நான்
நான்
நாம் படிக்கும்போது பிரிந்திருந்த நாட்களில்
உனக்கு எழுதிய காதல் கவிதைகளையும்
நீ எனக்கு எழுதிய காதல் கடிதங்களையும்
நாம் மாறி மாறி பரிசளித்துக் கொண்ட
புத்தகங்களையும் பரிசுப் பொருட்களையும்
உனக்காக நான் வாங்கிய அத்தனை
பருத்திப் புடவைகளையும் கொளுத்தி விட்டேன்
நம் படுக்கையறைச் சுவர் முழுவதும் மாட்டியிருந்த
நம் மோகப் பொழுதுகளில்
நாம் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை
ஒவ்வொன்றாக அடித்து நொறுக்கி விட்டேன்
நாம் பொன்மஞ்சள் விளக்கொளியில்
கூடியுறவுகொண்டுறங்கிய
வெள்ளை மெத்தைகளையும்
வெள்ளை மெத்தை விரிப்புகளையும்
கிழித்து எறிந்து விட்டேன்
நீ வாஞ்சையுடன் வளர்த்து வந்த
சிகப்பு ரோஜாச்செடிகளையும்
முல்லைக்கொடியையும்
அமிலம் ஊற்றி அடியோடு அழித்துவிட்டேன்
நீ அன்புடன் பேணிக்காத்து வளர்த்த
தலையில் மட்டும் சிகப்புக் கொண்டை கொண்ட
வெள்ளைக்கிளிகளை
பக்கத்துக்கு வீட்டுப் பூனைகளுக்குத்
தின்னக் கொடுத்துவிட்டேன்
நாம் மாறி மாறி மடியில் படுத்துகொண்டு
அகமகிழ்வுக் கதைகள் பேசிய
மர ஊஞ்சலையும் மரச் சாய்விருக்கைகளையும்
விறகாக ஒடித்து விலைக்கு விற்றுவிட்டேன்
நீ உன் கனவு வீடெனவும்
உன் சொர்க்கமெனவும் கருதிய
நல்லன்பும் நல்லறமும் கூடிய
நாம் குடியிருந்த வீட்டை
நாமே மனம் மாறி வந்தாலும்
நம்மால் கூட உள்நுழைய முடியாத மாதிரி
நன்றாக அடைத்து சுவரெழுப்பி விட்டேன்
எனக்கு எல்லாமுமாயிருந்த
உன்னைக் கொன்று விட்டும்
உனக்கு எல்லாமுமாயிருந்த
என்னை இன்னொருத்திக்கு
திருமணம் செய்து வைத்து விட்டும்
தனியாக நிற்கிறேன்
நான்