அவளா இவள்
அவளா ? இவள் !
மனதை மயக்கும் மாலை நேரம். மேற்குத் திசையில் பகலவன் தனது ஓய்விற்காக மெல்ல மறைந்து கொண்டிருந்தான். செம்மை நிறைந்த அந்தப் பகலவனை ,அரண்மனை நிலா முற்றத்தில் நின்று கொண்டிருந்த நன்னன், வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். நாடி வந்தோர்கெல்லாம் வாரி, வாரி வழங்கியதால் , சிவந்து கிடந்த கைகளின் நிறத்தைப் போலும் , சிவந்து கிடந்த பகலவனையே பார்த்துக் கொண்டிருந்தான். தான் ஒரு நாடாளும் மன்னனாக இருந்தும், தன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றவளின் துணிச்சலைப் பாராட்டுவதா? இல்லை பழிப்பதா ?,என அவன் உள்ளம் தவித்துக் கொண்டு இருந்தது. வாழ வைப்பதுதானே காதல்! ஒருவரை வீழ்த்துவதா காதல் ? காதலிக்கப்பட்டவர்கள் நன்றாக ,மகிழ்வாக வாழ வேண்டும் என்று நினைப்பதுதானே உண்மைக் காதல். அவன் உள்ளம் கனத்துக் கிடந்தாலும், காதல் என்பது எத்தனை உன்னதமானது என்பதையும் அவனால் உணர முடிந்தது. அவன் உள்ளத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் வரிசைக் கட்டி ஓடத் தொடங்கின.
மாம்பழம் என்றால் நன்னனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே தனியாக ஒரு மாந்தோட்டத்தையே உருவாக்கி, அங்கு தனக்குப் பிடித்த, மாம்பழ வகை மரங்களை வளர்த்து இருந்தான் .மாம்பழத்தையோ இல்லை மாங்கனியினையோ யாரும் திருடி விடக் கூடாது என்பதற்காக தகுந்த காவலுக்கும் ஏற்பாடு செய்திருந்தான். மா மரங்களுக்குத் தேவையான பொழுது தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏதுவாக, தோப்பின் உள்ளேயே ஓடும்படியாக சிற்றோடை ஒன்றையும் வெட்டி இருந்தான். அவ்வப்போது நன்னனே வந்து ஆய்வு செய்வதும் உண்டு.
அன்றும் அப்படித்தான், மாந்தோப்பில் செழித்திருந்த மரங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்துகொண்டே, சிற்றோடை ஓரமாக நடந்து கொண்டு இருந்தான்,.தோப்பின் எல்லை வரையிலும் நடந்து விட்டான்.தோப்பின் நடுவாக ஓடிய சிற்றாறு. வேலிக்கு அப்பாலும் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. வேலிக்கு அப்பால் சிற்றோடையின் கரையின் இருபுறத்திலும் படித்துறைகள் கட்டி, மக்கள் குளித்துக் கொள்வதற்கும், துணிகளை துவைத்துக் கொள்வதற்கும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தான். அதனால் அந்தப் படித்துறையில் பெண்கள் கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.
எத்தனையோ முறைகள் அந்த எல்லை வரையில் நன்னன் நடந்து வந்திருந்த போதும்,படித்துறையின் பக்கம் அவனது கண்கள் சென்றதே இல்லை. அப்படி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்ததும் இல்லை.
அன்று எப்படியோ, அவனது கண்கள் அவனை அறியாமலே ,படித்துறைப் பக்கம் சென்று விட்டன.சென்ற கண்கள் வேறு பக்கம் திரும்பாமல் நிலைகொண்டு நின்றது. திரும்ப வேண்டும் என்னும் எண்ணம் சிறிதும் இன்றி , வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டே நின்றான்.
அவன் பார்வைக்குக் காரணம், அந்த வெண்ணிலவு தான். பகலில் கூட வெண்ணிலவு நீராட வருமா? என்று அவன் வியந்து தான் போனான். நீராடியதால் ஆடை. உடம்போடு ஒட்டிக்கொண்டு விட்டதனால் ,அவள் உடலின் படைப்புக் கடவள் படைத்த கட்டழகு , நன்னனின் இளமைக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றால் அது வியப்பில்லை. எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்பது தெரியவில்லை. வெண்ணிலவு குளித்து முடித்து படித்தறையினை விட்டு அகலவும்,
‘மன்னா ‘ எனும் குரல் கேட்கவும் திடுக்கிட்டுத் திரும்பினான். தான் என்ன செய்தோம் என்று எண்ணிய போது அவனுக்குள், ஒரு வித நாணமும், அச்சமும் கலந்து எழுந்தது என்னவோ உண்மை. திரும்பிய மன்னன் முன்னால் மாந்தோப்புக் காவல்காரன் கையை கட்டிக்கொண்டு பணிவோடு நின்றிருந்தான்.இதுபோன்று ஒருபோதும் நின்றிராத மன்னவனைப் பார்த்த காவல்காரனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மன்னனிடம் கேட்கலாமா? வேண்டாமா ? என்னும் குழப்பத்தில், தலையினைச் சொரிந்து கொண்டு நின்றிருந்தான்.
‘என்ன ?’ என்பது போல் இருந்தது திரும்பிய மன்னனின் பார்வை.
‘ஒன்றுமில்லை மன்னவா ..தாங்கள் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே நின்று கொண்டு இருக்கிறீர்களே ... அதான்... ‘ என்று இழுத்தான்.
‘ அரசாங்கத்தால் கட்டப்பட்ட படித்துறையினை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். நம்மை அறியாமல் செய்த தவறுகளினால் மக்கள் ஏதாவது இன்னல்களை அனுபவிக்கிறார்களா? என்று கவனித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்து அழைத்து விட்டாய். சரி பரவாயில்லை. நீ போய் குதிரையை தயார்படுத்து. நேரமாகிவிட்டது. கிளம்பணும்.’ என்றவன் ‘அப்புறம் கவனமாக காவல் செய்ய வேண்டும். இந்தத் தோப்பு மாங்கனிகளையோ, மாங்காயினையோ தொட்டாலே மரண தண்டனைதான் என்று அறிப்பு கல்லை மக்கள் கண்ணில் படும்படி பதித்து விடு ‘என்று ஒரு உத்தரவும போட்டான்.
‘சரி ! மன்னவா... தங்களின் ஆணை ‘ என்று கூறிவிட்டு காவலன் அகலவும், மீண்டும் அவனது கண்கள் அவனை அறியாமலே படித்துறைப் பக்கம் சென்றன. அந்த வானத்து முழுநிலவு அங்கே இப்போது இல்லை.
அன்று முழுவதும் அவனது உள்ளத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்தான்.யாராக இருக்குமென்று அவனது மனது அலை பாய்ந்துகொண்டிருந்தது. இதுவரை இப்படி ஒரு பெண்ணை தான் பார்த்தது இல்லையே ? ஒருவேளை படித்துறை பக்கம் செல்லாது இருந்ததனால் , இப்படி ஒரு அழகு தேவதையை பார்க்காமல் இருந்து விட்டோமோ ? எந்தவொரு பெண்ணும் இன்னும் இடம் பிடிக்காத அவனது இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்ட அவள் யாராக இருக்கும் ? யாரென்று கேட்பதற்கு அவனது காதல் உணர்வு தடைபோட்டு விட்டது. அவள் யாரென்பதை நாமே கண்டு பிடித்துக் கொள்ள வேண்டுமே தவிற, பிறரிடம் கேட்டு, சந்தேகப் புயலை உண்டாக்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
இரவு வந்தது. கண்கள் தூங்க மறுத்தன. கண்களை மூடினால் , கண்களுக்குள் அவளே நின்று களிநடனம் புரிந்து, அவனது மனதுக்கு போதை ஏற்றிக் கொண்டிருந்தாள்.
பொழுது புலருமுன்னே எழுந்து விட்ட நன்னன், தனது குதிரையில் ஏறி, நகரத் தெருக்களின் வழியே தனது குதிரையை செலுத்தினான். மெதுவாக குதிரையை ஒட்டி வந்தவன்,முடிவாக சிற்றோடையின் படித்துறைக்குச் செல்லும் பாதையில் திரும்பினான். படித்துறை அருகிலும் வந்து விட்டான்.தனது உள்ளமெல்லாம் ஊடுருவிவிட்ட அந்தப் பெண்ணை அவனது கண்கள் தேடின. படித்துறைக்குச் செல்வதும், குளித்துவிட்டு திரும்பி வருவதுமாக பெண்கள் இருந்தனர். உள்ளத்தில் அவளது உருவத்தைச் சுமந்து, கண்களால் அவளைத் தேடிக் கொண்டே வந்தவன், குதிரையை முறையாக கட்டுப்படுத்தத் தவற அது முன்னால் சென்ற பெண்ணை சற்று இடிக்க, ‘ஐயோ ! என்னைக் காப்பாத்துங்க ‘ என்னும் குரல் கேட்டு தன் சுய நினைவுக்கு வந்து, குதிரையை சட்டென நிறுத்தி, குதிரையில் இருந்து கீழே குதித்தான், அலறியவள் தனது கனவுக்கன்னிதான் என்பதை அறிந்தபோது, அவனது மனம் படபடவென அடித்துக் கொண்டது. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டவன்,
‘என்ன பெண்ணே ? பலமாக இடித்து விட்டதா? எங்கே காட்டு பார்க்கலாம்?.. வைத்தியரை வரச்சொல்லவா ?’ என்று, தான் மன்னன் என்பதையும் மறந்து குழைந்தான்.
முன்னே நிற்பது நாட்டின் மன்னன் என்பது தெரிந்த போது, அவளுக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை.உடம்பெல்லாம் ஒருவிட நடுக்கந்தான் தோன்றியது.
‘மன்னவா ! தெரியாமல் நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்’ என்றவளின் குரலில் அழுகை தொக்கி நின்றது. அதோடு தவறு செய்துவிட்டோமே எனும் பயமும் கலந்து இருந்தது.
‘இல்லை பெண்ணே ! நான்தான் ஏதோ ஞாபகத்தில் குதிரையை செலுத்தி உன்னை இடித்துவிட்டேன். எனவே நீதான் என்னை மன்னிக்க வேண்டும்.’
‘நீங்கள் இந்நாட்டு மன்னர். நான் சாதாரண குடிமகள் ‘
‘நாட்டுக்கு வேண்டுமானால் சாதாரண குடிமகளாக இருக்கலாம்.ஆனால் எனக்கு என் இதய ராணி. ஏன் இந்நாட்டின் வருங்கால ராணி ‘ என்று சொல்லத்தான் துடித்தான். ஆனால் வார்த்தைகள் வர மறுத்தன. என்னதான் மன்னவனாக இருந்தாலும்,தன் இதயம் கவர்ந்த பெண்ணிடம், முதன்முதலில் காதல் மனதைத் திறந்து காட்டுவதில் தயக்கம் ஏற்படத்தானே செய்யும்.
‘பெண்ணே ! நீ படித்துறைக்கு நீராடத்தானே செல்கின்றாய் ?’
‘ஆமாம் மன்னவா ‘
‘படித்துறையில் பெண்கள் நீராடுவதற்கேற்ற எல்லா வசதிகளும் இருக்கின்றதா ? இல்லை ஏதாவது குறைகள் இருக்கின்றனவா?’
‘என்னைப் பொறுத்தவரையில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை மன்னவா ? நான் செல்லட்டுமா ?’ கால்களில் சுடுநீரை ஊற்றிக்கொண்டு நிற்பவள் போல் துடித்தாள்.
‘அதற்குள் என்ன அவசரம்?’ என்று கேட்கத்தான் நினைத்தான்.ஆனால் அதற்குமேல் பேசுவதற்கு அவனுக்குத் துணிச்சல் வரவில்லை.
‘சரி பெண்ணே ! செல் ‘ என்றான். அவள் படித்துறையை நோக்கி ஓட்டமும், நடையுமாகச் செல்ல, நன்னன் தனது குதிரையில் ஏறி, அரண்மனையை நோக்கி குதிரையை செலுத்தினான்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தனது காதலை வளர்க்க நினைத்தான். தான் மன்னனாக இருப்பதால் .அவளை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஒரு மன்னனை விரும்பாத மங்கையும் இந்த மண்ணில் இருப்பாளோ ? மாட்டாள் என்னும் அபரிமிதமான நம்பிக்கைக் கொண்டிருந்தான்.
அடுத்த மூன்று நாட்களும் நன்னன் படித்துறைப் பக்கம் வந்தான். ஆனால் அவள் வரவில்லை. அவன் உள்ளம் துடித்துப் போனது.தனது இதயத்தை யாரோ பிடுங்கி எறிய முயல்வது போல் இருந்தது. என்னதான் மன்னவனாக இருந்தாலும் , தன் காதலைச் சொல்லுவதற்க்குத் தயங்கித்தான் போனான்.அவன் நினைத்தால், அந்தப் பெண் யாரென்று தெரிந்து, அவளது வீட்டிற்கே சென்று பெண்ணைக் கொடுங்கள் என்று கேட்க முடியும். ஆனால் பெண்ணும் தன்னைக் காதலிக்கிறாள் என்பதை அறியாமல்,அவ்வாறு செய்வதற்கு அவன் விரும்பவில்லை.
இன்றாவது வரமாட்டாளா ? எனும் ஏக்கத்தோடு படித்துறை பக்கம் சென்றான் நன்னான். அன்று ஏனோ கூட்டம் அதிகமில்லை. அவனை அந்த அழகி அன்று ஏமாற்றவில்லை. வந்தவள் எதிரே வந்த மன்னவனைக் கண்டதும், சற்று ஒதுங்கி நின்றாள். அருகில் வந்த நன்னன், குதிரையிலிருந்து கீழே குதித்தான்.
‘பெண்ணே ! ஏன் கடந்த சில நாட்களாக இந்தப் பக்கம் காணவில்லை? ‘
மன்னன் தன்னை ஏன் தேடவேண்டும் என்று எண்ணிய போது, அவளது உள்ளத்தில் ஒருவித கலக்கம் ஏற்பட்டது. ஏதாவது வேறு மாதிரியான எண்ணத்தில் மன்னன் இருப்பானோ ? என்று எண்ணியபோது, அவளது இதயத்துடிப்பு இன்னும் அதிகமாயிற்று. அவளால் பேச இயலவில்லை. அவள் பேசாமல் நிற்பதைக் கண்ட மன்னன்,
‘என்ன பதிலைக் காணோம் ‘ என்றான்.
‘மன்னிக்கணும் மன்னவா ! எனக்கு என் அத்தை மகனோட திருமணம் நிச்சியமாகி உள்ளது.அதற்காக உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அதனால் வெளியே எங்கும் வர இயலவில்லை. இன்னும் பத்து நாட்களில் திருமணமும் நடக்கவிருக்கிறது’ என்று அவள் சொன்னதைக் கேட்ட, நன்னனின் மனதில் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. தனது காதலை முன்பே சொல்லாமல் விட்டது, இப்படி ஒரு நிலைக்குத் தள்ளி விட்டதே?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.தன் மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்ட மன்னன்,
‘பெண்ணே ! தப்பாக நினைக்காதே ..நான் என் உள்ளத்தை உன் அழகில் பறி கொடுத்து விட்டேன்.உன்னையே என் பட்டத்தரசியாக என் மனமென்னும் அரியாசனத்தில் வீற்றிருக்கச் செய்து விட்டேன். இனி உன்னை மறப்பது எப்படி ? நீ சரி என்று சொல் இப்போது உனது தந்தையிடம் வந்து பெண் கேட்கிறேன் ‘ என்றவனின் குரல் தழுதழுத்தது. தன்னையே தான் இழந்து கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
‘மன்னிக்கணும் மன்னவா ! நானும் என் அத்தை மகனும் ஏற்கெனவே ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். அந்த விருப்பத்தைதான் எங்கள் பெற்றோர்கள் நிறைவேற்றி வைக்கிறார்கள்.’
‘சற்று யோசித்துப் பார். என்னை மணந்தால் இந்த நாட்டின் ராணி ஆகலாம் ‘
‘அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் எனக்கு கிடையாது மன்னவா ! ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக வாழத்தான் ஆசை ‘
‘நல்லா யோசனைப் பண்ணித்தான் பேசிறியா ?’
‘ஆமாம் மன்னவா ! காதல் ஒரு முறை தான் வரும். சொல்லி வருவதல்ல காதல். தானாக வருவதுதான் காதல். மன்னித்து விடுங்கள். உங்கள் தகுதிக்கு என்னை விட நல்ல பெண்ணே கிடைப்பாள். நான் வருகிறேன் ‘ என்று கூறியவள், மன்னனின் பதிலை எதிர்பார்க்காமல், விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள்.அவள் செல்வதையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்றவன், தனது குதிரையில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான்.
தன் நினைவலைகளில் இருந்து மீண்டவன், ‘சே ! ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே. தான் ஒரு மன்னனாக இருந்துதான் என்ன பயன் ?’ என்று என்னென்னவோ எண்ணியவாறு உலவிக் கொண்டிருந்தவனை,
‘மன்னவா ‘ என்னும் குரம் திரும்ப வைத்தது.
‘என்ன ?’ என்பது போல் கோபத்தோடு திரும்பிய மன்னவனின் கண்களில் கைகட்டி நின்றிருந்த காவலன் தென்பட்டான்.
‘மன்னா ! நமது அரசு மாந்தோப்பு மரத்தில் இருந்து , சிற்றோடையில் விழுந்த ஒரு மாங்காயை ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள் ‘ என்றான்.
ஏற்கெனவே ஏமாற்றத்தோடு இருந்த மன்னவனை, இந்தச் செய்தி கோபம் கொள்ளவே செய்தது என்றால் அது மிகை அல்ல. தான் விரும்பிய ஒன்று கிடைக்காது என்னும் போது, மனதில் கோபம் ஏற்படுவது இயற்கை அல்லவா ?
‘அப்படியா ? என்ன தைரியம் இருந்தால் இவ்வளவு காவலும், கண்டிப்பும் இருக்க மன்னனின் தோப்பு மாங்காயை எடுத்துத் தின்றிருப்பாள். அவள் யாராக இருந்தாலும் மன்னிப்புக் கிடையாது. அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்.’ என்று ஆணை இடவே, காவலன் ‘ உத்தரவு மன்னவா !’ என்று கூறிவிட்டு, அங்கிருந்து அகன்று சென்றான்.
அரச மண்டபத்தில் அமர்ந்து அரசு பணிகளைக் கவனித்து,கட்டளைகள் பிறபித்துக் கொண்டு இருந்தான் நன்னன். அப்போது காவலன் வந்து வணங்கி நின்று,
‘மன்னா தங்களைக் காண்பதற்காகப் பெரும்வணிகர் ஒருவர் வந்து காத்துக் கொண்டு இருக்கிறார்’ என்றான்.
‘பெரும் வணிகரா ? ‘ என்றவன் யாராக இருக்கும் என்று சற்று யோசித்த மன்னன் ,
‘சரி வரச்சொல் ‘ என்று உத்தரவிட்டான். காவலன் சென்ற சிறிது நேரத்தில், நடுத்தர வயதுடைய ஒருவர் வந்து வணங்கி நின்றார்.
‘வணிகரே ! தாங்களா..என்னைக் காண்பதற்காகவா வந்தீர்கள். என்ன செய்தி வணிகரே?’என்று அன்பொழுகக் கேட்டான் நன்னன்.
‘மன்னா ! மன்னிக்க வேண்டும். என்னுடைய சுயநலம் கருதி தங்களைக் காண வந்துள்ளேன் ’
‘அப்படியா ? தாங்கள் சுயநலம் என்று சொன்னாலும் அதிலும் ஒரு பொதுநலம் இருக்கலாம் அல்லவா ?சொல்லுங்கள் ‘
‘மன்னா ! தங்களால் மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் இருக்கும் பெண் என்னுடைய அன்பு மகள்,அதுவும் ஒரே மகள் மன்னவா ‘
‘அப்படியா ! மன்னிக்க வேண்டும் வணிகரே ! தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உரியவர்கள் தானே ?’
‘ஆமாம் மன்னவா ! ஆனால் என்மகள் தவறுகள் ஏதும் செய்யவில்லையே ‘
‘நன்னனின் மாந்தோப்பின் மாங்காயைத் தின்றது தவறில்லையா ?
‘அது தெரியாமல் நடந்துவிட்ட தவறு மன்னவா! மன்னிக்கக் கூடாதா ?’
‘அரசு ஆணை இருப்பதை அறிவிப்பு செய்திருந்தும் , ஒரு பெண் அவ்வாணையை மதிக்காமல் இருந்தது, அரச குற்றமில்லை என்கிறீர்களா வணிகரே ?’
‘அதற்கு ஈடாக பொன்னும் மணியும், ஏன் என்னிடம் உள்ள ஐம்பது யானைகளையும் கூட தருகின்றேன். என் மகளை விட்டு விடுங்கள் மன்னவா ‘
‘தானம் கொடுப்பவனுக்கே தானமா ? நல்ல வேடிக்கை தான் வணிகரே ‘ என்ற மன்னனின் இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்தோடியது.
‘அறியாது செய்த ஒரு சிறிய பெண்ணைத் தண்டிப்பது தர்மமல்ல மன்னவா! அதுவும் பெண் கொலை பெரும் பழி ஆகி விடும். பெண் கொலை புரிந்த நன்னன் எனும் பெரும்பழி தங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடும் மன்னா ‘
‘இல்லை வணிகரே ! தங்களின் கூற்று தவறு. அரசு ஆணையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு தண்டனை வழக்குவது தான் ஒரு மன்னனின் கடமை. ஒரு பெண் என்று பரிதாபம் காட்டி , கடமை தவறிய மன்னவன் என்னும் அவப்பெயர் எனக்கு ஏற்படாமல் நான் நடந்து கொள்ள வேண்டுமல்லவா ? மன்னித்து விடுங்கள் . இதில் நான் ஏதும் செய்வதற்கில்லை .தாங்கள் தங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு சென்று வாருங்கள்’ என்றான் நன்னன்.
நன்னனின் பிடிவாதமும், விட்டுக் கொடுக்காத மனப்பாங்கும், வணிகரின் உள்ளத்தை பெரிதும் வேதனைப் படித்தியது. தான் நினைத்ததை நடத்திடத் துடிப்பவன் நன்னன் என்பது தெரிந்திருந்தும்,
‘மன்னா ! தங்களின் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறேன்.. என்னுடைய அருமை மகளைக் காப்பாற்றுங்கள்...’ என்றவர் மன்னனின் காலில் விழுந்தார். அன்பு மகளைப் பலிகொடுக்கப் போகிறோமே எனும் வேதனை அவரது கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.
காலில் விழுந்தவரைக் கண்டு பதறிப் போன நன்னன், அவரது தோளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி,
‘’வேண்டியவர்களுக்காகக கொடுத்த தண்டனையை மாற்றிக் கொண்டவன் நன்னன் எனும் அவப்பெயருக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள் . தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். தங்களின் பாசம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் என்னால் எதுவும் செய்ய இயலாது வணிகரே! சென்று வாருங்கள் ‘ என்ற மன்னன் காவலன் ஒருவனை அழைத்து, அவரை வெளியில் பத்திரமாகக் கொண்டு விடும்படி பணித்தான்.
அவர் சென்ற சிறிது நேர்த்தில் ,தண்டனைகளை நிறைவேற்றும் பொறுப்பை உடைய தளபதி வந்து வணங்கி நின்றான்.
‘மன்னவா ! தண்டனையை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். தாங்கள் வந்தால் தண்டனையை நிறைவேற்றி விடலாம் ‘ என்று கூறினான்.
‘அப்படியா ? இதோ வருகிறேன் ‘ என்றவன், எழுந்து தளபதியுடன் நடந்தான்.
அங்கே தண்டனைக்குரிய பெண் நிறுத்தப்பட்டிருந்தாள்.கைகள் இரண்டும் கட்டப்பட்டு இருந்தன. முகம் தெரியாத படி தலையில் கருப்புத் துணி போர்த்தப்பட்டு இருந்தது.
‘மன்னா தண்டனையை நிறேவேற்றலாமா ?’ என்று கேட்டான் தளபதி.
‘மன்னனின் ஆணை என்பது தெரிந்தும்,சற்றும் பயமில்லாமல் மாங்காயைத் தின்ற ,அந்தப் பெண்ணின் முகத்தைச் சற்று காட்டுங்கள்’ என்று மன்னன் ஆணை இட, தளபதி, தலையில் போடப்பட்டிருந்த கருப்புத் துணியை , மேலே தூக்கினான்.
நிலவென ஒளிர்ந்த அந்த சுந்தர வதனம், நன்னனின் உள்ளத்தில் ஒரு மின்னலைத் தோற்றுவித்தது.அந்த ஒளியில் நடுங்கிப் போனான்.
‘இவளா? என் உள்ளத்தைக் கொள்ளையடித்த வனிதையா ? இவளுக்கா மாங்காயைத் தின்றதற்கான மரண தண்டனையை அளித்தேன்.என் காதலை அவள் நிராகரித்து இருந்தாலும், என் உள்ளமெல்லாம் நிறைந்து நிற்பவள் அவள்தானே!. ஐயோ ! பெரிய தவறல்லவா புரிந்து விட்டேன். பெண் கொலை புரிந்த பாதகன் என்னும் அவப்பெயரால் ,வரலாறு தூற்றும் படி நடந்து கொண்டேனே ‘ என்று அவன் உள்ளம் புலம்பியது.உடம்பெல்லாம் ஒரு நடுக்கம். அவனால் நிற்க முடியவில்லை.அருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டான். மீண்டும் அவனது கண்கள் அவனையும் அறியாமல், அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கின. ‘ உன்னை காதலிக்கவில்லை என்பதற்காக, என்னை பலி கொடுத்து விட்டாயா நன்னா? ‘ என்று கேட்பது போல் அவளது முகம் தெரிந்தது . தலையை தாழ்த்திக் கொண்டான்.
‘மன்னா தண்டனையை நிறைவேற்றவா ? என்ற தளபதியின் குரல் கேட்டது. ‘கொடுத்த தண்டனையை மாற்றுவது மன்னனுக்கு உகந்ததல்ல ‘ என்பதை உணர்ந்த நன்னன் ‘’ம் ம்’‘ என்று கூறிக் கொண்டே அங்கிருந்து அகன்றான்.