இந்தக் கைகள்

இந்தக் கைகள்

இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்

என்னை விட்டுப் போகாதென்று என்று
என் கையோடு உன் கைகோர்த்து நின்ற போது
வலுக்கட்டாயமாக என் கையிலிருந்து
உன் கைகளை பிரித்துதறிய கைகள்

இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்

ஒரே நாளில் தான் உலகம் இல்லையென்றான போதும்
ஒரே நொடியில் தன் நேசம்
தன் கழுத்து நெறிய கொல்லப்படும்போதும்
ஒரே தொலைபேசி அழைப்பில்
ஒரே ஒரு குறுஞ்செய்தியில் ஒருவர்
தன்னை வெட்டி எரியும் போதும்
தனக்கு நேர்வது என்னவென்றே தெரியாமல்
தனியாக அதிர்ந்து நின்ற உன்னையழைத்து
அணைத்து ஆறுதல் கூறி அன்பறிவிக்காமல் போன கைகள்

இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்

என்னை விட்டுப் போவது உனக்கல்ல
எனக்குத்தான் வன் வலியென்றும்
என்னை விட்டு என் உயிர் போவதை விட
நீ போவதே என் பலியென்றும்
வாய்திறந்து கதறியழுது கால்பிடிக்க கெஞ்சிய உன்னை
தொட்டுத் தூக்கி தோள் சேர்க்காமல் போன கைகள்

இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்

என் அன்பு புரியவில்லையா
என் நேசம் புரியவில்லையா
என் தியாகம் புரியவில்லையா
என் இழப்பு புரியவில்லையாவென்று
ஓயாமல் கேட்ட உதடுகளுக்கு
உயிரூரும் முத்தமொன்று கொடுத்து
உயிர்க்காதல் மெய்ப்பிக்க
உன் கன்னங்களை ஏந்தாமல் போன கைகள்

இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்

இத்தனை பாவத்தின் இரத்தம் படித்த
இந்த கைகளை இப்போதே வெட்டி விடலாமென்று
எத்தனையோ முறை துடித்திருக்கிறேன்
இத்தனை பாவத்தையும் நினைத்து நினைத்து
உன்னையிழந்ததால் என்னையுமிழந்து
எனக்காக யாருமற்று இன்று நான் அழும்போது
என் கன்னம் தாண்டி வழிகிற
என் கண்ணீரை எனக்காக துடைக்க
எனக்காக இருக்கும் ஒரே துணையாவதும்

இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்

எழுதியவர் : (3-May-17, 1:07 pm)
சேர்த்தது : சுஜித் தமிழன்
Tanglish : inthak kaikal
பார்வை : 36

மேலே