குரலில் கவலை தெரிந்தது.

வாசு அவன் அம்மாவைத் தேற்றினான். ”அம்மா இந்த தடவை நான் போற இன்டர்வியூவில் கண்டிப்பாக, எனக்கு வேலை கிடைச்சிடும். உங்களுக்கும் எனக்கும் ஏமாற்றம் இருக்காது. நான் எப்படி இவ்வளவு உறுதியாய்ச் சொல்றேன்னு பார்க்கிறீங்களா ?! நான் என் பிரெண்ட்ஸ் மூலம் கஷ்டப்பட்டு எம்.எல்.ஏ. விடமிருந்து சிபார்சுக் கடிதம் வாங்கிட்டு வந்திட்டேன். இந்த எம்.எல்.ஏ அவ்வளவாக யாருக்கும் சிபார்சு கடிதம் கொடுக்கமாட்டார் அவர் யாருக்காவது சிபார்சு கடிதம் கொடுத்தால் அந்தக் காரியம் முடிந்து விடும்மா. கவலைப்படாதேங்க இந்தப் பெரிய கம்பெனியில் எனக்கு கண்டிப்பா வேலை கிடைத்து விடும். நம்ம கஷ்டமெல்லாம் போயிடும் அம்மா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் ” என்ற நம்பிக்கையுடன் அம்மாவிடம் வாசு கூறினான்.
அவன் மாமாவும் அத்தையும் அவன் இல்லாதபோது வீட்டிற்கு வந்தது பற்றியும், அவர்கள் தன்னிடம் வருத்தப்பட்டுக் கூறியதையும் அவன் அம்மா தயக்கத்துடனும், பயந்துகொண்டே வாசுவிடம் அவர்கள் தன்னிடம் கூறியதை அப்படியே இப்போது வெகுளித்தனமாக கூறினாள்.

‘தங்கச்சி நீயும் உன் பிள்ளை வாசுவும் ஏன் இப்படிக் கஷ்டப்படணும் அரண்மனையாட்டம் ரெண்டு வீடு எனக்கு இருக்கு .எதற்கு இந்த சின்ன வாடகை வீட்டுல இருந்து கஷ்டப்படுறீங்க . நம்ம வாசுவை நான் நடத்திக்கொண்டிருக்கும் கம்பெனியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லு. ‘ என்று அவன் மாமா கூறியதை அப்படியே கூறியவள் சிறிது தயக்கத்துடன் ... அப்புறம் அவர் பெண் சுமதியை உனக்கு கட்டி வெச்சு நாமே எல்லாரும் ஒரே குடும்பமாக இருப்போம்னு ‘...அம்மா ராஜம் வாசுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கூறினாள்.

அவன் அதற்கு எதுவும் பேசாமல் இருக்கவும் “ வாசு ,உன் மாமா உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு அவர் நெனக்கிறதிலே என்ன தப்பு ? என்னவோ அப்போது நம்மிடம் அவர் அப்படி நடந்து கொண்டார். நம்ம போதாத காலம். அதையே நீ மனசிலே வைத்துக் கொண்டிருக்கலாமா? மன்னித்து மறக்கத் தெரிந்தவங்கதான் மனுஷன் ..”என்று அவன் அம்மா ராஜம் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்....

வாசு உடனே கோபத்துடன் “ என்னைப் பொறுத்தவரை நான் மாமா விஷயத்தில் மனுசனாக இருக்கவோ, கடந்த காலத்தை மறக்கவோ முடியாது எனக்கு விருப்பமில்லையம்மா ! அவர் பெண் சுமதிக்கு வேறு எங்காவது மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுங்கள்” என்று அம்மாவைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினான்.

வாசு கோபத்துடன் பேன்ட்டை எடுத்து மாட்டியவன் , அம்மாவிடம் ஒன்றும் சொல்லாமல் வேகமாக வெளியே சென்றவன் மீண்டும் வீட்டிற்குள் சென்று, அவன் நேர்முகத்தேர்வுக்காக தனது படித்த சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்துக்கொண்டான் சட்டைப் பாக்கட்டில் எம்.எல்.ஏ சிபார்சுக் கடிதம் இருக்கிற்தா என்று பார்த்துக் கொண்டான். கோபத்துடன் வீட்டை விட்டுக் கிளம்பி பேருந்து நிறுத்தம் வந்தான்.

நிரம்பி வழிந்த பேருந்தில் ஏறிய வாசு, இன்டர்வியூ நடக்கும் கம்பெனியை அடைந்தான். அவன் வருவதற்குள் நிறையப்பேர் வரிசையாக அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அந்தக் கம்பெனியில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தார்கள். வாசுவும் பெஞ்சில் சென்று அமர்ந்தான். அடிக்கடி தான் வாங்கிவந்த எம்.எல்.ஏ யின் சிபார்சுக் கடிதத்தையும் பார்த்துக் கொண்டான். எத்தனைபேர் வந்திருந்தால் நமக்கென்ன, தன்னிடம்தான் எம்.எல்.ஏ யின் சிபார்சுக்கடிதம் இருக்கிறதே. எனவே இந்த வேலை தனக்குதான் என்று மனதிற்குள் எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டான்.

அம்மாவிடம் காலையில் அவ்வளவு கோபாமாக தான் நடந்திருக்க வேண்டாம் என்று இப்போது வாசு நினைத்து வருந்தினான். அவன் அப்பா மாரடைப்பினால் திடீரென்று இறந்தவுடன் , ஏழ்மை நிலையில் இருந்த அவனும் அவன் அம்மாவும் அவன் மாமா வீட்டில் இருக்க நேர்ந்த அந்தக் கசப்பான கஷ்டமான மூன்று மாதங்களை இப்போது நினைத்துப் பார்த்தான்.

வாசுவின் மாமாவும் அவர் குடும்பமும் நல்ல வசதியாக இருந்தார்கள். வாசுவின் அப்பா இறந்தபோது, அவன் பி.காம் படித்துக் கொண்டிருந்தான். அவன் மாமா விரும்பி தன்னோடு வந்து இருக்கும்படி கூறியதால் , வேறு வழியில் அப்போது அவனும் அவன் அம்மாவும் அவர் வீட்டை தஞ்சம் அடைந்தார்கள். அவன் அத்தைக்கு நல்ல குணமோ பொறுமையோ கிடையாது. அவன் அத்தையானவள் வாசுவோட அம்மாவையும் அவனையும் வேலைக்காரி, வேலைக்காரனை போல் நடத்தினாள்.

வாசுவின் படிப்பை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுத்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் வாசு பி.காம். தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அவன் அத்தை வேகமாக அவனிடம் உள்ள புத்தகத்தை பிடுங்கி எறிந்துவிட்டு .’ சோத்துக்கில்லாத நாய்களெல்லாம் காலேஜ் படிப்பு வேண்டிக்கிடக்கு ‘.. என்று ஏதேதோவெல்லாம் அவர்கள் மனம் புண்படும்படி பேச ஆரம்பித்தாள்.

வாசு கோபத்துடன் பற்களைக் கடித்துக்கொண்டு, அப்போது அருகே இருந்த அவன் மாமாவைப் பார்த்தான். அத்தை பேசியதெல்லாம் மாமா, கேட்டுக்கொண்டும் அத்தையைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதையெல்லாம் பார்த்த வாசு, தனது அம்மாவை கோபத்துடன் அழைத்து, மாமாவின் வீட்டிலிருந்து மூட்டையை கட்டச் சொன்னான். அவன் நண்பன் மூலம் ஒரு சிறுவீட்டை வாடகைப் பிடித்து, அதில் தன் அம்மாவை இருக்க வைத்தான். எப்படியோ அவனும் அவன் அம்மாவுடன் கஷ்டப்பட்டுக்கொண்டே பி.காம் தேர்ச்சியும் பெற்று விட்டான். இப்படிப்பட்ட மாமா, அத்தை உறவு தனக்குத் தேவையா ? என்று அவன் அம்மாவிடம் அடிக்கடி கூறுவதோடு , தன்னைத்தானே கேட்டுக் கொள்வான்.

“ சார் சார் !” என்ற குரல் கேட்டு நினைவலைகளிலிருந்து மீண்டும் தன்னிலைக்கு வந்தவன், தன் அருகே ஓர் இளைஞன் தன்னைப்போலவே சான்றிதழ்கள் அடங்கிய கோப்புடன் காத்திருந்தான். அந்த இளைஞன்தான் வாசுவை சார் சார் என்று அழைத்தான். வாசுவும் அந்த இளைஞனைத் தவிர இன்டர்வியூக்காக வந்தவர்கள் வேறு யாரும் அங்கு இல்லை.

வாசு அந்த இளைஞரைப் பார்த்து “ என்ன சார் இன்டர்வியூ எல்லாம் முடிந்து விட்டாதா? என்று கேட்டான்.

அந்த இளைஞர் வாசுவிடம் எல்லா விபரங்களையும் பொறுமையாகக் கூறினான். கம்பெனி எம்.டி . மாலை மூன்று மணிக்கு இண்டர்வ்யூவை மாற்றி வைத்து விட்டதாக பியூன் வந்து கூறியவுடன் எல்லாரும் சாப்பிட சென்று விட்டார்கள். தாங்கள் இரண்டுபேர்கள் மட்டும் இருப்பதாகவும் தெரிவித்தான்.

“ ஏன் சார் நீங்க சாப்பிடப் போகலையா ? “ என்று அந்த இளைஞனைப் பார்த்து வாசு கேட்டவுடன் , அந்த இளைஞன் தன்னோட சொந்த சோகக்கதையைக் கூற ஆரம்பித்தவன், ஆரம்பித்தவுடன் “சார்! உங்க குட் நேம் ப்ளீஸ்” என்று வாசுவைப் பார்த்துக் கேட்டான்.

வாசு தன் பெயரைக் கூறியவுடன் “ என் பெயரும் வாசுதான் சார் என்னோட அப்பா பெயர் முத்துவேலன் “ என்று கூறிய அந்த இளைஞன் , தன்னைப்பற்றி வாசு கேட்காமலேயே
கூற ஆரம்பித்தான்.

“ சார் என்னோட குடும்பம் பெரிய குடும்பம். எனக்கு ரெண்டு தங்கைகள் , ரெண்டு தம்பிகள். வயதான் தாயார். நான்தான் குடும்பத்தில் மூத்தவன் . என்னோட அப்பா நான் படித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார். நான்தான் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கு. இந்நிலையில் எனக்கு ஒரு நிரந்தரமான வேலை கிடைத்தால் ,எங்கள் குடும்பத்தை ஓரளவு பசி பட்டினியில்லாமல் நடத்திச் செல்லலாம், என்றவன் எம்.வாசு மேலும் தொடர்ந்தான்.

“ என் ராசியோ என்னமோ எங்கே வேலைக்குப் போனாலும் சிபார்சுக்குத்தான் வேலை கொடுக்கிறார்கள். மெரிட்டுக்கு எங்கே கொடுக்குறாங்க. நான் பி.காம். படித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டு இருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. கடவுள்தான் எனக்கு வேலைக்கு சிபாரிசு செய்ய வேண்டும். வேலை எனக்கு கிடைக்கலைன்னா, எங்கள் குடும்பமே செத்து விடும் போலிருக்கு.” என்று எம். வாசு கூறும்போது அவன் குரலில் சோகம் இழையோடியது.

வாசு தன் நிலையையும் , தன்னிடம் சோககீதம் பாடிய எம்.வாசு என்பவனின் நிலையையும் நினைத்துப் பார்த்தான். தன்னை விட அவன் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. தான் நினைத்தால் அம்மா கூறியபடி மாமா பெண்ணை திருமணம் முடித்து நல்ல நிலையில் வாழலாம். தன்னோட வீண்பிடிவாததாலும் , கோபத்தாலும் அம்மாவும் நானும் தனியே இருக்கிறோம்.

அம்மா கூறியதுபோல் மறப்பதும், மன்னிப்பதும்தான் மனுஷன் என்பதை இப்போது வாசு நினைத்துப் பார்த்து வருந்தினான். மேலும் ஒருவாரத்திற்கு முன்பாக தான் நாளிதழ் ஒன்றில் ‘ ஆன்மிகம் அறிவோமா’ என்று கட்டம்போட்டு பிரசுரம் செய்ததைப் படித்ததை, இப்போது நினைத்துப் பார்த்தான். அதில் ’ மனிதன் கோவில் குளங்களைச் சுற்றுவதாலோ நேர்த்திக்கடன் செலுத்துவதாலோ, அவன் பக்தனாகவோ பெரிய மனிதனாகவோ கருதப்பட மாட்டான், எவன் உள்ளத்தில் கருணை பெருக்கெடுத்து ஓடுகிற்தோ அவனிடம்தான் இறைவன் குடியிருக்கிறான். அதாவது அனைவரும் தயவுடன்தான் வாழ வேண்டும். கோபம், வீணான கர்வம் முரட்டுப் பிடிவாதம் இவையெல்லாம் மனிதனை மிருகமாக்கவே செய்யும். எனவே தான் வாழும் காலங்களில் முடிந்தளவு தயவுடன் வாழ வேண்டும் ‘ என்று பிரசுரித்ததை படித்ததை இப்போது வாசு நினைத்துப் பார்த்தான்.

“ சார் என்ன சார் என்னோட சோகக்கதையைக் கூறி உங்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டேனா ?” எம்.வாசு என்ற இளைஞர் கேட்டபோதுதான் வாசு தன் நினைவுக்கு நிலைக்கு வந்தான்.

“ இல்லை .அதெல்லாம் ஒன்றும் இல்லை. சோகக்கதை யாரிடம்தான் இல்லை. உங்களுக்கு இந்த வேலை கண்டிப்பாகக் கிடைக்கும் என்று கூறிக்கொண்டே தன்னோட பாக்கெட்டில் வைத்திருந்த எம்.எல்.ஏ யின் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தை எடுத்து எம்.வாசு என்ற இளைஞன் கையில் கொடுத்தபோது ,முதலில் அவன் மறுத்தான். பின்னர் வாசு வற்புறுத்தி விபரத்தைக் கூறியவுடன், மறுக்காமல் அந்த எம். எல்.ஏ யின் சிபாரிசுக் கடிதத்தை எம்.வாசு என்ற இளைஞர் வாங்கிக் கொண்டு கண்ணில் நீர்பெருக வாசுவுக்கு நன்றி கூறினான்.

“ நம்ம ரெண்டுபேரின் பெயரும் ஒன்றுபோல் இருப்பதால், இந்த சிபாரிசுக்கடிதம் உங்களுக்கு இந்த வேலை கிடைப்பதற்கு வசதியாக இருக்கிறது. விஷ் யூ ஆல் தெ பெஸ்ட்” என்று கூறி எம் வாசுவின் கையைப் பிடித்து சந்தோசமாக கையைப்பிடித்து குலுக்கினான்.

வாசுவின் பூட்டிய மனக்கதவு மெல்லத்திறந்தது ., தான் வீட்டிற்குச் சென்றவுடன் முதலில் தன்னோட மாமா வீட்டிற்கு அம்மாவை அழைத்துச் செல்லவேண்டும், தன்னோட மாமா, அம்மாவிடம் கூறியபடி தான் அவருடைய கம்பேனியில் சேர்ந்து அவருக்கு உதவியாக இருக்கவேண்டும் , இனிமேல் அம்மாவையும் மாமாவையும் முடிந்தவரை அனைவரையும் சந்தோஷப்படும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற மன உறுதியுடனும் முடிவுடனும் ஊருக்குச் செல்வதற்கு பஸ் ஏறினான். கொள்ளவேண்டும் என்ற மன உறுதியுடனும் முடிவுடனும் ஊருக்குச் செல்வதற்கு பஸ் ஏறினான்.


பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (30-Apr-17, 2:01 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 523

மேலே